Published:Updated:

தஞ்சை: `தராசு மூலம் முறைகேடு; சிக்கவைத்த விவசாயியின் எடை!’ - நெல் கொள்முதல் நிலைய அதிர்ச்சி

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

கும்பகோணத்துல ஒரு ஹோட்டலுக்கு காபி குடிக்க போயிருந்தோம். அங்கயிருந்த எலக்ட்ரானிக் தராசுல நான் யதார்த்தமா ஏறி நின்னு எடை பார்த்தேன். அதுக்கு பிறகு எங்க ஊர் நெல் கொள்முதல் நிலையம் போனேன்.

விவசாயிகளின் நலனுக்காக, அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இங்கு பணியாற்றும் ஊழியர்களும் அதிகாரிகளும் தங்களது உழைப்பை சுரண்டி பல வகைகளிலும் வஞ்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் தான் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நெல் கொள்முதல் ஊழியர்கள் செய்துள்ள நூதன முறைகேடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் பல்வேறு விதமான சீர்கேடுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் லஞ்சம் கொடுத்தால்தான் இவர்களது நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கும் கூட பல நாள்கள் இங்கேயே தங்களது நெல்லோடு காத்திருக்க வேண்டும்.

விவசாயி கரிகாலன்
விவசாயி கரிகாலன்

இதுஒருபுறமிருக்க, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெற்ற விநோத முறைகேடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கரிகாலன், ‘’இந்த கொள்முதல் நிலையத்துல ஒரு நெல் மூட்டைக்கு 30 ரூபாய் வீதம் லஞ்சம் கொடுத்தால்தான், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வாங்க. வேறு வழியில்லாததால அவங்க கேட்குற பணத்தை விவசாயிகள் கொடுத்துக்கிட்டு இருக்கோம். இதுலயே கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தினமும் பல ஆயிரம் ரூபாய் கூடுதல் வருமானம் கிடைச்சிக்கிட்டு இருக்கு. இது போதாதுனு, எங்களுக்கு தெரியாத வகையில் நூதன முறைகேடு செஞ்சிருக்காங்க.

விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதல்; உடனடிப் பணம்!
-அரசின் காய்கறித் திட்டத்தால் அசத்தும் கோத்தகிரி

அதை இப்பதான் கண்டுபிடிச்சோம். நானும் என்னோட மாமாவும் கும்பகோணத்துல ஒரு ஹோட்டலுக்கு காபி குடிக்க போயிருந்தோம். அங்கயிருந்த எலக்ட்ரானிக் தராசுல நான் யதார்த்தமா ஏறி நின்னு எடை பார்த்தேன். 67 கிலோ எடை காட்டுச்சு. அதுக்கு பிறகு எங்க ஊர் நெல் கொள்முதல் நிலையத்துக்கு எங்களோடு நெல்லை கொண்டு போயி போட்டேன். வேலை முடிஞ்சதும் அங்க இருந்து எலக்ட்ரானிக் தராசு ஏறி நின்னு பார்த்தேன். 65 கிலோதான் எடை காட்டுச்சு. கும்பகோணம் ஹோட்டல்ல இருந்த தராசுக்கும் இங்கவுள்ள தராசுக்கும் இரண்டு கிலோ வித்தியாசமா இருக்கேனு குழம்பிப்போயிட்டேன்.

விவசாயி சுவாமிநாதன்
விவசாயி சுவாமிநாதன்

இதை பத்தி ஊழியர்கள்ட்ட சொன்னேன். இங்கவுள்ள தராசு சரியாகதான் இருக்குனு சொன்னாங்க. வேறொரு எலக்ட்ரானிக் தராசை இங்கயே கொண்டு வந்து ஊழியர்கள், ஊர்க்காரங்க முன்னாடி ஏறி நின்னு பார்த்தேன். 67 கிலோ காட்டுனுச்சி. கொள்முதல் நிலைய எல்ட்ரானிக் தராசுல, இரண்டு கிலோ எடை குறைவாக காட்டுற மாதிரி தொழில் நுட்பத்துல மாற்றம் பண்ணி வச்சிருக்காங்கறதுதான் உறுதியாச்சு. உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவிச்சோம்” என்றார்.

KisanRail:`தமிழகத்தில் எப்போது விவசாயி ரயில் சேவை?’ - வலுக்கும் கோரிக்கை

அதற்குமேல் என்ன நடந்தது என விவரித்தார் இதே ஊரைச் சேர்ந்த விவசாயி சுவாமிநாதன், ``கொள்முதல் நிலைய ஊழியர்களால் இதுக்கு மேலயும் சமாளிக்க முடியாததால, மேலதிரிகாரிகள் வர்றதுக்குள்ளார தராசை இங்கயிருந்து வேற எங்கயோ எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள், இது தொடர்பாக ஊழியர்களை கண்டிச்சதோடு, விவசாயிகள்ட்ட சமாதானம் பேசினாங்க. முறைகேட்டை கண்டுபிடிச்ச அன்னைக்கு மட்டுமே மொத்தம் 600 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கு. ஒரு மூட்டைக்கு 2 கிலோ நெல் வீதம் கணக்கு பண்ணி, அதுக்குரிய பணத்தை அந்தந்த விவசாயிகள் கையில் கொடுத்துடுறோம்னு சொன்னாங்க. ஆனால் நாங்க மறுத்துட்டோம். எங்களோட வங்கிக்கணக்குல ஏத்தினால்தான் முறைகேடு நடந்ததுக்கு இது ஆதாரமாக இருக்கும்னு சொல்லிட்டோம். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படனும். இதுமாதிரி இதுக்கு முன்னாடி எத்தனை நாள்கள் எலக்ட்ரானிக் தராசுல முறைகேடு செஞ்சி எங்களை ஏமாத்தினாங்களோ தெரியலை" என ஆதங்கப்பட்டார்.

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

இக்குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிற்றரசுவிடம் விளக்கம் கேட்டபோது, ‘``விவசாயிகள் குற்றம் சாட்டக்கூடிய நாள்ல கொள்முதல் செய்யப்பட்ட எல்லா நெல் மூட்டையையும், வேற தராசு எடை போட்டு பார்க்க சொல்லியிருக்கேன். முறைகேடு செய்யப்பட்டதாக சொல்லப்படும் தராசையும் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய சொல்லியிருக்கேன். தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு