Published:Updated:

"உயிரோட மதிப்பை விவசாயத்துல தெரிஞ்சுக்கிட்டோம்!"

சிறைவாசிகள் விளைவித்த காய்கறிகளுடன்
பிரீமியம் ஸ்டோரி
சிறைவாசிகள் விளைவித்த காய்கறிகளுடன்

பாரம்பர்ய விவசாயத்தில் அசத்தும் புதுச்சேரி சிறைவாசிகள்

"உயிரோட மதிப்பை விவசாயத்துல தெரிஞ்சுக்கிட்டோம்!"

பாரம்பர்ய விவசாயத்தில் அசத்தும் புதுச்சேரி சிறைவாசிகள்

Published:Updated:
சிறைவாசிகள் விளைவித்த காய்கறிகளுடன்
பிரீமியம் ஸ்டோரி
சிறைவாசிகள் விளைவித்த காய்கறிகளுடன்

அனுபவம்

சிறை... தண்டனையை வழங்கும் இடமாக இருக்கக்கூடாது. சிறையிலடைக்கப்பட்ட ஒருவர், தன் தவறுகளை உணர்ந்து திருந்தி புதுமனிதனாக வெளியில் வருவதற்கான வாய்ப்புகளை வழங்கும் இடமாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில், பலருக்கும் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்புகளை வழங்கி வரும் சிறைச்சாலைகளில் ஒன்றாக இருக்கிறது... புதுச்சேரி மத்திய சிறை.

சிறைச்சாலையில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகள் மற்றும் பழ வகைகளைச் சாகுபடி செய்வதுடன், ஆடு, மாடு, கோழி, முயல், புறா வளர்ப்பு என அசத்தி வருகிறார்கள், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி இங்கே சிறைப்பட்டிருக்கும் சிறைவாசிகள் பலரும்!

சிறைவாசிகள் விளைவித்த காய்கறிகளுடன்
சிறைவாசிகள் விளைவித்த காய்கறிகளுடன்

புதுச்சேரி காலாப்பட்டில் அமைந்திருக்கும் மத்திய சிறைச்சாலையில் விசாரணை மற்றும் தண்டனை பெற்ற சுமார் 300 சிறைவாசிகள் இருக்கிறார்கள். அவர்களின் மன அழுத்தங் களைப் போக்குவதற்கும், தண்டனைக் காலம் முடிந்து வெளியே செல்லும்போது சுயதொழில் செய்து குடும்பத்தை நடத்து வதற்கும் பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்து வருகிறது புதுச்சேரி யூனியன் பிரதேச சிறைத்துறை. அந்த வகையில் அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த ‘ஶ்ரீ அரபிந்தோ சொசைட்டி’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் குறைந்தபட்ச தண்டனை பெற்றவர்களுக்கும், ஆயுள் தண்டனை பெற்றுப் பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் சிறைவாசிகளுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியை அளித்து வருகிறது சிறைத்துறை. அதற்காகச் சிறை வளாகத்துக்குள்ளேயே 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றிப் புதர்மண்டிக் கிடந்த அந்த இடத்தை இரண்டே வாரத்தில் சீரமைத்து, மண்ணை உழுது, பாத்திகள் பிரித்து, தெளிப்பு நீர்ப் பாசனம் அமைத்து அசத்தியிருக்கிறார்கள் சிறைவாசிகள். அதேவேகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 60 வகைப் பழச் செடிகள், 50 வகை மூலிகைச் செடிகளையும் நட்டு இயற்கை விவசாயத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

பக்கிரிசாமி
பக்கிரிசாமி

சிறைத்துறையின் சிறப்பு அனுமதியோடு சிறைவாசிகளின் இயற்கை விவசாயத்தைப் பார்ப்பதற்காகச் சிறைச்சாலைக்குச் சென்றோம். விவசாய பண்ணைக்குள் புகுந்து விட்ட எண்ணம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு விவசாயிகளாகவே மாறியிருந்தார்கள் சிறை வாசிகள். தங்கள் விவசாய அனுபவங்களை ஆர்வமுடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களில், ஒருவரான பக்கிரிசாமி என்ற சிறைவாசி பேசும்போது, “ஒரு வருஷமா ஜெயில்ல இருக்கேன். தண்டனைக் கைதிங்க எல்லாரும் ஒண்ணா போய் ‘ஜெயில் சூப்பிரண்டன்ட்’ பாஸ்கர் சாரை பார்த்து, நாங்க எல்லாரும் இயற்கை விவசாயம் பண்ணப் போறோம்னு சொன்னோம். ‘அதுக்கென்ன தாராளமா செய்யுங்க’னு சொல்லி,  அரபிந்தோ சொசைட்டி மூலமா வெற்றிச்செல்வன்ங்கற இயற்கை விவசாயியைக் கூட்டிக்கிட்டு வந்தாரு. அவர் ஜெயிலுக்குள்ள இருந்த ரெண்டரை ஏக்கர் காலி இடத்தைப் பார்த்துட்டு, ‘நல்லா விவசாயம் பண்ணலாம்’னு சொன்னார். அந்த இடத்தை எங்ககிட்ட கொடுக்கும்போது புதர்க்காடா கிடந்துச்சு. நாங்க 41 சிறைவாசிங்களும் இரவும் பகலும் உழைச்சு, அந்த இடத்தை ரெண்டே வாரத்துல விவசாய நிலமா மாத்துனோம்.

விவசாய வேலைகளில் சிறைவாசிகள்
விவசாய வேலைகளில் சிறைவாசிகள்

இயற்கை விவசாய முறையில ஒருங்கிணைந்த பண்ணை யத்தை ஆரம்பிச்சோம். இங்க எந்தவிதமான செயற்கை உரங்களையும் நாங்க பயன்படுத்தல. விதை நேர்த்தியைக்கூட பசுமாட்டின் சாணம், கோமியம், நிலத்தோட மண், சுண்ணாம்பை வெச்சு பண்ணுனோம். பீஜாமிர்தம் தயாரிச்சும் கொடுத்தோம். அதேபோல தண்ணீர், சாணம், மாட்டு சிறுநீரை வச்சு செஞ்ச ஜீவாமிர்தக் கரைசலைத்தான் உரமா போடுறோம். 10,000 அன்னாசிச் செடிகள், 1,350 வாழைகள் உட்பட 67 வகையான பயிர்களைப் போட்டிருக்கோம். துளியளவுகூட காலியிடம் விடாம பலபயிர் சாகுபடி முறையில் பயிரிட்டிருக்கோம்” என்றார் உற்சாகத்துடன்.

பிரேம்குமார்
பிரேம்குமார்


அவரைத் தொடர்ந்து பேசிய ஆயுள் தண்டனை பெற்று கடந்த 18 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பிரேம்குமார், “ஒண்ணே முக்கால் லட்சம் ரூபாய்ல நீர்ப்பாசனம் அமைச்சிருக்கோம். இந்த விவசாய வேலைக்கு ஒரு நாளுக்கு 200 ரூபாய் சம்பளமா கொடுக்கறாங்க. அது எங்களுக்கும் எங்க குடும்பத்துக்கும் உதவியா இருக்குது. அதேசமயம் சம்பளத்துக்காக மட்டும் நாங்க வேலை செய்யல. விவசாயத்தைக் கத்துக்கிறோம் அப்படிங்கற திருப்தி இருக்கு. வெறும் தண்ணியால மட்டுமல்ல எங்களோட கண்ணீராலும், வியர்வை யாலும் இந்த ரெண்டரை ஏக்கர் விவசாயப் பண்ணையை உருவாக்கியிருக்கோம். இங்க கிடைக்கிற சருகுகளை வெச்சு இயற்கை உரம் தயாரிச்சுக்கிறோம். இது எங்களுக்கு மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு. அதற்கு வாய்ப்பு கொடுத்த சிறை நிர்வாகத்துக்கு நன்றி” என்றார் உருக்கமாக.

சிறைவாசிகள் விளைவித்த காய்கறிகளுடன்
சிறைவாசிகள் விளைவித்த காய்கறிகளுடன்

“இந்த நிலத்தைத் தயார் பண்றதுக்கு முன்னாடியும் நாங்க இயற்கை விவசாயத்தைப் பண்ணிக்கிட்டு இருக்கோம். சில மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் சாப்பிடறதும், தூங்குறதுமாகத்தான் இருந்தோம். இந்த நிலமெல்லாம் புழுதியடைஞ்சு போய்க் கிடந்தது. எங்க சூப்பிரண்டன்ட் பாஸ்கர் ஐயா உதவியோட தக்காளி, கத்திரி, வாழை, தர்பூசணி, பப்பாளி, பச்சை மிளகாய், சுண்டக்காய்னு சாகுபடி பண்ணிக்கிட்டு இருக்கோம். ‘வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்’னு வள்ளலார் ஐயா சொல்லிருக்காரு. ஒவ்வொரு விதைக்கும் உயிர் இருக்குது. அந்த வகையில ஓர் உயிரோட மதிப்பு என்னனு இப்போ எங்களுக்கு நல்லா தெரியுது. ஒரு தாய் பிரசவத்துல எவ்வளவு வலியைத் தாங்குறான்னு இந்த விவசாயம் மூலம் தெரிஞ்சுகிட்டோம். விவசாயம் மூலம் திருத்தப்பட்ட மனிதர்களா மாற்றிட்டோம். நாங்க விடுதலையாகிப் போகும் போது சமுதாயத்துக்குப் பயனுள்ள மனிதர்களா இருப்போம்” என்கிறார் கடந்த 24 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் மணிகண்டன்,

சங்கர்
சங்கர்

கடந்த 19 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் சங்கர், “நாங்க திருந்தி நல்லாயிருக்கணும் அப்படிங் கிறதுக்காகவும், விடுதலையாகிப் போகும்போது எங்களுக்கு ஒரு தொழில் வேணுங்கிறதுக்காகவும் ஐ.ஜி சாரும், சூப்பிரண்டன்ட் சாரும் நிறைய உதவிகளைச் செய்றாங்க. அதுல ஒண்ணுதான் இந்த விவசாயம், ஆடு, மாடு, கோழி பண்ணை எல்லாம். மாடுங்களுக்கு கொட்டகை போடறதுக்காக வெளில விசாரிச்சப்போ ரெண்டரை லட்சம் ரூபாய் ஆகும்னு சொன்னாங்க. ஆனா, ‘அவ்ளோ பணம் செலவு பண்ண முடியாதுங்கிறதால ஜெயில்ல இருக்கற வீணானப் பொருள்களை வச்சு என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கங்க’னு சொல்லிச் சூப்பிரண்டன்ட் சார் 11,000 ரூபாய் கொடுத்தாரு.

எங்ககிட்ட அமலன்னு ஒரு வெல்டர் இருக்காரு. அவர் மூலமா வேஸ்ட் ஷட்டர், தண்ணீர் டேங்க், பைப் இதையெல்லாம் வெச்சு மாடு, ஆடு, முயல்னு எல்லாத்துக்கும் கொட்டகை போட்டுட்டோம். பயனில்லாத தண்ணீர் டேங்கை கிழிச்சு, ‘ஷெட்’டுக்கு மேல போட்டிருக்கோம்.

விவசாய வேலைகளில் சிறைவாசிகள்
விவசாய வேலைகளில் சிறைவாசிகள்
விவசாய வேலைகளில் சிறைவாசிகள்
விவசாய வேலைகளில் சிறைவாசிகள்

இந்தப் பண்ணை வேலையால தினமும் எங்களுக்கு நிம்மதியா தூக்கம் வருது.கோழி, ஆடு மாடு இதையெல்லாம் பார்த்து வளக்கறப்போ எங்க மனசுக்கும் ஆறுதலா இருக்குது. நாங்க திருந்தி வாழறதுக்கும் அரசாங்கம் எங்களுக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்குது” என்றார்.

இதுகுறித்துப் பேசிய சிறை கண்காணிப்பாளர் பாஸ்கர், “இந்த எல்லா மாற்றங்களுக்கும் எங்கள் சிறைத்துறை ஐ.ஜி ரவிதீப் சிங் சாகரும், தலைமை கண்காணிப்பாளர் அசோகனும்தான் காரணம். இங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காய்கறி, பழம் எல்லாம் சிறைவாசிகளே சாகுபடி செய்ததுதான். விதைகள் மட்டும் நாங்கள் வாங்கிக் கொடுத்தோம். அதேபோல புதராகக் கிடந்த இந்த இரண்டரை ஏக்கர் நிலத்தைச் சீரமைக்க இரண்டரை மாதங்கள் ஆகும் என்றார்கள். ஆனால், இவர்கள் ஒரே வாரத்தில் அதைச் சீரமைத்து தரமான விவசாய நிலமாக மாற்றியிருக்கிறார்கள்.

பாஸ்கர்
பாஸ்கர்

வெளியில் இருக்கும் மக்கள், சிறைவாசிகளுக்கு ஏன் இவ்வளவு சலுகைகள் செய்கிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அந்தக் காலத்தில் குற்றம் செய்துவிட்டு சிறைக்கு வரும் சிறைவாசிகளுக்குத் தண்டனையாகச் சவுக்கடிகள் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். அதன் பிறகு, வருடக்கணக்கில் சிறைக்குள் வைத்து, எந்த வேலையும் கொடுக்காமல் விடுதலை செய்யும் முறை வந்தது. இந்த முறையில் சிறைவாசிகளின் மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது.

சிறைவாசிகள் விளைவித்த காய்கறிகளுடன்
சிறைவாசிகள் விளைவித்த காய்கறிகளுடன்


எந்த மனநிலையில் சிறைக்கு வந்தார்களோ அதே மனநிலையில்தான் அவர்கள் விடுதலை யாகிப் போவார்கள். அதனால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இப்படியான பயிற்சிகளைக் கொடுக்கிறோம். 2.41 ஏக்கர் நிலத்தில் முதல்கட்டமாகப் பலபயிர் சாகுபடி முறையில் வாழை, அன்னாசி, உளுந்து, சூரியகாந்தி, இஞ்சி, மஞ்சள், ஏலக்காய், ஆப்பிள், சாத்துக்குடி உள்ளிட்ட 67 பயிர்களை சாகுபடி செய்ய வைத்திருக்கிறோம். கொல்லிமலையிலிருந்து 10,000 அன்னாசிச் செடிகளை வாங்கிவந்து நட்டிருக்கிறோம்.

சிறைவாசிகள் விளைவித்த காய்கறிகளுடன்
சிறைவாசிகள் விளைவித்த காய்கறிகளுடன்

இங்கு சாகுபடி செய்யும் பயிர்களைச் சிறைப் பயன்பாட்டுக்கும், வெளிச் சந்தைகளிலும் விற்பனைக்குக் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். எங்கள் சிறைவாசிகள் அனைவரும் இப்போது இயற்கை விவசாயிகளாக மாறிவிட்டார்கள்” என்றார் மகிழ்ச்சியாக.

நல்லதொரு முயற்சியை முன்னெடுத்த சிறைத்துறையினருக்கு வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism