Election bannerElection banner
Published:Updated:

கிசான் சம்மான் திட்ட முறைகேடு: திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு ஊரக வேலை வழங்கி வசூலிக்கத் திட்டமா?

கிசான் சம்மான்
கிசான் சம்மான்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒன்பது வட்டாரங்களில் 14,467 பேரிடமிருந்து பணம் திரும்பப்பெறப்படாமல் இருக்கிறது.

சிறு, குறு விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் என தீர்மானித்து, மூன்று தவணைகளாக ஒரு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை 2018-ம் ஆண்டு கொண்டுவந்தது மத்திய அரசு. 100% மத்திய அரசின் நிதியுடன் 01.12.2018 முதல் செயல்படத் தொடங்கியது இந்தத் திட்டம். இந்தத் திட்டத்துக்கு ஐந்து ஏக்கர் நிலமுடைய சிறு, குறு விவசாயிகள் அனைவரும் தகுதியானவர்களே என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துபவர்கள், மாதத்துக்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமாக ஓய்வூதியம் பெறுவோர், இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்க முடியாது போன்ற சில கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தப்பட்டது இந்தத் திட்டம்.

விவசாயி
விவசாயி

அதன்படி, தகுதியான விவசாயிகள் ஆண்டுக்கு 6,000 ரூபாய் பெற்றுவந்தனர். விவசாயிகளின் நன்மைக்காக கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தில், சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பாக தமிழகம் முழுக்க போலி விவசாயிகளை இணைத்து கோடிக்கணக்கில் முறைகேடு செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட மற்றும் துணைபோன அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிய வேளாண்மைத்துறை, போலியாக இந்தத் திட்டத்தில் விவசாயிகள் எனச் சேர்க்கப்பட்டவர்களைக் கணக்கெடுத்து, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட தொகையையும் பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கியது. சிலரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் இந்த முறைகேடு நடந்திருந்தாலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அதிக அளவில் முறைகேடு நடைபெற்றதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1,09,943 பேர் போலி விவசாயிகளாகச் சேர்க்கப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் 95,476 போலி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணம், உரியவருடைய வங்கிக் கணக்கு மூலமாக அரசுக்கு திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 14,467 போலி விவசாயிகளிடமிருந்து பணம் திரும்பப் பெறப்படாமல் இருப்பதாகவும், இதை வசூலிப்பதற்கு போலி விவசாயிகள் பட்டியலிலுள்ள, பணத்தைத் திருப்பிச் செலுத்தாத நபர்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் வேலை வழங்கி அதன் மூலம் அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையைப் பிடித்தம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இது தொடர்பாக முழுமையாக அறிந்துகொள்ள விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில் விசாரித்தோம். ``விழுப்புரம் மாவட்டத்தில், 1,09,943 போலி விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் போலியாக விவசாயிகள் என பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்திய தொகையைத் திரும்பப்பெறும் பணி தொடங்கியது. அதன் மூலம் 95,476 நபர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகை மீண்டும் வங்கி மூலமாகவே வாங்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்திலுள்ள ஒன்பது வட்டாரங்களில் 14,467 பேரிடமிருந்து பணம் திரும்பப்பெறப்படாமல் இருக்கிறது.

கிசான் சம்மான் திட்டத்தில் ரூ.1,364 கோடி முறைகேடு... அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ தகவல்!

அதாவது, முகையூர் - 4,757, திருவெண்ணைநல்லூர் – 4,765, செஞ்சி – 1,173, விக்கிரவாண்டி – 1,193, வல்லம் -778, மரக்காணம் – 714, ஒலக்கூர் – 355, கோளியனூர் – 247, மயிலத்தில் - 154 பேர் உட்பட மொத்தமாக 14,467 பேரிடமிருந்து இன்னும் தொகை வசூலிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதுவரை, திருப்பிச் செலுத்தாத சம்பந்தப்பட்ட நபரிடம் பலமுறை வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று பேசி, பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்படி கூறிவந்தனர். அப்போதும் செலுத்தாத சில மக்கள், `நாங்கள் வேலை இல்லாமல் கூலி வேலைக்குத்தான் போகிறோம். ஏழ்மையில் வாழ்ந்து வருகிறோம். ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (100 நாள் வேலை) மூலம் வேலை கொடுத்தீங்கன்னா, திருப்பிக் கட்டுவதற்கு வசதியாக இருக்கும்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதன்பேரில், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வேலை அளித்து, அதன் மூலமாக வர வேண்டிய தொகையை வசூலிக்கலாம் எனும் பரிந்துரை மாவட்ட ஆட்சியரிடம் கூறப்பட்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை

இன்னும் அதற்கான செயல்படுத்தும் ஆணை வரவில்லை. பின்னர், கூட்டம் நடைபெறும்போது முடிவு செய்யப்படலாம். அப்படி முடிவு செய்யப்பட்டால், ஆட்சியர் இது குறித்து அறிவிப்பார். இதுவரை பெறப்பட்டிருக்கும் பணம் அனைத்துமே வங்கிக் கணக்கு மூலமாக மட்டுமே பெறப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் தொகையும் வங்கிக் கணக்கு மூலமாகவே வசூலிக்கப்படும். ஏனெனில், இதிலும் முறைகேடு நடந்துவிடக் கூடாது என்பதற்காக” என்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்த தகவல்கள் உண்மைதான என கேட்டோம்.

"அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, கடந்த 6 மாதங்களாக முறைகேடாக பணத்தை பெற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் பணத்தை கட்டுங்கள் என அதிகாரிகள் மூலம் சொல்கிறோம். அதன்படி உரியவர்கள் வங்கி கணக்கில் செலுத்தினால் பெற்றுக்கொள்ளப்படுகிறது. ஊரக வேலை என்பது பதிவு செய்து அட்டை வைத்துள்ளவர்கள் செய்வது. இதன் மூலம் தான் பெறவேண்டும் என்று அல்ல. முறைகேடாக பணத்தை பெற்றவர்கள் அவர்கள் சொந்த பணத்தையோ, வேலைக்கு சென்றோ, கடனாக வாங்கியோ கூட செலுத்துவார்கள். அது அவர்களின் விருப்பம். அதிகாரிகள் அவரிடம் பணத்தை கட்டும் படி கூறுகிறார்கள் அவ்வளவே" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு