Published:Updated:

`நோட்டீஸ் கொடுத்த மறுநாளே..!’- ஒ.என்.ஜி.சி குழாய் பணியால் கலங்கும் தஞ்சை இயற்கை விவசாயி

ஒ.என்.ஜி.சி நிறுவனம், எரிவாயுக் குழாய் பதிப்பதற்காகத் தனது இயற்கை விவசாயத் தோட்டத்தில் இருந்த கொய்யா, மா, தென்னை, எலுமிச்சை உள்ளிட்ட மரங்களை எல்லாம் வேரோடு அழித்துவிட்டதாகக் கண்ணீர் விட்டுக் கதறுகிறார், தஞ்சையைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.

விவசாயி ஜேசுவின் தோட்டம்
விவசாயி ஜேசுவின் தோட்டம்

தஞ்சாவூர் அருகே உள்ள குருங்குளம் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர், இயற்கை விவசாயி ஜேசு. இவர், 6 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார்.

இயற்கை விவசாய தோட்டம்- அழிக்கப்படும் மரங்கள்
இயற்கை விவசாய தோட்டம்- அழிக்கப்படும் மரங்கள்

இந்நிலையில், இவரது தோட்டத்தின் வழியாக எரிவாயுக் குழாய் பதிக்க, ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் தீவிரம் காட்டிவருவதாகவும், தான் மிகவும் பாடுபட்டு வளர்த்த கொய்யா, மா, தென்னை, எலுமிச்சை மரங்களைத் தன் கண் எதிரிலேயே ஒ.என்.ஜி.சி பணியாளர்கள் வேரோடு பிடுங்கி எறிந்ததாகவும் கண்ணீர் மல்க கூறினார்.

``நான் ராணுவத்துல பணியாற்றி ஓய்வுபெற்றவன். எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஈடுபாடு அதிகம். பணி ஓய்வுக்குப் பிறகு இயற்கை விவசாயம் செய்யணும்னு ஆசைப்பட்டு, 6 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். எனக்கு, விவசாயத்துக்கான மின்சார இணைப்பு கிடைக்கலை. வணிகப் பயன்பாட்டுக்கான மின்சாரத்தைப் பயன்படுத்திதான் போர்வெல்ல இருந்து தண்ணீர் எடுத்து பாசனம் செய்றேன். இதனால் சில மணிநேரம் தண்ணீர் பாய்ச்சினாலே பல ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கு. இதுமாதிரி இன்னும் பல கஷ்டங்களுக்கு இடையிலதான், கடுமையா உழைச்சு, கொய்யா, மா, எலுமிச்சை, தென்னை மரங்களை வளர்த்தேன்.

விவசாயி ஜேசு
விவசாயி ஜேசு

ஒ.என்.ஜி.சி அதிகாரிகள், கடந்த 7-ம் தேதி திடீர்னு வந்து, என்னோட தோட்டத்துல எரிவாயுக் குழாய் பதிக்கப்போறதா சொல்லி நோட்டீஸ் கொடுத்தாங்க. நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை. அடுத்த நாளே என்னோட தோட்டத்துல இருந்த கொய்யா, மா, தென்னை, எலுமிச்சை மரங்களை எல்லாம் என் கண் எதிரிலேயே வேரோடு பிடுங்கிப் போட்டுட்டாங்க. நான் எவ்வளவோ தடுத்துப்பார்த்தேன் . அவங்க காதுல வாங்கவே இல்லை. எனக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுத்தாலும் அது எனக்கு வேண்டியதில்லை. ரசாயன உரம் போட்டாலே மண்ணு நஞ்சாயிடும்னு கவலைப்படுற ஆளு நான். இதனாலதானே நான் இயற்கை விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். எனக்கா இந்த நிலைமை. கசிவு ஏற்பட்டால், ஒட்டுமொத்த நிலமும் நஞ்சாயிடும். இவ்வளவு நாளா நான் கட்டிக் காப்பாத்தின, என்னோட இயற்கை விவசாயத் தோட்டத்துல எரிவாயு-கச்சா எண்ணெய்க் குழாய் பதிக்கப்போறாங்கங்கிறதை நினைச்சா, என் நெஞ்சு பதறுது” என மனம் உடைந்து கதறுகிறார், ஜேசு.