Published:Updated:

தி.மு.க ஆட்சியிலும் பசையுள்ள பதவிக்கு வந்த பிரகாஷ்; யாருடைய `செட்டிங்' இது?

பிரகாஷ் ஐ.ஏ.எஸ்
News
பிரகாஷ் ஐ.ஏ.எஸ்

பதவி மாற்றங்களில் சிக்கி நல்ல பல அதிகாரிகளின் தலைகள் உருண்டுகொண்டிருக்க... சத்தமில்லாமல் மிக உயரிய பதவியில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார் புகார்களுக்கு ஆளான பிரகாஷ் ஐ.ஏ.எஸ். தமிழகத்தில் பணம் பொங்கும் துறைகளில் ஒன்றான பால்வளத்துறை ஆணையர் பதவி இவருக்குக் கிடைத்திருக்கிறது.

தமிழக அரசின் அதிகாரிகள் மாற்றம் என்பது, கிட்டத்தட்ட ஜெயலலிதா காலத்தை நினைவூட்டும் வகையில் அடிக்கடி நடக்கிறது. ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்திக் கொண்டு, ஒட்டுமொத்தமாக தமிழகத்தை ஆட்டுவித்த ஒரு குடும்பம், கமிஷன் வாங்குவதிலேயே குறியாக இருந்ததால், ஒழுங்காக கமிஷன் கொடுக்காதவர்கள் தூக்கி கீழே வீசப்படுவதும், ஒழுங்காக கவனிப்பவர்கள் உயரே தூக்கி உட்கார வைக்கப்படுவதும் அடிக்கடி நடந்தன. கிட்டத்தட்ட அதே நிலைதான் தற்போதைய ஆட்சியிலும் நடக்க ஆரம்பித்துள்ளது.

தி.மு.க ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் ஏகப்பட்ட பந்தாட்டம். முந்தைய ஆட்சியில் முறைகேடு புகார்களுக்கு ஆளானவர்களை இப்படி பந்தாடுவதில் தவறில்லை. இந்த ஆறு மாதகாலத்தில் தி.மு.க ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டவர்களும்கூட தூக்கி வீசப்படுவதும், உச்சாணிக் கொம்புக்கு உயர்த்தப்படுவதும்தான் பல கேள்விகளை எழுப்புகிறது. பல்வேறு துறைகளில் ஒருமாதம்கூட முழுமையாக பணியாற்றாத சூழலிலேயே பதவி மாற்றம் செய்யப்படுவது கொடுமையிலும் கொடுமை. இந்தப் பதவி மாற்றங்களில் சிக்கி நல்ல பல அதிகாரிகளின் தலைகள் உருண்டுகொண்டிருக்க... சத்தமில்லாமல் மிக உயரிய பதவியில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார் புகார்களுக்கு ஆளான பிரகாஷ் ஐ.ஏ.எஸ். தமிழகத்தில் பணம் பொங்கும் துறைகளில் ஒன்றான பால்வளத்துறை ஆணையர் பதவி இவருக்குக் கிடைத்திருக்கிறது.

Aavin Milk
Aavin Milk
Photo: Vikatan / Priyanka.P

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், சென்னையின் மாநகர கமிஷனராக இருந்த இவர், பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எல்லாமுமாக இருந்தவர் என்கிற புகார்கள் படிக்கப்பட்டன. தி.மு.க-வை சேர்ந்தவர்களே பிரகாஷ் மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்ததும் உண்டு.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, மாநகராட்சி கமிஷனர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட பிரகாஷ், டம்மியான துறையில் நியமிக்கப்பட்டார். பின்னர், நவம்பர் மாதத்தில் கலை மற்றும் கலாச்சாரத் துறை ஆணையர் என்கிற பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இதெல்லாம் பெரிதாக எதுவும் பசையில்லாத பதவிகள் என்பதுதான் ஐ.ஏ.எஸ் வட்டாரங்களில் பேசப்படும் விஷயம். அதாவது, பனிஷ்மென்ட் பதவிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்நிலையில், நேற்று (10.01.2022) அறிவிக்கப்பட்டிருக்கும் ஐ.ஏ.எஸ் பதவி மாற்றப் பட்டியலில் பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையர் என்கிற பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் என்ன பெரிய விஷேசம் என்றால், சமீப ஆண்டுகளாக இப்படியொரு பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. அதாவது, இந்தப் பதவியையே கிட்டத்தட்ட கைவிட்டிருந்தார்கள். இப்போது மீண்டும் இந்தப் பதவியை தூசுதட்டி எடுத்து, பிரகாஷுக்கு வழங்கப்பட்டிருப்பதுதான் ஹைலைட்!
ஆவின் எம்.டி என்றழைக்கப்படும் மேலாண்மை இயக்குநர் பதவியிலிருக்கும் ஐ.ஏ.எஸ்தான் பால்வளத்துறை மொத்தத்துக்கும் பொறுப்பாக இருந்த சூழலில், அவர் டம்மியாக்கப்பட்டு, பிரகாஷுக்கு முக்கியத்துவமான பதவி வழங்கப்பட்டுள்ளது.

Aavin Milk
Aavin Milk
Photo: Vikatan / Priyanka.P

தமிழகத்தில் இருக்கும் பால் கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து பாலை கொள்முதல் செய்வது, அதைப் பதப்படுத்துவது, பிறகு விற்பனை செய்வது என்று அனைத்துப் பணிகளையும் ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்பவர் பொறுப்பில்தான் நடக்கும். அதாவது, அனைத்துக்கும் அவர்தான் தலைவர். இந்நிலையில், அவருக்கும் மேலாக சூப்பர் பவர் என்கிற வகையில், ஆணையராக (கமிஷனர்) பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். பால்வளத்துறையின் கமிஷனர் என்கிற வகையில் பிரகாஷ் இருப்பதால், ஆவின் எம்.டி என்று சொல்லிக் கொண்டு, அந்தப் பதவியில் இருப்பவர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கமிஷனர் வைத்ததுதான் சட்டம். தமிழகம் முழுக்க சுமார் 1,500 பால் கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. இவற்றிலிருந்து பாலைக் கொள்முதல் செய்து, ஆவினுக்கு தரும் பொறுப்பு, கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரகாஷ் வசம் சென்றுள்ளது. இந்தப் பாலை பதப்படுத்தி விற்பனை செய்யும்பொறுப்பை மட்டும்தான் இனி ஆவின் மேலாண்மை இயக்குநர் செய்யவேண்டும். அதேபோல, கொள்முதல் செய்வத பாலுக்கான பணத்தை விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யும் பொறுப்பும் பிரகாஷுடையதே! ஆக, நிதிநிர்வாகம் மொத்தமும் பிரகாஷின் கைகளில்தான்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அத்துடன், இந்த 1,500 கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும். பெரும்பாலும் ஆளுங்கட்சியினர்தான் இதில் உள்ளே புகுந்து பொறுப்புகளைக் கைப்பற்றுவார்கள். கொள்ளை கொள்ளையாக பணத்தையும் சுருட்டுவார்கள். கடந்த கால அ.தி.மு.க ஆட்சியில் இப்படித்தான் ஆவினில் ஊழல் கொடிகட்டிப் பறந்தது. துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜாகூட மதுரை மாவட்ட ஆவினில் கோலோச்சினார். அதில் ஏற்பட்ட பிரச்னைகளுக்காக நீதிமன்றப் படிகள் கூட ஏறினார். இனி, இதுமொத்தமும் தற்போதைய ஆளுங்கட்சியான தி.மு.கவின் வசம் வந்துவிடும்.

ஏற்கெனவே அனைத்துப் பொறுப்புகளையும் ஆவின் எம்.டி எனப்படும் மேலாண்மை இயக்குநராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரே கவனித்து வந்த சூழலில், அவருக்கு மேல் இன்னொரு ஐ.ஏ.எஸ்ஸை நியமிக்க என்ன காரணம்?
ஒருவேளை அந்தத் துறையை இன்னும் நன்றாக பொங்க வைத்து, மேம்பாடு அடையச் செய்வதுகூட நோக்கமாக இருக்கலாம். ஆனால், அந்தப் பதவிக்கு பிரகாஷை நியமித்திருப்பதுதான் பலதரப்பிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

வேலுமணி
வேலுமணி

இதைப் பற்றி பேசிய தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி, ``தமிழ்நாடு பால்வளத்துறை ஏற்கெனவே ஏகப்பட்ட ஊழல்ல சிக்கித் தடுமாறிக்கிட்டிருக்கு. இதனால, ஆவின் நிர்வாகமே நஷ்டத்துலதான் நடைபோடுது. விவசாயிகளுக்கு சேரவேண்டிய பணம் சரியா வந்து சேருறது கிடையாது. ஊழியர்கள் நியமனம், கொள்முதல், பணப்பட்டுவாடானு எல்லாத்துலயும் ஊழல்தான் கொடிகட்டிப் பறக்குது. இந்த முறைகேடுகளையெல்லாம் களையறதுக்கு உரிய நடவடிக்கை எடுக்கணும்னு ரொம்ப காலமாவே நாங்க கோரிக்கை வெச்சிக்கிட்டிருக்கோம். புதுசா ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசாங்கத்துக்கிட்டயும் இதே கோரிக்கையை நாங்க முன்வெச்சோம். ஆவின் நிர்வாகத்துக்கு தனி அதிகாரி, பால்வளத்துறையை கவனிக்க ஒரு அதிகாரினு நியமிக்கணும். அப்பத்தான் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த முடியும்னு கோரிக்கை வெச்சோம்.

இந்த சூழல்ல, எங்க வேண்டுகோள் ஏற்கப்பட்டிருக்குனு சந்தோஷப்பட முடியாத நிலையில இருக்கிறததுதான் வேதனை. ஏகப்பட்ட ஊழல் நடக்கற பால்வளத்துறைக்கு, சவுக்கை கையில எடுத்து விளாசுற ஒருத்தரைத்தான் அதிகாரியா நியமிச்சிருக்கணும். ஆனா, ஏற்கெனவே அ.தி.மு.க ஆட்சியில சென்னை மாநகர கமிஷனரா இருந்துகிட்டு, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி சொன்னதை மட்டுமே செய்துகிட்டிருந்த இந்த பிரகாஷ்கிட்ட பொறுப்பை கொடுத்திருக்கிறதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துது. வேலுமணி மேல இருக்கிற பல்வேறு ஊழல் புகார்கள்ல இவரையும் விசாரிக்கணும்னு அறப்போர் இயக்கம் உள்பட பலரும் புகார் படிச்சிட்டிருக்காங்க அப்படி இருக்கும்போது, இவரை இந்தத் துறைக்கு நியமிச்சிருக்கிறது அதிர்ச்சியாத்தான் இருக்கு.

பொன்னுசாமி
பொன்னுசாமி

1,500 கூட்டுறவு சங்கத்துல பெரும்பாலான சங்கங்கள், ஆளுங்கட்சியோட பிடியிலதான் காலகாலமா இருக்குது. இப்ப பெரும்பாலும் அ.தி.மு.க-காரங்க கையிலதான் இருக்கு. சீக்கிரமே தேர்தலை நடத்தி, அதையெல்லாம் தி.மு.க பக்கம் மாத்துற வேலைகளை செய்யறதுக்கு ஒரு ஆள் தேவைனு போட்டிருக்கலாம்னு தோணுது.

தமிழ்நாட்டுல, 20 சதவிகித பாலை மட்டும்தான் ஆவின் வாங்குது. மீதி 80 சதவிகித பாலை தனியார்தான் கொள்முதல் பண்றாங்க. இதையெல்லாம் மாத்தி, மொத்தமா ஆவின் நிறுவனமே கொள்முதல் பண்ணணும். அதுக்காகத்தான் பால்வளத்துறையையும் ஆவினையும் தனித்தனி அதிகாரிங்க கவனிக்கணும் கோரிக்கை வெச்சோம். அப்படி தனி அதிகாரி வந்தா, தனியார் நிறுவனத்தோட போட்டி போட்டு அரசாங்க பால்வளத்துறையை வளர்த்தெடுக்க முடியும்கிறது எங்க நம்பிக்கை. ஆனா, ஆவின்ல பணம் பொங்கற வழிகள் எல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கறதுக்கு தோதா ஒரு ஆள் தேவைனு இவரைப் போட்டிருக்காங்கனு நினைக்க வெச்சுட்டாங்க" என்று வேதனையை வெளிப்படுத்தினார்.

ஆட்சி மாறியதும் மாநகாரட்சி கமிஷனர் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார் பிரகாஷ். அதன் பிறகு டம்மியான பதவிகளில்தான் இருந்தார். ஒரு மாதத்துக்கு முன்புதான் கலாசாரத்துறை செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்நிலையில், திடீர் என்று பணம் பொங்கும் துறைக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இதில் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள் ஆவின் வட்டாரத்தில்.

``அ.தி.மு.க ஆட்சியில பால்வளத்துறை அமைச்சரா இருந்த ராஜேந்திர பாலாஜி மேல ஏகப்பட்ட ஊழல் புகார்கள் இருக்கு. குறிப்பா, ஆவின்ல வேலை வாங்கித்தர்றேன்னு பணம் பார்த்ததா நீதிமன்றத்துல வழக்கே இருக்கு. அதுக்காகத்தான் கிட்டத்தட்ட பதினஞ்சி நாளுக்கு மேல விடாம தேடித்தேடி இப்ப கைது பண்ணியிருக்காங்க. இப்படிப்பட்ட சூழல்ல, அ.தி.மு.க-வுக்கு வேண்டப்பட்டவர்னு குற்றம்சாட்டப்படுற பிரகாஷை இந்தப் பதவிக்கு கொண்டு வந்திருக்கிறது மேலும் சந்தேகத்தைக் கிளப்புது. ஒருவேளை, டீலிங் முடிஞ்சி, ராஜேந்திர பாலாஜியைக் காப்பாத்தற வேலை செய்யறதுக்காக ஆவினுக்குள்ள கொண்டு வந்திருப்பாங்களோனும் தோணுது" என்கிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதில் வேகம் காட்டுவதுபோல சில நடவடிக்கைகளை எடுத்தது, ராஜேந்திர பாலாஜியை ஓடஓட விரட்டிப் பிடித்தது என பரபரப்புகளைக் கிளப்பிவிட்டு, கடைசியில் அதே அ.தி.மு.க-வுக்கு மிகவும் அணுசரனையான அதிகாரி என்று குற்றம்சாட்டப்படுபவருக்கே மிகமிக முக்கியமான பதவியைக் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது, `க்யாரே செட்டிங்கா...' என்று காலா படத்தில் ரஜினி கேட்பதுபோலத்தான் கேட்க வேண்டியிருக்கிறது.

சுறுசுறுப்புத் திலகம் என்று உயர் நீதிமன்றக் கிளையாலேயே பாராட்டப்பட்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரிந்துதான் இதெல்லாம் நடக்கிறதா... இல்லை, ஈ.சி.ஆர் சாலையில் இவர் சைக்கிள் சவாரி செல்லும் கேப்பில் கிச்சன் கேபினட்டால் நடத்தப்படுகிறதா?