Published:Updated:

`கஷ்டப்பட்டு விளைய வெச்ச நெல்லை விற்க லஞ்சமா?' அரசு கொள்முதல் நிலைய புலம்பல்கள்

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

"தமிழக அரசு, இதையெல்லாம் முழுமையா சரி செஞ்சாதான், விவசாயிகளும், கொள்முதல் நிலையத் தொழிலாளர்களும் நிம்மதியா வாழ முடியும்."

நெல்மணிகள் கொட்டிக்கிடக்கின்றன. விவசாயிகள் காத்துக் கிடக்கிறார்கள். காலதாமதமும் லஞ்ச ஊழலும் இவர்களைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. சாக்கு இல்லை, இடம் இல்லை, போதிய அளவு பணியாளர்கள் இல்லை எனப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு, டெல்டா விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். கட்டாய வசூலும் தலைவிரித்தாடுகிறது. நெல் கொள்முதல் நிலைய குளறுபடிகள் உடனடியாகக் களையப்பட வேண்டும். இது, அத்தனை எளிதான காரியமல்ல. தமிழக அரசு, நெல் கொள்முதலில் விரிவான நிர்வாக சீர்திருத்தம் கொண்டுவந்தால்தான் இது சாத்தியம் என்ற கோரிக்கைக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

கொள்முதல் நிலையத்தில் காத்துக்கிடக்கும் நெல்மணிகள்
கொள்முதல் நிலையத்தில் காத்துக்கிடக்கும் நெல்மணிகள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடியைச் சேர்ந்த விவசாயி பிரபாகரன், ‘’எங்க ஊர்ல ஜனவரி 26-ம் தேதி கொள்முதல் நிலையம் திறந்தாங்க. அதோடு சரி. கொள்முதல் தொடங்கப்படவே இல்லை. பல நாள்கள் பணியாளர்கள் வரவே இல்லை. கொள்முதல் தொடங்கப்படாததால, அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்லை அறுக்க முடியாமல் விவசாயிகள் தவிச்சிப்போயிட்டாங்க. கதிர்கள் முத்தி, பயிர் கீழ சாஞ்சி முளைக்க ஆரம்பிச்சிடுச்சி. எங்களோட கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, பதினைஞ்சி நாள்களுக்கும் மேல தாமதமாதான் கொள்முதலை ஆரம்பிச்சாங்க. இதனால் ஏகப்பட்ட பாதிப்புகள். விவசாயிகள் கூட்டம் அலைமோதுது. அறுவடை செஞ்ச நெல்லோடு விவசாயிகள் காத்திருக்க வேண்டியதாயிருக்கு, 15 நாள்களுக்கு முன்னாடியே கொள்முதலை ஆரம்பிச்சிருந்தா, நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம்" என்றார்.

இதுபோல், பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். போதிய அளவு பணியாளர்கள் இல்லாததே இப்பிரச்னைக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

விவசாயி பிராபகரன்
விவசாயி பிராபகரன்

''பல மணிநேர காத்திருப்போடு மட்டுமல்லாமல், பல ஆயிரம் ரூபாய் லஞ்சமும் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த முறைகேட்டில், கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. உயரதிகாரிகளே மாஃபியாக்கள்போல் செயல்படுவதால், இவற்றைத் தடுக்க, தமிழக அரசின் லஞ்ச ஊழல் கண்காணிப்பு காவல்துறை அல்லது மத்திய அரசின் குற்றப் புலனாய்வு பிரிவான சிபிஐ தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும்'' என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்துகிறார்கள். தங்களது கோரிக்கையைச் செயல்பட வைப்பதற்கான தீவிர நடடிக்கைகளிலும் இவர்கள் இறங்கியுள்ளார்கள்.

இதுகுறித்து பெரும் கொந்தளிப்போடு பேசிய இச்சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ‘’நெல் கொள்முதலுக்கு, விவசாயிகள்கிட்ட பணம் வாங்கச் சொல்லி, தங்களோட உயரதிகாரிகள், தங்களைக் கட்டாயப்படுத்துறதாகவும், இது தடுக்கப்படணும்னு தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் சங்கத்தினர் நோட்டீஸ் அச்சடிச்சி, கண்டனக் கூட்டமே நடத்தியிருக்காங்க. பல ஆண்டுகளா இந்த அநியாயம் நடந்துக்கிட்டு இருக்கு. ஒரு குவிண்டாலுக்கு 100 ரூபாய் லஞ்சம் வாங்குறாங்க. ஒரு குவிண்டால் நெல் கொள்முதலுக்கு 5 கிலோ வரைக்கும் கூடுதலா எடை வச்சி நெல் எடுக்குறாங்க. இந்த வகையில் கணக்குப்பார்த்தால், ஒரு குவிண்டாலுக்கு விவசாயிக்கிட்ட இருந்து 200 ரூபாய் சுரண்டப்படுது. இந்த ஆண்டு 25 லட்சம் டன் நெல் கொள்முதல் இலக்கு. விவசாயிகளோட பல கோடி ரூபாய் லஞ்சமா சுரண்டப்படுது. இது, மிகப்பெரும் அநியாயம்.

நெல் மூட்டைகள்
நெல் மூட்டைகள்

சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக முத்தரப்புக் கூட்டம் நடந்துச்சு. உணவுத்துறை முதன்மைச் செயலாளர், அமைச்சர், மூன்று மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர், முதுநிலை மண்டல மேலாளர்கள் கலந்துக்கிட்டாங்க. எங்களோட ஆதங்கத்தை அழுத்தமா பதிவு செஞ்சோம். இதில் நடக்கக்கூடிய முறைகேடுகள் கண்டிப்பாகத் தடுக்கப்படும்னு உணவு அமைச்சர் காமராஜ் உள்ளிட்டவங்க உத்தரவாதம் அளிச்சாங்க. ஆனாலும் பலன் இல்லை. தமிழக அரசின் லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர், குற்றங்களைத் தடுக்க, பத்திரப்பதிவு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்ல எல்லாம் அடிக்கடி திடீர் சோதனை நடத்துறாங்க. ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வர்றதில்லை. அவங்களோட கைகள் கட்டப்பட்டிருக்கோன்னு எங்களுக்கு சந்தேகமா இருக்கு. இதுல நடக்கக்கூடிய லஞ்ச ஊழலைத் தடுக்க சிபிஐ நடவடிக்கையில் இறங்கணும்னு வலியுறுத்திக்கிட்டு இருக்கோம். இது தொடர்பா நீதிமன்றத்துலயும் வழக்கு தொடர்வோம்” என்றார்.

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நாம் நேரில் சென்று விசாரித்தபோது, விவசாயிகள் புலம்பித் தீர்த்தார்கள். ‘’முன்னாடி, எங்களோட நெல்லுக்கான பணம் நேரடியா எங்க கையில பட்டுவாடா செய்யும் முறை இருந்துச்சு. கொள்முதல் நிலையப் பணியாளர்கள், தங்களுக்குத் தேவையான லஞ்சப் பணத்தைப் பிடிச்சிக்கிட்டு கொடுப்பாங்க. அதைத் தடுக்கத்தான், மின்னணு பரிமாற்ற முறையில் எங்களோட வங்கிக் கணக்குல வரவு வைக்குற முறை அறிமுகமாச்சு. இனிமே தொந்தரவு இருக்காதுனு விவசாயிகள் சந்தோஷப்பட்டோம். ஆனா இப்ப, பணத்தை வாங்கிக்கிட்டுதான் கொள்முதலே செய்றாங்க. பணம் தர முடியாதுனு சொன்னா, எங்க நெல்லுல அது சரியில்லை, இது சரியில்லைனு வேணும்னே குறை சொல்லி, திருப்பி அனுப்பிடுவாங்க. அதுக்கு பயந்துக்கிட்டுதான் லஞ்சம் கொடுக்க வேண்டியதாயிருக்கு. நாங்க கஷ்டப்பட்டு உழைச்சி, உற்பத்தி செய்ற நெல்லு. ஆயிரக்கணக்குல லஞ்சம் கொடுத்துதான், விற்பனை செய்யவேண்டியதா இருக்கு. இது, எவ்வளவு பெரிய கொடுமை“ என்று ஆதங்கப்படுகிறார்கள்.

நெல் கொள் மூட்டைகள்
நெல் கொள் மூட்டைகள்

விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் பேசியபோது, ‘இந்த முறை தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லை. சிலர் வேணும்னே திட்டமிட்டு, திசை திருப்பி, கெட்ட பேரு ஏற்படுத்துறங்க. விவசாயிகள்ட்ட கட்டாய வசூல் செய்றது, ஈனத்தனமான செயல்னு முத்தரப்பு கூட்டத்துல நான் கடுமையாப் பேசியிருக்கேன். முறைகேடுகளைத் தடுக்க, 14 ஆய்வுக்குழுக்கள் அமைச்சி, திடீர் சோதனைகள் நடத்திக்கிட்டு இருக்கோம். மூன்று மாவட்ட ஆட்சியர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக மண்ட மேலாளர்களும் இதுல தீவிர முனைப்பு காட்டிக்கிட்டு இருக்காங்க. தடுப்பு நடவடிக்கைகளால் முறைகேடுகள் கட்டுப்படுத்தப்பட்டுருக்கு” என்றார்.

முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 70-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள்.

தொழிலாளர்கள் தரப்பு என்னதான் சொல்கிறது? தமிழ்நாடு நுகப்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சந்திரகுமாரிடம் நாம் பேசியபோது, ‘’முறைகேடுகளுக்குத் தூண்டுதலாக உள்ள அதிகாரிகள்மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுறதில்லை. சாதாரண தொழிலாளர்கள்தான் பலிகடா ஆக்கப்படுறாங்க. கொள்முதல் நிலையப் பணியாளர்களை நேர்மையா, சுதந்திரமா செயல்பட அதிகாரிகள் அனுமதிக்கிறதில்லை. குறைவான ஊதியத்துல வேலைபார்க்கிற தொழிலாளர்களை மிரட்டி, சுரண்டி அதிகாரிகள் ஆதாயம் அடையுறாங்க. அவங்க கேட்ட பணத்தைக் கொடுக்கலைனா, எடை இழப்பு, ஈரப்பதம்னு ஏதாவது ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி, கடுமையான நடவடிக்கை எடுக்குறாங்க. விவசாயிகள்ட்ட பணம் வாங்கி, தங்களுக்குப் பங்கு கொடுக்கணும்னு அதிகாரிகள் எதிர்பார்க்குறாங்க. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, குடோனுக்கு எடுத்துக்கிட்டுப் போக, வாடகை லாரி கான்ட்ராக்டர்களுக்கு, கொள்முதல் நிலையப் பணியாளர்கள், ஒரு லோடுக்கு 3000 ரூபாய் லஞ்சம் கொடுக்கணும். மறுத்தால், பல பிரச்னைகளைச் சந்திச்சாகணும்.

சந்திரகுமார்
சந்திரகுமார்

இதுமாதிரி இன்னும் ஏராளமான நிர்வாகச் சீர்கேடுகள். தவறு செய்ற அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கணும். தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கணும். தரமான சாக்குகள் கொடுக்கணும். நெல் ஈரப்பத அனுமதி வரம்பை அதிகப்படுத்தணும். இதையெல்லாம் சரி செஞ்சாதான், தொழிலாளர்கள் தன்மானத்தோடு வாழ முடியும். நிர்வாக சீர்கேட்டால்தான், விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய பணம் அவங்களுக்கு முழுமையா போய் சேராமல் இருக்கு. தமிழக அரசு, இதையெல்லாம் முழுமையா சரி செஞ்சாதான், விவசாயிகளும் கொள்முதல் நிலைய தொழிலாளர்களும் நிம்மதியா வாழ முடியும்” என்றார்.

தமிழக அரசு உடனடியாக விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். கொள்முதல் நிலையக் கொடுமைகளுக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்க வேண்டும். இதற்கு, விரிவான நிர்வாக சீர்திருத்தம் அவசியம்.

அடுத்த கட்டுரைக்கு