Published:Updated:

சத்தீஸ்கரில் வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்! பசுமை விகடனைப் பாராட்டும் அரசுச் செயலர்!

சத்தீஸ்கர் விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
சத்தீஸ்கர் விவசாயம்

பயணம்

சத்தீஸ்கரில் வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்! பசுமை விகடனைப் பாராட்டும் அரசுச் செயலர்!

பயணம்

Published:Updated:
சத்தீஸ்கர் விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
சத்தீஸ்கர் விவசாயம்

இயற்கை விவசாயத்தை வேகமாக முன்னெடுக்கும் மாநிலங்களில் ஒன்றாகச் சத்தீஸ்கர் திகழ்கிறது. இம்மாநில அரசு இயற்கை விவசாயத்துக்கு அதிக முக்கியத் துவம் கொடுத்து வருகிறது. பாரம்பர்ய நெல் ரகங்களைப் பரவலாக்குதல், நாட்டு மாடுகள் வளர்ப்பை ஊக்கப்படுத்துதல் போன்ற வற்றிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு முன்னத்தி ஏராகத் திகழ்கிறார் சத்தீஸ்கர் மாநிலத்தின் சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் சிறப்புச் செயலாளரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான டாக்டர் பிரசன்னா ஐ.ஏ.எஸ். இம்மாநிலத்தில் உள்ள நாப்தாரி மாவட்டத்தின் ஆட்சியராக இவர் பதவி வகித்தபோதுதான் இங்கு இயற்கை வேளாண் வளர்ச்சித் திட்டங்களுக்கான விதை ஊன்றப்பட்டது.

சித்தர் மற்றும் பிரசன்னா
சித்தர் மற்றும் பிரசன்னா

தமிழ்நாட்டிலிருந்து இயற்கை விவசாய வல்லுநர்களை, சத்தீஸ்கருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். நாப்தாரி மாவட் டத்தில் ஏராளமான விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றினார். அது குறித்து 10.6.2019 மற்றும் 25.6.2019 தேதியிட்ட பசுமை விகடன் இதழ்களில் ‘பசுமை காட்டிய பாதை - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட் டிருந்தோம். நாப்தாரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களை அதில் பதிவு செய்திருந்தோம். அண்மையில், தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயியும், இயற்கை மருத்துவருமான சித்தர், சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்று, 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பி வந்திருக்கிறார்.

சத்தீஸ்கர் பயணத்தில்
சத்தீஸ்கர் பயணத்தில்

அங்கு தனக்கு ஏற்பட்ட ஆச்சர்ய அனுபவங்களை இங்கு அவர் பகிர்ந்து கொள்கிறார். ‘‘சத்தீஸ்கர் மாநிலத்துல செயல் படுத்தப்படும் இயற்கை விவசாயம், இயற்கை அங்காடிகள், இயற்கை மருத்துவம்... இது மாதிரியான இன்னும் சில முக்கியமான விஷயங்களைத் தெரிஞ்சிக்குறதுக்காகவும், தமிழ்நாட்டுக்கும், சத்தீஸ்கருக்கும் பரஸ்பரம் நன்மை அளிக்கக்கூடிய கருத்துக்களைப் பகிர்ந்துகிறதுக்காகவும், அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சிறப்புச் செயலாளர் டாக்டர் பிரசன்னா என்னை அழைச்சிருந்தார். நானும் என்னோட மகன் அரவிந்தரும், அங்க போயிருந்தோம். அந்த மாநில அரசாங்கம், இயற்கை விவசாயத்து மேல மட்டுமல்ல, கால்நடைகள் வளர்ப்பு, வனவிலங்குகள் பாதுகாப்புலயும் தனித்துவமான அக்கறை காட்டுறாங்க.

சத்தீஸ்கரில்
சத்தீஸ்கரில்

சத்தீஸ்கர் தலைநகரான ராய்ப்பூருல இருந்து சில கிலோமீட்டர் தொலைவுல உள்ள நந்தன்வன் வனவிலங் குகள் சரணாலயத்துல நான் பார்த்த காட்சி என்னை ஆச்சர்யப்பட வச்சது. மிகவும் அரிதாகிவரக்கூடிய வெள்ளைப் புலி, கழுதைப்புலிகூட அங்க இருக்கு. அங்க வனவிலங்குகளைக் கூண்டுல அடைக்கலை. அதைப் பார்வையிடக்கூடிய மக்களைத்தான் கூண்டு மாதிரியான வாகனங் களில் அடைச்சு பாதுகாப்பா அழைச்சிட்டு போறாங்க. நம்ம பக்கத்துலயே அந்த விலங்குகள் நடந்து போகுது. சுதந்திரமா அதுங்க நடமாடுது. ஆனால், பார்வையாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுறதில்லை. உயிர்ச்சூழல் பன்மயத்தை மேம்படுத்துறதுக்கான சிறப்பு நடவடிக்கைகள்லயும் சத்தீஸ்கர் அரசாங்கம் ஆர்வம் காட்டுது.

சத்தீஸ்கரில்
சத்தீஸ்கரில்

அங்கவுள்ள ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள் உட்பட எல்லாருமே இதுல மிகுந்த அக்கறையோடு சிறப்பா செயல்படுறாங்க. டாக்டர் ஆர்.ஹெச். ரிச்சார்யா ஆய்வு மையத்துல உள்ள பல்லூயிர் பெருக்க அருங்காட்சியகத்துல, 23,400 வகையான பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாத்துக்கிட்டு வர்றாங்க. அங்கவுள்ள விவசாயிகள் எந்த நெல் ரகங்களை விரும்பினாலும், அதை வாங்கி சாகுபடி செய்ய முடியும். தமிழ்நாட்டுல உள்ள வாசனை சீரகச் சம்பா மாதிரி, சத்தீஸ்கர்ல துப்ராஜ் உட்பட வாசனை நெல் ரகங்கள் 27 இருக்கு. இந்த நெல் ரகங்கள் எல்லாமே அங்கவுள்ள விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டுக்கிட்டு இருக்கு. சத்தீஸ்கரின் பாரம்பர்ய நெல் ரகங்கள்ல உள்ள மருத்துவக் குணங்களை, அந்த மாநில அரசு மருத்துவ ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தி, ஆவணப்படுத்திக்கிட்டே இருக்கு.

உதாரணத்துக்குச் சொல்லணும்னா, அங்க சாகுபடி செய்யக்கூடிய பாரம்பர்ய நெல் ரகத்துல ஒண்ணு மகராஜி. இந்த ரகத்துல கிடைக்கிற அரிசியை சமைச்சி சாப்பிட்டா மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கல்லீரல், இதய வீக்கங்கள் குணமாகும்ங்கிறதை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி ஆவணப்படுத்தியிருக்காங்க. ஆனா, தமிழ்நாட்டுல அந்த மாதிரியான நடவடிக்கைகள் எதுவும் இதுவரைக்கும் மேற்கொள்ளப்படவே இல்லை. மாப்பிள்ளைச் சம்பா, அந்த நோய்க்கு மருந்து, பூங்கார் சாப்பிட்டா, இந்த நோய்க்கு மருந்துனு, இயற்கை விவசாயிகள் வாய் மொழியாக மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்கோம். அரசாங்கமே மருத்துவரீதியாக ஆய்வுபடுத்தி, ஆவணப்படுத்தினால்தான், மக்களுக்கு இதுல முழுமையான நம்பிக்கை வரும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இந்த நெல் ரகங்களைப் பாதுகாத்துக்கொண்டு போகவும் உறுதுணையா இருக்கும். சத்தீஸ் கரின் பாரம்பர்ய நெல் ரகங்கள், விதைகளைப் பாதுகாக்கவும் பரவலாக்கவும் அங்க ஏராள மான உழவர் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கு.

சத்தீஸ்கர் பயணத்தில்
சத்தீஸ்கர் பயணத்தில்

அங்கவுள்ள இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருள்களை எளிதாக விற்பனை செய்றதுக்கான சந்தை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுருக்கு. அதுக்கான அங்காடிகள், மையங்கள் செயல் பட்டுக்கிட்டு இருக்கு. இயற்கை விவசாய விளைபொருள்களையும், காடுகள்ல விளை யக்கூடிய பொருள்களையும் விற்பனை செய்றதுக்கான உழவர் சந்தைகளை, வேளாண் அறிவியல் நிலையம் மூலம் ஏற்படுத்தியிருக்காங்க. டாக்டர் பிரசன்னா வோட முன் முயற்சிகள் அதுக்கு முக்கியக் காரணம்.

சத்தீஸ்கர்ல பல்வேறு மாவட்டங்கள்ல அவர் ஆட்சித் தலைவராகப் பணிபுரிஞ்சிருக்கார். அந்தந்தப் பகுதிகளோட பாரம்பர்ய நெல் ரகங்களை விவசாயிகள் கிட்ட கொடுத்து சாகுபடி செய்ய வச்சு, பரவலாக்கியிருக்கார். பாரம்பர்ய வேளாண் மையை வளர்த்தெடுக்க, அவர், ஒரு அதிகாரியாக இருந்து செயல் திட்டங்களை வகுக்குறது மட்டுமல்லாம, விவசாயிகளை ஊக்கப் படுத்துறதையும் செஞ்சிட்டு வர்றார். ராய்ப்பூர்ல இருந்து பல கிலோமீட்டர் தொலைவுல, சொந்தமா 2 ஏக்கர் நிலம் வாங்கி, இயற்கை விவசாயத்துல, காய்கறிகள், பல வகையான கீரைகள் எல்லாம் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கார். அவரோட மனைவியும் அதுல ஈடுபாட்டோடு இருக்காங்க. நான், டாக்டர் பிரசன்னாகிட்ட பேசிக்கிட்டு இருந்தப்ப, பசுமை விகடனை பத்தி ரொம்பவே நெகிழ்ச்சியோடு பேசினார். இயற்கை விவசாயத்தை விவசாயிகள்கிட்ட கொண்டு சேர்த்ததைவிடவும், இயற்கை விவசாய விளைபொருள்களோட அவசியத்தை நுகர்வோருக்கு உணர வச்சதை, மிகவும் மகத்தான பணியாகப் பார்க்குறேன்’னு பசுமை விகடன் மீதான அன்பை அவர் வெளிப்படுத்தினார்’’ எனத் தெரிவித்தார் சித்தர்.


தொடர்புக்கு, சித்தர்,

செல்போன்: 94431 39788

மூலிகைச் சாகுபடிக்கு முக்கியத்துவம்

‘‘சத்தீஸ்கர் மாநில அரசு, மூலிகைச் சாகுபடிக்கும்கூட அதிக முக்கியத்துவம் கொடுத்து, சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்திக்கிட்டு இருக்கு. மூலிகை மற்றும் மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத்துறை செயல்பட்டுக்கிட்டு இருக்கு. விவசாயிகள், தங்களோட நிலங்கள்ல சாகுபடி செய்ய, எந்த மூலிகையைக் கேட்டாலும் அங்க கொடுக்குறாங்க. அதை விளைவிச்ச பிறகு, அவங்களே கொள்முதலும் செஞ்சிக்குறாங்க. தமிழ்நாட்டு விவசாயிகளும்கூட தங்களோட மண் வாகுக்கு ஏற்ற மூலிகையை, சத்தீஸ்கர்ல இருந்து வாங்கிக்கிட்டு வந்து, அதைப் பயிர் பண்ணி, சத்தீஸ்கருக்கு அனுப்பி விற்பனை செய்றதுக்கான வாய்ப்புகள் இருக்கு’’ என்கிறார் சித்தர்.

அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்

நாட்டு மருந்துகளுக்கான மூலப்பொருள்கள்:

‘‘சத்தீஸ்கர்ல உள்ள நாம்தாரி’ங்கற ஊர்ல, நாட்டு மருந்து தயாரிக்குறதுக்கான மூலப்பொருள்களை விற்பனை செய்யக் கூடிய மொத்த விற்பனையாளர்கள் அதிகம். இந்தியாவுல மிகப் பிரபலமான பதஞ்சலி, ஹிமாலயா போன்ற நிறுவனங் களேகூட, தங்களுக்குத் தேவையான மூலப்பொருள்களை அங்கதான் வாங்குறாங்க. மிகவும் மலிவான விலை யில தரமா கிடைக்குது. மிகவும் அரிதான மூலப்பொருள்களைக்கூட அங்க வாங்கலாம்’’ எனத் தெரிவித்தார் சித்தர்.

இயற்கை மருத்துவம்

‘‘இயற்கை மருத்துவத்துக்கும் சத்தீஸ்கர் அரசு அதிக முக்கியத்தும் கொடுத்துக்கிட்டு இருக்கு. தகுதியும் ஆர்வமும் உள்ளவங்க, இங்க வந்து இயற்கை மருத்துவத்துக்கான மருத்துவமனைகளைத் தொடங்கலாம்... அதுக்கு உறுதுணையாக இருப்போம்னு அம்மாநில அரசு வரவேற்குது’’ என்கிறார் சித்தர்.

சாணத்தை வாங்கி மண்புழு உரமாக
மாற்றி கொடுக்கிறோம்!

சத்தீஸ்கரில் இருக்கும் டாக்டர் பிரசன்னா ஐ.ஏ.எஸ்ஸிடம் நாம் பேசியபோது “மாடுகள் வளர்க்கும் விவசாயிகளிடமிருந்து சாணம் கிலோவுக்கு 2 ரூபாய் வீதம் விலை கொடுத்து மகளிர் சுய உதவிக்குழு மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு ஒரு கிலோ 10 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மண்புழு உரம் வாங்கி பயன்படுத்த விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைகிறது. மரக்கன்றுகள் உற்பத்திக்கு பாலித்தீன் பைகள் பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இதற்கு மாற்றாக, சாணம், மண் இவற்றை கலந்து சுய உதவிக்குழுக்குழுக்கள் மூலம் தொட்டிகள் தயார் செய்யப்படுகின்றன. இதில் உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளை அப்படியே புதைத்துவிடலாம்.

சத்தீஸ்கர் பயணத்தில் சித்தர்
சத்தீஸ்கர் பயணத்தில் சித்தர்

சாணம், மணல் கலந்து அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மாட்டு சாணம் கிருமி நாசினி என்பதால், அகல் விளக்கில் தீபம் ஏற்றும்போது அதிலிருந்து வரும் புகை, காற்றைச் சுத்தப்படுத்துது. சிறுதானிய உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறுதானியங்களுக்கு குறைந்தபட்சம் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, வனப் பாதுகாப்பு கமிட்டி மூலம் விவசாயிகளிடமிருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளைப் பராமரிக்க கோட்டான் என்ற பெயரில் பராமரிப்பு மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தீவனம், தண்ணீர், தடுப்பூசி, மருத்துவ சிகிச்சை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்களிடம் உள்ள உபரியான வைக்கோலை தீயிட்டு எரிப்பது வழக்கமாக இருந்தது. அதனால் காற்று மாசடைந்தது. ஆனால் தற்போது, தங்களிடம் உபரியாக உள்ள வைக்கோலை கோட்டான்களுக்கு கொடையாக கொடுக்கிறார்கள் இங்கே நாங்கள் முன்னெடுக்கும் விவசாயப் பணிகளுக்குப் பசுமை விகடன் உத்வேகம் அளித்து வருகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வல்லுநர்கள் வரவழைப்பதற்கும் காரணமாக இருந்து வருகிறது. ஆரம்ப காலந்தொட்டே எங்கள் பணிகளை அங்கீகரித்து மக்களிடையே கொண்டு சேர்க்கிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism