Published:Updated:

`பொய் சொல்கிறாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?’ - கொந்தளித்த சேலம்

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M

``சக விவசாயிகளின் குறைகளை கேட்காதவர் எப்படி ஒரு விவசாயியாக இருக்க முடியும். முதல்வர் ஒரு விவசாயி என்பது பொய். தனக்குச் சாதகமான மனுக்களை மட்டுமே வாங்குகிறார்கள். பாதகமான மனுக்களை வாங்க மறுப்பது ஒரு முதல்வருக்கு அழகா?''

முதல்வர்
முதல்வர் ( எம்.விஜயகுமார் )

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முந்தினம்(ஆகஸ்ட் 20) சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி ஆகிய பகுதிகளுக்குச் சென்று சிறப்பு குறைதீர்ப்புக் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். இறுதியாக மாலையில் வாழப்பாடியில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்ப்புக் கூட்டத்திற்கு 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வருவதாக வந்த தகவலையடுத்து வாழப்பாடியில் பெரும் பதற்றம் நிலவியது.

Farmers
Farmers

வாழப்பாடியில் போலீஸார் குவிக்கப்பட்டார்கள். 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். அவர்களை முதல்வர் குறைதீர்ப்புக் கூட்டத்தில் நுழையாதபடி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் காவல்துறைக்கும், விவசாயிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு முதல்வர் அனைவருக்கும் டாடா... காட்டிச் சென்றார்.

இதுபற்றி விவசாயி பூங்கொடியிடம் கேட்டதற்கு, ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி 20 -ம் தேதி வாழப்பாடிக்குச் சிறப்பு குறைதீர்ப்புக் கூட்டத்திற்கு வருவதாகத் தெரிவித்தார்கள். அதையடுத்து 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் தங்களுடைய குறைகளை முதல்வருக்குத் தெரியப்படுத்த மனுக்களை எழுதிக் கொண்டு 36 பஞ்சாயத்துகளில் இருந்து 500 -க்கும் மேற்பட்டவர்கள் சென்றோம்.

poongkodi
poongkodi

எங்களை 15 கி.மீட்டர் முன்னதாக மின்னாம்பள்ளியிலேயே ஒரு மணி நேரம் தடுத்து நிறுத்தினார்கள். அதன் பிறகு நாங்கள் கூட்டத்திற்கு நடந்தே செல்லுவதாக முடிவு செய்தோம். அதையடுத்து எங்களை வாழப்பாடிக்குச் செல்ல அனுமதித்தார்கள். வாழப்பாடி பஸ் நிலையம் சென்றதும். காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தி,' உங்களைப் பார்ப்பதற்காக முதல்வர் பயணியர் மாளிகைக்கு வருகிறார். உங்களில் 15 பேர் மட்டும் வாருங்கள்' என்று 15 பேரை மட்டும் அழைத்துச் சென்றார்கள்.

ஆனால் முதல்வர் பயணியர் மாளிகைக்கு வரவில்லை. அதனால் நாங்கள் நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்கு வந்தோம். ஆனால் காவல்துறையினர் எங்களை ஓரமாக நிற்கச் சொல்லி முதல்வர் வரும் போது உங்களைப் சந்திப்பார் என்றார்கள். இறுதியாக ஒருவர் மட்டும் முதல்வரின் உதவியாளர் காரில் செல்லும் போது மனுக்களைப் கொடுக்கச் சொல்லி அவமானப்படுத்தி அலைக்கழித்தார்கள். காவல்துறை அரசின் ஏவல் துறையாக இருக்கிறது. இதனால் நாங்கள் உளவியலாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்தச் சம்பவம் எங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது'' என்றார்.

Kavitha
Kavitha

இராமலிங்கபுரத்தைச் சேர்ந்த கவிதா, ``முதல்வர் 8 வழி பசுமைச் சாலைக்கு 98 சதவிகித விவசாயிகள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். வெறும் 2 சதவிகித மக்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்கிறார். அப்படியிருக்கும் பட்சத்தில் ஏன் எங்களை தடுக்க வேண்டும். நாங்கள் அனைவரும் சென்று முதல்வரைச் சந்தித்தால் அவர் பேசுவது பொய் என்பது வெளியில் தெரிந்து விடும் என்பதால் எங்களைப் பார்க்கவே மறுக்கிறார்.

காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு அடக்கு முறையைக் கையாளுகிறார். வாகனம் கூட எங்களுக்கு வாடகைக்குக் கொடுக்கக் கூடாது என்று கூறி இருக்கிறார்கள். சக விவசாயிகளின் குறைகளை கேட்காதவர் எப்படி ஒரு விவசாயியாக இருக்க முடியும். முதல்வர் ஒரு விவசாயி என்பது பொய். இவர் நடத்துவது மக்களாட்சியே கிடையாது. மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உள்ளாட்சி தேர்தலையே நடத்த முடியாத அரசை நடத்திக்கொண்டிருக்கிறது. தனக்குச் சாதகமான மனுக்களை மட்டுமே வாங்குகிறார்கள். பாதகமான மனுக்களை வாங்க மறுப்பது ஒரு முதல்வருக்கு அழகா?'' என்றார்.

Narayanan
Narayanan

8 வழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட குப்பனூரைச் சேர்ந்த விவசாயி நாராயணன், ``தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய சிறப்பு குறைதீர்ப்புக் கூட்டம் அரசு நிகழ்ச்சியா? இல்லை அ.தி.மு.க நிகழ்ச்சியா? நாங்கள் அ.தி.மு.க நிகழ்ச்சி என்றால் போயிருக்க மாட்டோம். அரசு நிகழ்ச்சி என்றதால் சென்றோம். ஆனால் எங்களை போலீஸாரைக் கொண்டு மிரட்டி அலைக்கழிக்கப்பட்டு மனுக்கள் கொடுக்க முடியாமல் செய்திருக்கிறார். இதற்கு முதல்வர்தான் காரணம். அவர் சர்வதிகாரியைப் போலச் செயல்படுகிறார்.

இதனால் அவர் மீது 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். 8 வழிச் சாலை மக்களுக்கான திட்டம் என்றால் மக்களைச் சந்திக்க வேண்டியது தானே. எங்களைச் சந்திக்காமல் புறக்கணிப்பதன் நோக்கம் என்ன? இந்தத் திட்டத்தால் முதல்வருக்கு பெரிய பலன் கிடைக்கும் என்பதால் எங்களைச் சந்திக்க மறுக்கிறார். ஆனால் அவர் நினைப்பதைப் போல 8 வழிச் சாலை திட்டத்தை அவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேற்ற முடியாது. நிறைவேற்ற நினைத்தால் குறைந்தது 100 உயிர்களுக்கு மேல் பலியாகும்'' என்றார்.