Published:Updated:

அம்பல மேடை: உழவர் உற்பத்தியாளர் நிறுவன குளறுபடிகள்...

அரசு, அலட்சியம், அநியாயம்!
பிரீமியம் ஸ்டோரி
அரசு, அலட்சியம், அநியாயம்!

அரசு, அலட்சியம், அநியாயம்! - தோலுரிக்கலாம் வாங்க!

அம்பல மேடை: உழவர் உற்பத்தியாளர் நிறுவன குளறுபடிகள்...

அரசு, அலட்சியம், அநியாயம்! - தோலுரிக்கலாம் வாங்க!

Published:Updated:
அரசு, அலட்சியம், அநியாயம்!
பிரீமியம் ஸ்டோரி
அரசு, அலட்சியம், அநியாயம்!

‘அநியாயமா இருக்கே? இதை யார்கிட்ட போய்ச் சொல்றது’ எனப் பல நேரங்களில் புலம்பும்படியான நிகழ்வுகளை நாமும் நம்முடைய சுற்றமும் நட்பும் அடிக்கடி சந்தித்தபடிதான் இருக்கிறோம். பட்டா மாறுதல், நில அளவை, பயிர்க்கடன், மானியம், சலுகைகள், கருவிகள், பாசனம் என்று நம்முடைய வேளாண்மை சார்ந்த விஷயங்களில் ஆரம்பித்துப் பல தளங்களிலும் தொல்லைகளை அனுபவித்துதான் வருகிறோம். குறிப்பாக, அரசாங்க அதிகாரிகள், விதை வியாபாரிகள், ஒப்பந்தப் பண்ணைய நிறுவனத்தினர், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் நபர்கள் என்று விதிமுறைகளை மீறி செயல்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நம் கையில் இருக்கும் மொபைல் போன்தான் ஆயுதம். ஆம்... உங்கள் பார்வையில் படும் அலட்சியங்கள், அநியாயங்கள் என்று அனைத்தையும் படம்பிடியுங்கள். அதேபோல உங்கள் கவனத்துக்கு வரும் தகவல்கள், சந்திக்கும் அனுபவங் களையும் படம் பிடியுங்கள். அவை அனைத்தையும் விளக்கத்துடன் இங்கே நீங்கள் பதிவு செய்யலாம். உங்கள் பெயர், முகவரி மற்றும் அடையாளங்கள் வெளியிடத் தேவையில்லை என்றால் அவற்றையும் அதிலேயே குறிப்பிடுங்கள். உங்களின் பதிவுகளை ஆசிரியர் குழு பரிசீலித்து உரிய வகையில் பசுமை விகடன் இதழ், இணையதளம், பசுமை விகடன் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற இடங்களில் பதிவுசெய்யும். வாருங்கள் அநியாயக்காரர்களைத் தோலுரிப்போம்...

த்திய அரசின் கீழ் செயல்படும் நபார்டு வங்கி (தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி), விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் பொருளாதாரரீதியாகத் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கோடிக்கணக்கில் நிதி வழங்கி வருகிறது. குறிப்பாக, விவசாயிகள் கூட்டாக இணைந்து விளைபொருள்களை விற்பனை செய்யும் வகையில், ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்’ தொடங்க, கடன் உதவி மற்றும் மானியங்களை வழங்கி வருகிறது. மத்திய அரசின் வேளாண் விற்பனை பிரிவும் இதைச் செயல்படுத்தி வருகிறது.

நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே இதில் உறுப்பினராகச் சேர முடியும். ஒரு குழுவுக்கு 20 விவசாயிகள் வீதம் மொத்தம் 50 குழுக்கள் மூலம் 1,000 விவசாயிகள் ஒன்றாக இணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்கலாம். ஒரு விவசாயி 1,000 ரூபாய் பங்குத்தொகை செலுத்தி, அந்த நிறுவனத்தில் இணையலாம் என்பது விதிமுறை. இதில் இன்னும் பலவிதமான நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டால், விவசாயிகளின் வாழ்க்கை நிச்சயம் மேம்படும். காந்தி கண்ட கிராம ராஜ்ஜியத்தை மிக விரைவில் கண்கூடாகப் பார்க்கலாம். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. அதற்குச் சாட்சி இந்த இதழிலேயே இடம்பெற்றுள்ள விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் சீட்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனமே.

அதேசமயம் நிர்வாகச் சீர்கேடு, அலட்சியம், தனிநபர் அதிகார மோதல், முறைகேடு உள்ளிட்ட பல காரணங் களால், ஆங்காங்கே சில உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மிகக் குறுகிய காலத்திலேயே இழுத்து மூடப்பட்டு வருகின்றன. இது விவசாயிகளுக்கு மிகப் பெரும் பேரிழப்பு. குறிப்பாக, இதில் உறுப்பினராகச் சேர, விவசாயிகள் செலுத்திய பங்குத் தொகை, நபார்டு வழங்கிய நிதியுதவி உள்ளிட்டவை முடங்கிப் போய்விடுகின்றன. எல்லா வற்றுக்கும் மேலாக, விவசாயிகள் இணைந்து தங்களது விளைபொருள் களை, இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளின் தலையீடு இல்லாமல், நேரடியாக விற்பனை செய்து, கூடுதல் லாபம் பார்ப்பதும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதும் தடைப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் நமது நெல்லை காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மறைந்த நெல் ஜெயராமனின் முன் முயற்சியில் தொடங்கப்பட்டது ‘தாய்மண் பாரம்பரிய வேளாண் சார் உற்பத்தியாளர் நிறுவனம்.’ அது தற்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி முடங்கிக் கிடக்கிறது. 27.12.2017 அன்று கம்பெனி சட்டங்களின்படி திருவாரூரை மையமாகக் கொண்டு, 10 ஒன்றியங்களை உள்ளடக்கி இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ஒன்றியங்களில் நிறுவன செயல்பாடு களைக் கவனிப்பதற்காக 10 இயக்கு நர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

அரசு, அலட்சியம், அநியாயம்!
அரசு, அலட்சியம், அநியாயம்!

இயற்கை விவசாயிகளின் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பது மற்றும் நுகர்வோருக்கும் விவசாயிகளுக்கும் பாலமாக இருப்பதுதான் இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம். ஆனால், இந்த நோக்கங்கள் முழுமையாக நிறைவடை வதற்கு முன்பே இழுத்து மூடப் பட்டதுதான் துரதிர்ஷ்டம். இப்படியொரு புகாரை அனுப்பியிருந்தார் திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி இளங்கோவன்.

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய இளங்கோவன், ‘‘எங்க பகுதியில் உள்ள சரவணன் என்கிற குருசாமி மூலமாகத்தான் நான் இந்த நிறுவனத்தில் உறுப்பினரானேன். இந்தப் பகுதியில உள்ள 20 விவசாயிகளை உறுப்பினராக்கி, ஒரு குழு உருவாக்கினேன். ஒவ்வொருத்தருக்கிட்ட இருந்தும் பங்கு தொகையாகத் தலா 1,000 ரூபாய் வீதம் மொத்தம் 20,000 ரூபாய் பணம் வாங்கி, தாய்மண் உற்பத்தியாளர் நிறுவனத்துக்குக் கொடுத்தேன். நாங்க இதுல இணைஞ்சப்ப, திருவாரூரைச் சேர்ந்த வரதராஜன்தான் தலைவராக இருந்தார். பங்குத்தொகை செலுத்தி, ரெண்டு வருஷத்துக்கு மேலாகுது. ஆனால், எங்களுக்கு யாருக்குமே இதுவரைக்கும் ‘ஷேர் சர்டிஃபிகேட்’ (பங்குச் சான்றிதழ்) கொடுக்கப்படவே இல்லை. எங்களை மாதிரி இன்னும் பல விவசாயி களுக்கும் சான்றிதழ் கொடுக்கப்படல.

கைக்குத்தல் அரிசி தயாரிக்கிறதுக்கான ஒரு ஆலையைத் திருவாரூர்ல தொடங்கப் போறோம்னு ஆரம்பத்துல சொன்னாங்க. இயற்கை விவசாய விளைபொருள்களை இருப்பு வைக்கிறதுக்கான ஒரு குடோன் கட்டப்போறோம்னு சொன்னாங்க. இதையெல்லாம் நம்பிதான் நாங்க இதுல இணைஞ்சோம். ஆனால், எதுவுமே நடக்கல. இந்த நிறுவனத்துக்காக, திருவாரூர்ல ஓர் அலுவலகம் திறந்தாங்க. நபார்டு வங்கியின் நிதியுதவியோடு ‘ரூரல் மார்ட்’ங்கற பேர்ல ஒரு விற்பனை அங்காடி திறந்தாங்க. இந்த ரெண்டுமே கடந்த பல மாதங்களாக மூடிக்கிடக்கு. மாதம் ஒரு முறை குழுக் கூட்டம் போடணும்... வருஷத்துக்கு ஒரு தடவை பொதுக்குழு கூடணுங்கறது உற்பத்தியாளர் நிறுவனத்தின் விதிமுறை. ஆனால், இது எதுவுமே ஒழுங்கா நடக்கிறதில்ல’’ எனப் பொங்கித் தீர்த்தார்.

இதுகுறித்து வரதராஜனிடம் பேசினோம். ‘‘இந்த நிறுவனம் தொடங்கப்பட்டபோது நான் தலைவராக நியமிக்கப்பட்டேன். ஆனால், இந்த நிறுவனத்தை வழிநடத்தக்கூடிய இடத்திலும், வங்கிக் கணக்குகளைப் பராமரிக்கும் இடத்திலும் நெல் ஜெயராமன் மற்றும் குடவாசல் குருசாமி என்கிற சரவணனும்தான் இருந்தாங்க. கம்பெனிக்கு வரக்கூடிய பங்குத்தொகையையும், மற்ற செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய காசோலைகளையும் நிர்வகிக்கக்கூடிய முழுப் பொறுப்பில் இருந்தது அவங்க ரெண்டு பேர்தான்.

நெல் ஜெயராமன் உயிரோடு இருந்தவரை இந்த நிறுவனம் ஓரளவுக்கு நல்ல முறையில்தான் செயல்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கல. நான் தலைவர் பொறுப்பில் இருந்த வரைக்கும் 300 விவசாயிகள், இதில் உறுப்பினராக இருந்தாங்க. அவங்களுக்கான ‘ஷேர் சர்டிஃபிகேட்’ தயார் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட விவசாயி களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இயக்குநர்களுக்கும் இதில் அக்கறையும் பொறுப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக, இயக்குநர்கள்தாம் ஷேர் சர்டிஃபிகேட்டை விவசாயிகளிடம் வழங்க வேண்டும் என எங்க நிறுவனத்தின் விதிமுறையை வகுத்துள்ளோம். ஆனால், இயக்குநர்கள் அவங்க கடமையை ஒழுங்காகச் செய்யல. தலைவராக இருப்பவர், ஒரு வருஷம் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்பது விதிமுறை. ஆனால், இந்தப் பொறுப்பை ஏற்க வேறு யாரும் முன்வராததால், ரெண்டு வருஷம் என்னையே தலைவராக வெச்சிருந்தாங்க.

2020-ம் ஆண்டு ஜூலை மாதம் நான் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிட்டேன். இயக்குநர் அவையில் இது முறைப்படி ஏற்கப்பட்டு, சேதுராமன் என்பவர் தலைவர் பொறுப்பை ஏற்றார். ஆனால், அவருக்கும் மற்ற இயக்குநர்கள் ஒத்துழைப்பு வழங்குறதில்ல. இதுக்கிடையே, திருவாரூரில் எங்க நிறுவனத்தின் அலுவலகமும் ரூரல் மார்ட் விற்பனை அங்காடியும் தொடங்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வந்தது. ஆனா, கொரோனா காரணமா தொடர்ந்து செயல்பட முடியாம, அதை மூடிட்டாங்க. விற்பனை அங்காடியில் இருந்த விளைபொருள்களை விற்பனை செய்ய முடியாத காரணத்தினால, பொருள்கள் வீணாகிப்போச்சு. நிதி நெருக்கடி காரணமாகவே அலுவலகத்தையும் அங்காடியையும் மூடிட்டாங்க’’ என்றார்.

குருசாமி, இளங்கோவன், வரதராஜன்
குருசாமி, இளங்கோவன், வரதராஜன்

இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவரான சேதுராமனிடம் பேசியபோது, ‘‘இதில் எந்த ஒரு முறைகேடும் நடக்கல. கொரோனாவுக்கு முன்னாடி, சிறப்பாகத்தான் செயல்பட்டுக்கிட்டு இருந்துச்சு. நாங்களே விளைபொருள்களை உற்பத்தி பண்ணி விற்பனைச் செஞ்சதோடு மட்டுமல்லாம, வெளியில் இயற்கை விவசாயிகள்கிட்ட இருந்தும் விளைபொருள் களைக் கொள்முதல் பண்ணி விற்பனை செஞ்சோம். லாபகரமாக இயங்கினதுனாலதான், அலுவலகத்துக்கு மாசம் 15,000 வாடகை, ஊழியர்களுக்குச் சம்பளம் எல்லாம் கொடுக்க முடிஞ்சது. கொரோனானால பல மாதங்கள் அலுவலகமும் கடையையும் மூட வேண்டியதாப் போயிடுச்சு. கூடிய சீக்கிரம் நிலைமை சரியாகிடும்’’ என்றார்.

ஷேர் சர்டிபிஃகேட்டை ஒப்படைத்துவிடுவேன்!

நிறுவனத்தின் இயக்குநரான குருசாமி என்கிற சரவணன் ‘‘இந்நிறுவனம் தொடங்கப்பட்டபோது, நெல் ஜெயராமன் செயலாளராகவும், நான் பொருளாளராகவும் இருந்தோம். ஆனால், தலைவர் வரதராஜனின் அலட்சியம் காரணமாக, காலப்போக்கில் எங்களது நிறுவனத்தின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டது. பொருளாளர் பதவியிலிருந்தும், வங்கிக் கணக்கை இயக்கும் பொறுப்பிலிருந்தும் நான் விலகிக்கொண்டேன். ஷேர் சர்டிஃபிகேட் இன்னும் பலருக்குக் கொடுக்கப்படாமல் இருப்பதற்கு வரதராஜன்தான் காரணம். ‘உங்கள் பகுதிகளில் உள்ள பங்குதாரர்களை ஒன்றாகக் கூட்டுங்கள்... நானே நேரடியாக வந்து ஆவணங்களில் கையெழுத்து வாங்கிய பிறகு, ஷேர் சர்டிஃபிகேட்டை ஒப்படைக்கிறேன்’ என்கிறார். இது சாத்தியமே இல்லை. என் மூலமாகப் பங்குத்தொகை செலுத்திய விவசாயிகள், ஆரம்பத்தில் இதில் ஆர்வமாக இருந்தார்கள். இந்நிறுவனம் சரியாகச் செயல்படாததால், விரக்தி அடைந்துவிட்டார்கள். அவர்களை ஒரே இடத்துக்கு வரவழைத்துக் கூட்டம் நடத்துவது சாத்தியம் இல்லை. என்னிடம் ஷேர் சர்டிஃபிகேட்டை கொடுத்துவிட்டால், நானே அவர்களது வீடுகளுக்குச் சென்று கையெழுத்து பெற்று, ஷேர் சர்டிஃபிகேட்டை ஒப்படைத்துவிடுவேன்’’ என்கிறார்.

அலைபேசியை எடுங்க... அத்தனையும் படம் புடிங்க... அப்படியே அனுப்புங்க...

முறையான விசாரணை நடத்தப்படும்!

திருவாரூர் மாவட்ட வேளாண் விற்பனைப் பிரிவு துணை இயக்குநர் லட்சுமி காந்தனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ‘‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் விற்பனை பிரிவு கண்காணிக்க வேண்டும் எனக் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், நபார்டு வங்கியின் கீழ் தொடங்கப்பட்டிருந்தாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழ் தொடங்கப்பட்டிருந்தாலும், அனைத்தும் அரசுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயிகளிடம் பங்குத் தொகை பெற்றால் கண்டிப்பாக, ஒரு குறிப்பிட்ட நாள்களுக்குள் ஷேர் சர்டிஃபிகேட் கொடுக்கப்பட வேண்டும். முறையாகக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். தாய்மண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, முறையான விசாரணை நடத்திக் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலன் கருதி, இந்நிறுவனம் மீண்டும் சிறப்பாகச் செயல்படுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்’’ என்றார்.