Published:Updated:

தமிழக வேளாண் பட்ஜெட் 2021-22 - பசுமை விகடன் எடுத்த முயற்சி... விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி!

 வேளாண் பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
வேளாண் பட்ஜெட்

சாதனை

தமிழக வேளாண் பட்ஜெட் 2021-22 - பசுமை விகடன் எடுத்த முயற்சி... விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி!

சாதனை

Published:Updated:
 வேளாண் பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
வேளாண் பட்ஜெட்

மிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கெனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகளின் வாழ்க்கையில் உடனடியாக மாற்றம் நிகழ்ந்துவிடாது என்றாலும் இது ஒரு நல்ல தொடக்கம்.

கடந்த காலங்களில் வகுக்கப்பட்ட தமிழக அரசின் பொது பட்ஜெட்களில், விவசாயம் என்பது ஒரு அங்கமாக மட்டுமே இடம்பெற்றதால், வேளாண் வளர்ச்சி மற்றும் உழவர்களுக்கு உண்மையாகப் பயனளிக்கக்கூடிய திட்டங்களில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. ஆனால், வேளாண்மைக்கெனத் தனி பட்ஜெட் உருவாக்கப்படும்போது, அதிக நிதி ஒதுக்கப்படுவதோடு, கூடுதல் கவனத்துடன் சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டைக் காட்டிலும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தனி வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பல அம்சங்கள் விவசாயிகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இதில் குறைபாடுகள், விமர்சனங்கள் இருந்தாலும்கூடப் பெரும்பாலான விவசாயிகள் இதை வரவேற்றுள்ளார்கள்.

வேளாண் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது
வேளாண் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது


இதற்காகப் பசுமை விகடன் எடுத்த முயற்சியையும் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார்கள் விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள். பசுமை விகடன் மூலமாகத் தாங்கள் முன் வைத்த பரிந்துரைகளுக்கு, பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ‘‘தமிழ்நாட்டில் வேளாண்மைக் கெனத் தனி பட்ஜெட் உருவாவதற்கே பசுமை விகடன்தான் முதன்மையான காரணம். பட்ஜெட்டில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும் எனப் பசுமை விகடன் ஏற்பாட்டில் விவசாயிகள் ஒருங்கிணைந்து, பரிந்துரைகளை முன் வைத்தோம். இவற்றைத் தமிழக முதல்வர், நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல பசுமை விகடன் தொடர் முயற்சிகளையும் மேற்கொண்டது. அதுமட்டுமல்லாமல், வேளாண் பட்ஜெட் தொடர்பாக, தமிழக அரசு விவசாயிகளிடம் விரிவான ஆலோசனைகளைப் பெற வேண்டும் எனவும் பசுமை விகடன் வலியுறுத்தியது. அரசும் அதை நடைமுறைப்படுத்தியது.’’

பசுமை விகடன் வேளாண் பட்ஜெட் பரிந்துரைகள்
பசுமை விகடன் வேளாண் பட்ஜெட் பரிந்துரைகள்



காவிரி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், ‘‘அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பசுமை விகடன் பாலமாக இருந்ததால்தான், தமிழ்நாட்டில் தனி வேளாண் பட்ஜெட் சாத்தியமாகியுள்ளது. பாரம்பர்ய நெல் ரகங்கள் குறித்தும் பசுமை விகடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால்தான், இவற்றை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.’’

சுந்தர விமல்நாதன், இளங்கீரன், ஈசன், நடராஜன்
சுந்தர விமல்நாதன், இளங்கீரன், ஈசன், நடராஜன்


தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன், “தமிழ்நாடு அரசு ‘வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என்று அறிவித்தவுடன் பசுமை விகடன் சார்பில் உழவர்கள் சங்கத் தலைவர்களை ஒருங்கிணைத்துக் கருத்துகளைக் கேட்டனர். இதில் இடம்பெற வேண்டிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, கொள்கை முடிவுகள் குறித்த கருத்துகள் சேகரிக்கப்பட்டுத் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டது.’’

பஞ்சகவ்யா சித்தர் மருத்துவர் நடராஜன், ‘‘வருடா வருடம், ‘விதை சிறப்பிதழ்’ கொண்டு வந்து, தமிழகம் முழுக்கப் பாரம்பர்ய விதைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதில், பசுமை விகடனின் பங்கு அளப்பரியது. வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் என்பதைப் பட்டிதொட்டியெங்கும் தொடர் கட்டுரைகள், காணொளிகள் மூலம் கொண்டு சென்றது பசுமை விகடன்தான். அரசு கவனத்துக்கும் பசுமை விகடன் இந்த விஷயத்தைத் தொடர்ந்து கொண்டு சென்றது.”

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், ‘‘விவசாயிகள் மற்றும் பசுமை விகடன் தொடர்ச்சியாக முன்வைத்த பல கோரிக்கைகள் வேளாண் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் மாநில அரசின் பட்ஜெட்டின்போது வேளாண்மைக்கென சிறப்புக் கவனம் எடுத்து பசுமை விகடன் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்ய வேண்டும்.’’

பசுமை விகடன் நடத்திய பட்ஜெட பரிந்துரைக் கூட்டம்
பசுமை விகடன் நடத்திய பட்ஜெட பரிந்துரைக் கூட்டம்


தேசிய தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் அமைப்பாளர் ஆறுபாதி கல்யாணம், ‘‘கடந்த 14 ஆண்டுகளில் பசுமை விகடன் பிரமிக்கத்தக்க சாதனைகளைச் செய்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராக எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாயிகளின் தோளோடு தோள் நின்று பசுமை விகடன் துணை புரிந்திருக்கிறது. விவசாயத்தின் மீது மற்ற தரப்பினருக்கு மதிப்பையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது தமிழகத்தில் வேளாண்மைக்கெனத் தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது.’’

அனந்து, அந்தோணிசாமி, அறச்சலூர் செல்வம், ஆறுபாதி கல்யாணம், அனந்து, ரமேஷ் கருப்பையா
அனந்து, அந்தோணிசாமி, அறச்சலூர் செல்வம், ஆறுபாதி கல்யாணம், அனந்து, ரமேஷ் கருப்பையா



முன்னோடி இயற்கை விவசாயி ‘புளியங்குடி’ அந்தோணிசாமி, ‘‘‘விவசாயத்துக்கெனத் தனி பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும்’ என விவசாயிகள் சொல்லி வந்தாலும் அதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று பல பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. மத்திய அரசின் முந்தைய வேளாண் பட்ஜெட்டில் சில பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. தற்போது தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் பல பரிந்துரைகளும் ஏற்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஒவ்வோர் அறிவிப்பையும் உன்னிப்பாகக் கவனித்தால், கடந்த 14 வருடங்களாகப் பசுமை விகடனில் வெளியான தொழில்நுட்பக் கட்டுரைகள், விமர்சனங்கள், கோரிக்கைகளின் சாராம்சமே இந்த பட்ஜெட் என்பது புரியும்.’’

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, “மரபு விதைகளை பாதுகாப்பதற்கும் பரவலாக்குவதற்கும் பசுமை விகடன் சார்பில் கேட்டிருந்தோம். அதன்படி பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாத்து பார்வைக்குட்படுத்தி பேணி காக்குற பொறுப்பு வேளாண்மைத் துறை உண்டு என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. உழவர் சந்தையை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டிருந்தோம். அதன்படி முதற்கட்டமாக 50 உழவர் சந்தைகளை தேர்ந்தெடுத்து ஆராய்ந்து அதற்கான உள் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதையும் வரவேற்கிறோம்.”

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, “வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள் பசுமை விகடன் பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருப்பவை. அதை அடிப்படையாகக் கொண்டு பல விஷயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மானிய கோரிக்கை விவாதத்துக்குப் பிறகே, அறிவிப்புகளுக்கு எவ்வளவு நிதி என்ற விவரங்கள் தெரிய வரும்” என்றார்.