Published:Updated:

வேளாண் சட்டங்கள்: `குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்!’ - பிரதமர் மோடி உறுதி

`கிசான் கல்யாண்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
`கிசான் கல்யாண்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ( ANi )

மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகளிடையே காணொலிக் காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரைசன் நகரில் நடைபெற்ற 'கிசான் கல்யாண்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 35 லட்சம் விவசாயிகளுக்கு 16,000 கோடி ரூபாய் நிவாரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ``வேளாண் சட்ட மசோதா ஓர் இரவில் கொண்டுவரப்பட்டது அல்ல. கட்சிகள், வல்லுநர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளின் நீண்டகால கோரிக்கையின் மூலம் கொண்டுவரப்பட்டது" என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ``இந்தியாவின் விவசாயமும் விவசாயிகளும் இனியும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது. உலகின் மற்ற பெரிய நாடுகளின் விவசாயிகளுக்குக் கிடைக்கும் நவீன வசதிகள் இந்திய விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். அதை இனியும் தாமதப்படுத்தக் கூடாது. நான் அனைத்து அரசியல் கட்சிகளையும் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். நீங்களே அனைத்துப் புகழையும் வைத்துக்கொள்ளுங்கள். நான் விவசாயிகளின் வாழ்க்கையை எளிமையாக்க விரும்புகிறேன். அவர்களின் முன்னேற்றத்தை விரும்புகிறேன். விவசாயத்தில் நவீனத்துவத்தை விரும்புகிறேன்" என்றார்.

தொடர்ந்து, ``கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வேளாண் சட்டத் திருத்தம் குறித்துப் பேசிவருகிறன்றன. விவசாய வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் விவசாயிகள் இந்தச் சீர்திருத்தங்களைக் கோரியிருந்தனர். இந்த உலகம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டேயிருக்கிறது, போட்டிகளுக்குப் பின்னால் விவசாயிகள் விழுவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நீண்டகால விவசாயிகளின் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். அரசியல் கட்சிகள் விவசாயிகளைத் தவறான வழியில் வழிநடத்துவதை நிறுத்த வேண்டும். வேளாண் சட்டம் கொண்டுவரப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. சிலரின் அரசியல் ஆதாயத்துக்காகப் பொய்யான பிரசாரம் செய்யப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

'கிசான் கல்யாண்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
'கிசான் கல்யாண்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
ANI

``விவசாயிகள் எவ்வளவு முயன்றாலும் சேமிப்பு சரியாக இல்லையென்றால், அது பெரும் இழப்புதான். அந்த இழப்பு, விவசாயிகளுக்கு மட்டுமில்லை, இந்த ஒட்டுமொத்த தேசத்துக்குமானது. விவசாயத்துறையில் சேமிப்பு வசதி மற்றும் கிடங்குகள் மிகவும் முக்கியமானவை. தற்போது, உணவு பதப்படுத்தும் மையங்கள், கிடங்குகள், குளிர் களஞ்சியங்கள், உலர் களஞ்சியங்கள் அமைப்பது முக்கியம். இவற்றை அமைப்பது குறித்துச் செயல்படத் தொடங்க வேண்டும்.

டெல்லி: `மத்திய அரசு ஆராய வேண்டும்; போராட்டத்தால் பிரச்னைகள் தீராது!’ - உச்ச நீதிமன்றம் கருத்து

விவசாயிகளின் வளர்ச்சியை இந்த அரசாங்கம் உறுதிசெய்திருக்கிறது. இந்தச் சட்டம் விவசாயிகளையும் வியாபாரிகளையும் இணைக்கும். இது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகும். விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். நாங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி) நீக்க விரும்பினால், சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை ஏன் செயல்படுத்த வேண்டும்? எம்.எஸ்.பி விவகாரத்தில் இந்த அரசு தீவிரமாக இருக்கிறது. அதனால்தான் அந்தந்தப் பருவத்துக்கு முன்பே அறிவிப்பை வெளியிடுகிறோம். குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும்.

தற்போது, அனைத்து விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை கிடைக்கிறது. முன்பு, இந்த அட்டை எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்கப்படவில்லை. ஆனால், அந்தப் போக்கை மாற்றி, நாட்டின் எல்லா விவசாயிகளுக்கும் இந்தக் கடன் அட்டை கிடைக்கும் வகையில் நாங்கள் விதிகளை மாற்றியமைத்தோம். இந்தச் சட்டம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளன" என்று பேசினார் பிரதமர். இந்த நிகழ்ச்சியை மத்தியப் பிரதேசத்திலுள்ள 23,000 கிராம மக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு