Published:Updated:

அர்த்தம் பிறக்கும்!

ஆசிரியர்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர்

தலையங்கம்

அர்த்தம் பிறக்கும்!

தலையங்கம்

Published:Updated:
ஆசிரியர்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘இந்தியா, ஆண்டுக்கு 8,50,000 கோடி ரூபாய் மதிப்பில், பால் உற்பத்தி செய்கிறது. கோதுமை மற்றும் அரிசி கூட, இந்த அளவை எட்டவில்லை. விவசாயிகளின் உழைப்பின் மூலம் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக நாம் உயர்ந்துள்ளோம்’’ என்று அண்மையில் பெருமையுடன் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இதைத்தான் ‘பெருமைக்கு எருமை மேய்ப்பது’ என்று சொல்வார்கள்.

விவசாயம் பொய்க்கும்போதும், விளைபொருள்களுக்கு விலை இல்லாதபோதும் கறவை மாடு வளர்ப்பு மட்டுமே, விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. ஆனால், அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அதில் கிடைப்பதில்லை. ஆள் கூலி, தீவனம், மருத்துவம்... என்று சராசரியாக ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய 50 ரூபாய் வரை செலவாகிறது என்று விவசாயிகள் சொல்கிறார்கள்.

அரசு நிறுவனமான ஆவின், ஒரு லிட்டர் பசுமாட்டுப் பால் 32 ரூபாய், எருமை மாட்டுப் பால் 41 ரூபாய் என்ற விலையில் விவசாயிகளிடம் வாங்குவதாகச் சொல்கிறது. ஆனால், ஆவின் நிர்ணயித்துள்ள கொழுப்புச்சத்து, இதர சத்துக்களின் அளவீடுகளை விவசாயிகளால் எட்டித் தொட முடியாது.

பெரும்பாலும் லிட்டர் 25 ரூபாய்க்குதான் விவசாயிகள் கொடுத்து வருகிறார்கள். அப்படிப்பார்த்தால், ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய ஒவ்வொரு விவசாயியும் 25 ரூபாய் நஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். அதைத் தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளோ போதுமான விலையும் கொடுக்காமல், தேவையான உதவியும் செய்யாமல், ‘உற்பத்தி உயர்ந்துவிட்டது; உலக சாதனை’ என்று வெற்றுக் கூச்சல் போட்டு வருகின்றன. நெல்லுக்கும் கோதுமைக்கும் கொடுப்பதுபோல குறைந்தபட்ச ஆதார விலை பாலுக்கும் கொடுக்க வேண்டும். அப்போதுதான், உலக சாதனை என்று பெருமைகொள்வதற்கும் அர்த்தம் பிறக்கும்!

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism