Published:Updated:

பருத்தி விலை உயர வாய்ப்பு!

பருத்தி
பிரீமியம் ஸ்டோரி
News
பருத்தி

முன்னறிவிப்பு

லகில் பயிரிடப்படும் பணப்பயிர்களில் முக்கியமானது பருத்தி. இது, உலக மொத்த நார் இழை உற்பத்தியில் 25 சதவிகிதம் பங்களித்துவருகிறது.

அமெரிக்க வேளாண்துறையின் ஆய்வின்படி 2018-19-ம் ஆண்டில் பருத்தியின் உலகளாவிய உற்பத்தி 5.77 மில்லியன் மெட்ரிக் டன். அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து, பருத்தி ஏற்றுமதியில் உலக அளவில் 62 சதவிகிதம் பங்களிக்கின்றன. வியட்நாம், மலேசியா, தென்கொரியா, பாகிஸ்தான், இந்தியா ஆகியவை பருத்தி இறக்குமதி செய்வதில் முன்னணி நாடுகளாக இருக்கின்றன.

அமெரிக்க வேளாணதுறையின் ஆய்வின்படி தற்போது சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் குறைவான தேவையும் நுகர்வும் இருந்தபோதிலும் பாகிஸ்தான், பிரேசில், தான்சானியா ஆகிய நாடுகளில் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. வியட்நாம், பாகிஸ்தான் தென் கொரியா ஆகிய நாடுகளின் குறைவான இறக்குமதியும், இந்தியா மற்றும் மலேசியாவின் குறைவான ஏற்றுமதியும் தற்போதைய உலக வர்த்தகத்தைக் குறைத்திருக்கின்றன.

தற்போது பருத்தி உற்பத்தி மற்றும் நுகர்வு செய்யும் நாடுகளில் சந்தை நிலைத்தன்மை, கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றால் உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியப் பருத்தி சங்கத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் பருத்திச் சாகுபடி 2019-20-ம் ஆண்டில் 126.58 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 322.67 லட்சம் பொதிகள் (170 லட்சம் கிலோ) உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது. பருத்தி நுகர்வு 331 லட்சம் பொதிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து பங்களாதேஷ், சீனா, வியட்நாம், பாகிஸ்தான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பருத்தியை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. இந்த மாநிலங்கள் இந்திய மொத்த பருத்தி உற்பத்தியில் 97 சதவிகிதம் பங்களிக்கின்றன.

பருத்தி
பருத்தி

பருத்திச் சாகுபடி செய்யப்படும் பருவத்தில் தமிழ்நாட்டில் 2018-19-ம் ஆண்டில் 1.28 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு 5 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 2017-18-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 9.6 சதவிகிதம் குறைவு. தமிழ்நாட்டில் 90 சதவிகிதத்துக்கு மேல் மரபணு மாற்றப்பட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

தற்போதைய நிலையில் நீண்ட இழைப் பருத்தி ரகத்தின் சந்தை விலை குவிண்டாலுக்கு 4,900-5,200 ரூபாய்வரை விற்கப்படுகிறது. பெரும்பாலும் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலுள்ள பருத்தி ஆலைகள் தேவைக்கேற்ப கொள்முதல் செய்கின்றன. வர்த்தக மூலங்களின்படி, பிப்ரவரி மாத இறுதி வரை தமிழகத்தில் பருத்தி வரத்து இருக்கும் என அறியப்படுகிறது. மேலும், வரும் மாதங்களில் பருத்திக்கான தேவை நிலையாக இருந்தபோதும் வரத்து குறைந்து காணப்படுவதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 10 ஆண்டுகளாகக் கொங்கனாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தி விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

பொருளாதார ஆய்வு முடிவின்படி, தற்போதைய சந்தை நிலவரம் தொடர்ந்தால், பருத்தி விலை வரும் மார்ச் முதல் ஜூன் வரை குவிண்டாலுக்கு 5,100 முதல் 5,200 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தச் சூழலில் பருத்தி விவசாயிகள், பருத்தி விற்பனை மற்றும் விதைப்பு முடிவுகளை மேற்கண்ட விலையின் அடிப்படையில் எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

தொடர்புக்கு:

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர்-641 003.

தொலைபேசி: 0422 2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர், பருத்தி துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர் - 641 003.

தொலைபேசி எண் : 0422-2450507