Published:Updated:

பாசனம் குறைவு... களைக்கட்டுப்பாடு... எலித்தொல்லைக்குத் தீர்வு!

பானி பைப்
பிரீமியம் ஸ்டோரி
பானி பைப்

பலன்கள் பலவற்றைக் கொடுக்கும் பானி பைப் !

பாசனம் குறைவு... களைக்கட்டுப்பாடு... எலித்தொல்லைக்குத் தீர்வு!

பலன்கள் பலவற்றைக் கொடுக்கும் பானி பைப் !

Published:Updated:
பானி பைப்
பிரீமியம் ஸ்டோரி
பானி பைப்

மிழகத்தில் பல்லாயிரக்கணக்கான நஞ்சை ஏக்கர் நிலங்கள் புஞ்சை நிலங்களாகி வருகின்றன. தரிசு நிலங்களின் பரப்பளவு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியக் காரணம் தண்ணீர். ஒரு காலத்தில் நெல் விளைந்த நிலங்கள் நீர்ப் பற்றாக்குறை காரணமாக மானாவாரி பயிர்கள் விளைய வைக்கும் நிலமாக மாறிவிட்டன.

காலால் மடை திறந்த காலத்தில், ‘வரப்பு உயர நீர் உயரும்... நீர் உயர நெல் உயரும்’ என்ற கருத்து நிலவியது. ஆனால், பற்றாக்குறை நிலவும் காலத்தில் வரப்பு உயரத்துக்கு நீர் பாய்ச்சுவதற்கு வாய்ப்பில்லையே என்ற கவலையில் நெல் விவசாயத்தை விட்டு, மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். இந்நிலையில், ‘நெல் சாகுபடிக்கு வரப்பு உயர நீர் தேவையில்லை. பயிர் உயிர் வாழத் தேவையான ஈரப்பதம் மண்ணிலிருந்தால் போதும்... நெல் சாகுபடியில் வழக்கமான மகசூல் எடுக்க முடியும்’ என்கிறார்கள் திருச்சியில் உள்ள தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

பரிசோதனை வயல்
பரிசோதனை வயல்

வயலில் தண்ணீர் இல்லா விட்டாலும், தரைமட்டத்துக்குக் கீழ் பயிர்களின் வேர்ப்பகுதியில் நீர் இருக்கும் வரை பாசனம் செய்யத் தேவையில்லை. ஆனால், அதை எப்படித் தெரிந்துகொள்வது? ‘பானி பைப்’ தொழில்நுட்பம்மூலம் இதைத் தெரிந்துகொள்ளலாம் என்று சொல்லும் பாசன மேலாண்மை மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள், அதற்கான சோதனையைப் புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் கிராமத்தில் செய்திருக்கிறார்கள். கடந்த இதழில் இதுகுறித்த தகவல் ‘மரத்தடி மாநாடு’ பகுதியில் இடம்பெற்றது. இந்த இதழில் ‘பானி’ பைப் பயன்படுத்திய விவசாயிகளின் அனுபவங்கள், விஞ்ஞானிகளின் ஆலோசனைகளும் இடம் பெறுகின்றன.

சோதனை வயலில் அறுவடை செய்து மகசூல் கணக்கிடும் அன்று நாமும் பரம்பூர் கிராமத்துக்குச் சென்றிருந்தோம். பரம்பூர் நீர் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் பொன்னையாவின் வயலுக்குச் சென்றார்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள். அறுவடைக்குத் தயாராக இருந்தது நெல் பயிர்.

பரிசோதனை வயல்
பரிசோதனை வயல்

வயல் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தகவல் பலகை வைக்கப் பட்டிருந்தது.

வயலில் நின்றபடியே தங்கள் சோதனை விவரங்களைப் பற்றி விளக்கமாகச் சொல்லத் தொடங்கினார் பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் பாண்டியன், ‘‘பொதுவாக, நெல் விவசாயிகள் அதிக தண்ணீர் வயலில் தேக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பயிருக்குத் தேவையான ஈரப்பதம் கிடைத்தால் போதும். சராசரி மகசூலை எடுக்கலாம், காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் செய்தாலும் போதுமான ஈரப்பதம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வது கடினம். அந்தக் கஷ்டத்தைப் போக்குவதுதான் பானி பைப் தொழில்நுட்பம். இதன் மூலமாகப் பயிருக்கு எப்போது பாசனம் தேவை என்பதைத் தெரிந்துகொண்டு பாசனம் செய்யலாம். அதன் பயனை விவசாயிகளுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்தக் கிராமத்தில் நான்கைந்து விவசாயிகளின் வயல்களில் சோதனை செய்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிடக் குறைவான தண்ணீரில் எப்போதும் கிடைக்கும் சராசரி மகசூல் கிடைத்திருக்கிறது.

அறுவடை செய்வதற்கான அடையாளம்
அறுவடை செய்வதற்கான அடையாளம்

பானி பைப் தொழில்நுட்பத்தை பல்வேறு வகைகளில் சோதனை செய்துப் பார்க்க பரம்பூர் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தோம். இங்கு 6 விவசாயிகள் வயலில், 5 ஏக்கர் நிலத்தில் சோதனை செய்தோம். ஒவ்வொரு விவசாயியின் வயலிலும் ஒரு ஏக்கர் நிலத்தை எடுத்தோம். 5 விவசாயிகள் வயலில் தலா ஒரு ஏக்கரைச் சரிபாதியாகப் பிரித்து, ஒரு பாதியில் விவசாயிகள் மேற்கொள்ளும் வழக்கமான பாசன முறையும், மறுபாதியில் பானி பைப் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினோம்.

பானி பைப் இருந்த பகுதியில் வயலில் தண்ணீர் வற்றி, தரைமட்டத்திலிருந்து 10 செ.மீ கீழே தண்ணீர் போன பிறகு, பாசனம் செய்தார்கள். இன்னொரு பகுதியில் நிலத்தைக் காயவிடாமல் பாசனம் செய்தார்கள். வழக்கமான பாசன முறையில் 12 பாசனமும், பானி பைப் பகுதியில் 7 பாசனமும் செய்தார்கள். அறுவடை முடிவில் இரண்டு பகுதியிலும் மகசூலில் எந்த வித்தியாசமும் இல்லை. இதன் மூலமாக நெல் வயலுக்குத் தேவையான போது தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்பது நிரூபணமாகியுள்ளது’’ என்றார்.

அறுவடை சோதனை
அறுவடை சோதனை

அவரைத் தொடர்ந்து பேசிய உதவி பேராசிரியர் தாகூர், ‘‘அவரைத் தொடர்ந்துப் பேசிய உதவிப் பேராசிரியர் தாகூர், ‘‘நாங்கள் சோதனை செய்ய தேர்ந்தெடுத்தது 6 விவசாய நிலங்கள். அதில் 5 நிலங்களில் இரண்டு வகை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்று வழக்கமான பாசனம், மற்றொன்று தரைமட்டத்திலிருந்து 10 செ.மீ கீழே தண்ணீர் போனபிறகு பாசனம் செய்யும் முறை. ஆனால், 6-வது நிலமான பொன்னையாவின் வயலில் மட்டும் நான்கு முறைகளில் சோதனை செய்தோம். ஒன்று, நடவு செய்த நாள் முதல் பானி பைப் பயன்படுத்தி காய்ச்சலும் பாய்ச்சலுமாக பாசனம் செய்யும் முறை. இரண்டாவது, நடவு செய்த 30 நாள்கள் வரை வழக்கமான பாசனம் செய்து, அதன் பிறகு பானி பைப் பயன்படுத்தி 15 செ.மீ ஆழத்திற்கு நீர் போனதும் பாசனம் செய்யும் முறை, மூன்றாவது, நடவு செய்ததில் இருந்து 30 நாள்கள் வரை வழக்கமான பாசனமும், அதன் பிறகு 10 செ.மீ ஆழத்திற்கு தண்ணீர் குறைந்ததும் பாசனம் செய்யும் முறை. நான்காவது, வழக்கமான பாசன முறை.

அறுவடை சோதனை
அறுவடை சோதனை

இந்த நான்கு முறைகளில் முதல் முயற்சியான நடவு செய்த நாள் முதல் காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் செய்ததில் தூர் கட்டும் வரை பயிர் எழுச்சியாக இருந்தது. கதிர் உருவாகும் நிலையில், கருக்காய் அதிகம் வந்தது. எங்கள் சோதனை முடிவில், நடவு செய்த 30 நாள் வரையும் வழக்கமான பாசனமும், அதன் பிறகு, 10 செ.மீ கீழே தண்ணீர் போனதும் பாசனம் செய்யும் முறைதான் சிறந்தது என்பதை உறுதிசெய்தோம். இந்த முறையில் 7 பாசனம் செய்தார், வழக்கமான முறையில் 12 பாசனம் செய்தார். பானி பைப் தொழில் நுட்பம்மூலம் 5 பாசனம் சேமிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மகசூல் குறையவில்லை. வழக்கமான பாசனம் நடந்த வயலிலும் கிடைத்துள்ள அதே மகசூல் கிடைத்துள்ளது’’ என்றார்.

பானி பைப்புடன் பொன்னையா
பானி பைப்புடன் பொன்னையா

பானி பைப் மூலமாக நெல் சாகுபடி செய்துள்ள விவசாயி பொன்னையா, ‘‘நான் வழக்கமா நெல்லுக்கு 12 தண்ணி பாய்ச்சுவேன். பானி பைப் மூலமா, விஞ்ஞானிகள் சொன்ன மாதிரி பாய்ச்சும்போது 7 தண்ணிதான் பாய்ச்சினேன். ஆரம்பத்துல இந்த முறையில நம்பிக்கை இல்லாமதான் இருந்தேன். ஆனா, போகப்போக நம்பிக்கை வந்துச்சு. வயல்ல தண்ணி தேங்கி நிக்காததுனால களைச் செடிகளைக் கட்டுப்படுத்த கோனோவீடர் பயன்படுத்தினேன். தண்ணி நிக்குற வயல்ல கோனோவீடர் இயக்குறதைவிட, தண்ணியில்லாத நிலத்துல சுலபமா இயக்க முடியுது. கருக்காயும் குறைஞ்சுப் போச்சு. எப்பவும் என் வயல்ல எலித்தொல்லை அதிகமா இருக்கும். இங்க அதுவும் குறைஞ்சு போனது ஆச்சர்யமா இருந்தது.

மகசூல் அளவிடும் முறை
மகசூல் அளவிடும் முறை

அறுவடை செஞ்சு மகசூல் பார்க்குற வரைக்கும், வழக்கமான மகசூலைவிடக் குறையும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, எனக்கு எப்பவும் கிடைக்குற அதே மகசூல் கிடைச்சது. இனிமே பானி பைப் பயன்படுத்திதான் சாகுபடி செய்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். என் வயலைப் பார்த்துட்டு எங்க பகுதியில இருக்க இன்னும் சில விவசாயிக அடுத்த போகத்தை இந்த முறையைப் பயன்படுத்தி தான் சாகுபடி செய்யப் போறாங்க’’ என்றார் மகிழ்ச்சியுடன்.


தொடர்புக்கு, தாகூர்,
செல்போன்: 86082 37057.

பொன்னையா,
செல்போன்: 95663 58151.

ராஜாமோகன், இளங்கோவன், பாண்டியன், தாகூர்
ராஜாமோகன், இளங்கோவன், பாண்டியன், தாகூர்

அதிக அளவு நீரைச் சேமிக்க முடியும்

பானி பைப் தொழில்நுட்பம் குறித்துப் பேசிய பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையத்தின் தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநரான ராஜாமோகன், ‘‘இந்தத் தொழில்நுட்பம் மூலமாக நெல் சாகுபடிக்குப் பயன்படுத்தும் பாசன நீரின் அளவை குறைக்க முடியும். பரம்பூர் கிராமத்தில் நடந்த வயல் பரிசோதனையில் இதை நிரூபித்திருக்கிறார்கள், எங்கள் பயிற்சி மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள். வழக்கமான முறையைவிட 5 முறை பாசனம் குறைந்திருக்கிறது. இது மிகப்பெரிய நீர் சேமிப்பு. இந்த முறையைப் பெரும்பாலான நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் முன்னெடுத்தால் அதிக அளவு நீரைச் சேமிக்க முடியும். இனி வரும் காலங்களில் அனைத்துப் பகுதி விவசாயிகளிடமும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்த்து, விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கொடுக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளோம். எங்கள் பயிற்சி நிலையத்தில் 200 பேர் அமரும் வகையில் கூட்ட அரங்கு இருக்கிறது. அதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றார்.

பானி பைப்
பானி பைப்

‘பானி பைப்’ பயன்கள்!

பானி பைப் தொழில்நுட்பம் மூலமாகக் கிடைத்த நன்மைகள் குறித்துப் பேசிய பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் பேராசிரியரும், வேளாண் இணை இயக்குநருமான முனைவர் இளங்கோவன், ‘‘பானி பைப் தொழில்நுட்பம் என்பது பெரிய தொழில்நுட்பம் அல்ல. மிகவும் எளிமையான தொழில்நுட்பம். ‘நீர் மறைய நீர்க் கட்டு’ என்ற நம் முன்னோர்கள் செய்ததைத் தற்போதைய விவசாயிகள் கடைப்பிடிக்க உதவி செய்யக்கூடிய தொழில்நுட்பம். 4 இன்ச் விட்டம், 1 அடி நீளமுள்ள ஒரு பி.வி.சி குழாய் இருந்தால் போதும். இதை விவசாயிகளே உருவாக்கிக்கொள்ள முடியும். குழாயின் கீழேயிருந்து 5 செ.மீ. உயரத்தில் சிவப்பு நிறத்தில் ஒரு கோடும், 15 செ.மீ. உயரத்தில் கறுப்பு நிறத்தில் ஒரு கோடும் போட்டுக்கொள்ள வேண்டும். வெளிப்பக்கம், உள்பக்கம் இருப்பக்கமும் கோடுகள் இருக்குமாறு போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு, கீழேயிருந்து கறுப்புக்கோடு உள்ள இடம் வரை பரவலாக துளைகள் இட்டுக்கொள்ள வேண்டும். இந்தக் குழாயைக் கறுப்புக்கோடு தரைமட்டத்தில் இருப்பதுபோல நிலத்தில் அழுத்தி வைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் மூன்று இடங்களில் இதை வைக்க வேண்டும். அதன் பிறகு, குழாய் உள்ளே கையை விட்டுக் குழாய்க்குள் இருக்கும் மண்ணை அள்ளி வெளியே போட்டு விட வேண்டும். குழாயில் உள்ள துளை வழியாக நாம் பாசனம் செய்யும் நீர் குழாயின் உள்பகுதியிலும் இருக்கும்.

வழக்கமாக வயலில் தண்ணீர் வற்றிய பிறகு, உடனடியாகப் பாசனம் செய்வோம். ஆனால், பானி பைப் பயன்படுத்தும் வயலில் அப்படிப் பாசனம் செய்யத் தேவையில்லை. நிலத்தில் மயிரிழை வெடிப்பு வரும்வரை பாசனம் செய்யத் தேவையில்லை. அதன் பிறகு, குழாய்க்குள் பார்க்க வேண்டும். கீழேயிருக்கும் சிவப்புக் கோடுவரை தண்ணீர் இருந்தால் பாசனம் தேவையில்லை. அதற்குக் கீழே செல்லும்போது பாசனம் செய்தால் போதும். இதனால் வழக்கமான பாசனத்தில் 5 முதல் 6 பாசனம் வரை சேமிக்க முடியும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாசனம் செய்வதால் கருக்காய் குறையும். எலிகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. வைக்கோலின் உலர் எடை அதிகமாக இருக்கும். தரமான வைக்கோல் கிடைக்கும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism