Published:Updated:

`சவுதிக்கு மின்கேபிள் ஒப்பந்தம் போடுறாங்க; தங்கமணி பொய் சொல்கிறார்!'- போராட்டத்தில் கொந்தளித்த விவசாயிகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

விவசாயிகள் போராட்டத்தைக் கலைக்க 7 டிஎஸ்பி-க்கள் தலைமையில் 600 போலீஸார் மாநகர் முழுக்க பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர் என கொங்கு மண்டலப் பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் விவசாய விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பணியை பவர்கிரிட் நிறுவனமும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் மேற்கொண்டுவருகின்றன. இந்தத் திட்டத்தால், பல்வேறு நோய்கள் உண்டாகும் எனவும் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். அந்த வகையில், இன்று ஈரோடு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, அரசை திணறடிப்பது என விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். விவசாயிகள் ஒன்றாகத் திரண்டுவிட்டால் சிக்கலாகிவிடும் என முன்கூட்டியே போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் இறங்கினர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸார்
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸார்

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்திலுள்ள 5 டிஎஸ்பி-க்கள், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திலிருந்து தலா ஒரு டிஎஸ்பி-க்கள் என மொத்தம் 7 டிஎஸ்பி-க்கள் தலைமையில் 600 போலீஸார் ஈரோடு நகர் முழுக்க குவிக்கப்பட்டிருந்தனர். அதிலும் குறிப்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் 100 போலீஸாரைக் குவித்து, ஒரு விவசாயியைக்கூட உள்ளே விட்டுவிடக்கூடாது என பாதுகாப்பைப் பலப்படுத்தினர். மாநகரின் எல்லைப் பகுதிகளில் வரும் பேருந்துகளை வழிமறித்து, விவசாயிகள்போல அடையாளம் காணப்பட்டவர்களை விசாரித்து கைதுசெய்தனர். பல தடைகளையும் மீறி ஒரு சிலர் கலெக்டர் அலுவலகத்தை நெருங்க, அவர்களைக் கைதுசெய்து வேனில் ஏற்றிச்சென்றனர். கிட்டத்தட்ட 168 விவசாயிகளைக் கைதுசெய்த போலீஸார், அடுத்தகட்ட போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராகிவிடக் கூடாதென 8 மண்டபங்களில் அவர்களைத் தனித்தனியே பிரித்து அடைத்துவைத்தனர். போலீஸாரின் இத்தகைய அடக்குமுறையைக் கண்டு விவசாயிகள் கொதித்துப்போயினர்.

இந்தப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமியிடம் பேசினோம். “காவல்துறை வரலாறு காணாத அடக்குமுறையைக் கையாள்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் நியாயம் கேட்டு போராடுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டச் செயலாளரான பெருமாளை வீட்டிலேயே கைது செய்திருக்கிறார்கள். பல நூறு போலீஸாரைக் குவித்து எங்களை ஏன் அடக்கி ஒடுக்க வேண்டும். நாங்கள் என்ன தீவிரவாதிகளா? உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்ட நிலத்திலிருந்து 150 அடி அகலத்தில் வீடுகளோ, பண்ணைகளோ இருக்கக்கூடாது. மின்கதிர்வீச்சால் புற்றுநோய், பெண்களுக்கு கருச்சிதைவு, ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு, கால்நடைகளுக்கு மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படுமென உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்  விவசாயிகளை கைது செய்யும் போலீஸார்
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை கைது செய்யும் போலீஸார்

எனவேதான், உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்குப் பதிலாக, சாலையோரமாக புதைவடமாகக் கொண்டுசெல்ல அரசை வலியுறுத்துகிறோம். அதிக செலவாகும் என தமிழக அரசு இதனை மறுக்கிறது. அதற்காக எங்கள் வாழ்வாதாரத்தை நாசமாக்குவது எந்த வகையில் நியாயம். போர்பந்தரில் இருந்து சவுதி அரேபியா வரைக்கும் ஒரு திட்டம், கொச்சினில் இருந்து தென்னாப்பிரிக்கா வரை என கேபிள் மூலமாக 1100 மெகா வாட் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல இந்திய அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அப்படியிருக்க, கேபிள் மூலமாக மின்சாரத்தைக் கொண்டுசெல்ல முடியாதென அமைச்சர் தங்கமணி சட்டசபையிலேயே பொய் பேசுகிறார். எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிகொடுத்து, தற்போது நடைபெற்றுவரும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை நிறுத்திவைத்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான வருட வாடகை கொடுத்தும், எதிர்காலத்தில் கேபிள் மூலமாக மின்சாரத்தைக் கொண்டுசெல்லவும் அரசு முன்வர வேண்டும்” என்றார். மக்களுக்காகத்தான் திட்டங்கள் என்பதை அரசு உணர வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு