Published:Updated:

நெல் விவசாயிகளின் புது வில்லன்..! - கலக்கத்தில் கண்ணங்குடி வட்டாரம் #MyVikatan

பல ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில்தான் ஓரளவுக்குப் போதிய மழை பெய்திருக்கிறது.

நெல்
நெல்

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஆண்டுதோறும் மழை பெய்யாமல் விவசாயிகளுக்கு எதிரியாய் மல்லுக்கு நிற்கும் வானம் இந்த முறை மனமிரங்கி போதுமான மழையைத் தந்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கான வில்லன் இந்தாண்டு வேறு வடிவத்தில் வந்திருக்கிறது. அப்படி வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள் சிவகங்கை மாவட்டம்- தேவகோட்டை தாலுகா- கண்ணங்குடி வட்டாரப் பகுதி விவசாயிகள்.

Representational Image
Representational Image
Pixabay

இப்பகுதியில் கப்பலூர், சடையமங்கலம், சித்தானூர், அனுமந்தக்குடி, தேவண்டதாவு, கேசனி, வடகீழ்குடி, குடிக்காடு, சிறுவாச்சி, தேரளப்பூர், சிறுகானூர் போன்ற கிராமங்களின் நூற்றுக்கணக்கிலான ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில் நெல் மட்டுமே முக்கிய விவசாயம். அதுவும் நேரடி நெல் விதைப்பாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில்தான் ஓரளவுக்குப் போதிய மழை பெய்திருக்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விவசாயப் பணிகளுக்கான கூலி மற்றும் உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருள்களின் விலையும் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது. இருந்தும் போதியமழை பெய்திருப்பதால் எப்படியும் இந்த போகம் விளைந்துவிடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் ஏராளமாய் செலவு செய்துள்ளனர்.

நெல்
நெல்

இப்பகுதியில் டீலக்ஸ் பொன்னி எனும் பிபிடி-5204 என்ற நெல் ரகம்தான் அதிகமாகப் பயிரிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு விவசாயியும் தங்க நகைகளை அடகு வைத்தும் வட்டிக்கு கடன் வாங்கியும் மிகப்பெரும் பொருட்செலவில் நெல் விவசாயம் செய்துள்ளனர்.

அப்படி செய்துள்ள நெல் விவசாயம் தற்போது பூப்பூத்து பால்பிடிக்கும் தறுவாயில் உள்ளது. நெல் மணிகள் திரண்டு வரும் இவ்வேளையில் நெல் கதிரில் பூஞ்சானம் பிடித்ததுபோல் மஞ்சள் நிறத்தில் திரண்டு உருண்டை வடிவத்தில் பழம் பழுத்ததுபோல் உள்ளது. சில நாள்களில் இந்த நெல் மணிகள் சாம்பாலாகி விடுகின்றன. இதனால் நெல் மணிகள் அனைத்தும் பதராகி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

விவசாயத்துக்காக மிகப்பெரிய செலவு செய்துள்ள விவசாயிகள் இதனால் மிகுந்த கவலையும் பதற்றமும் அடைந்துள்ளனர். இந்த நோயினால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வளவு நாள் உழைத்தும் செலவு செய்தும் கடைசி கட்டத்தில் இந்த நோய்க்கு விவசாயம் இரையாகிவிடுமோ என இப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

Representational Image
Representational Image

இந்த பூஞ்சான நோய்க்கு என்ன மருந்து தெளிப்பது? எப்படி சரி செய்வது? என்று தெரியாமல் இப்பகுதி விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே, இதற்கென்று உள்ள தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்கள், விரிவாக்கப்பணியாளர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று நெல் பயிரைத் தாக்கும் இந்த நோயை அடையாளம் கண்டு, இதைப் போக்கவும், அடுத்து வராமல் தடுக்கவும் ஆலோசனைகள் வழங்கினால் மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

வேளாண்துறை அதிகாரிகள் தங்கள் விளைநிலங்களை பார்வையிட்டு தகுந்த ஆலோசனைகள் தருவார்களா.. என்று இப்பகுதி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

தமிழக அரசின் விவசாயத்துறை அதிகாரிகள் கற்ற வேளாண் கல்வியும் அவர்களின் தகுந்த வழிகாட்டலும் இந்த விவசாயப் பெருங்குடி மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு உதவ வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

வேளாண் அதிகாரிகள்
வேளாண் அதிகாரிகள்

வயலில் பூத்து நிற்கும் ஒவ்வொரு நெல் மணிக்குள்ளும் விவசாயிகளின் ஏராளமான வியர்வையும் கண்ணீரும் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கண்ணங்குடி வட்டார வேளாண்மைத்துறை அதிகாரிகள் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் கூறி உள்ளனர். அறுவடை முடியும் வரை வேளாண் அதிகாரிகளின் தொடர் ஆலோசனைகள் கிடைத்தால் மட்டுமே, இப்போது இழந்துபோக மீதம் உள்ள நெல்மணிகளை வீடுகளுக்குக் கொண்டு செல்ல முடியும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

-பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/