Published:Updated:

ஆன்லைனில் பதிவுசெய்தால் மட்டுமே நெல் கொள்முதல்... சாதக பாதக அலசல்!

நெல் கொள்முதல்

நேரடி கொள்முதல் மையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் முதலில் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட முறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆன்லைன் முறையின் சாதக, பாதகங்கள் என்ன?

ஆன்லைனில் பதிவுசெய்தால் மட்டுமே நெல் கொள்முதல்... சாதக பாதக அலசல்!

நேரடி கொள்முதல் மையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் முதலில் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட முறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆன்லைன் முறையின் சாதக, பாதகங்கள் என்ன?

Published:Updated:
நெல் கொள்முதல்

விவசாயிகள் தாங்கள் விளைவித்த தானியங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் இயக்கப்படும் நேரடி கொள்முதல் மையங்களில் விற்பனை செய்கிறார்கள். நேரடி மையங்களில் தானியங்களை விற்பனை செய்யும்போது, அங்கு பல்வேறு பிரச்னைகள் காரணமாக பல மணி நேரம் அல்லது பல நாள்கள் விவசாயிகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் வெட்டவெளியில் பல நாட்கள் கிடக்கின்றன. பல நேரத்தில், மழையில் நனைந்து அவை வீணாகின்றன.

நெல் மூட்டைகள்
நெல் மூட்டைகள்

ஆகவே, தாமத்தைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில்தான், நேரடி கொள்முதல் மையங்களில், நெல் விற்பனை செய்ய வேண்டுமென்றால், விவசாயிகள் முன்கூட்டியே ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் என்ற புதிய முறையை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொண்டுவந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த புதிய முறையின் கீழ், நேரடி கொள்முதல் மையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணையத்தில் முதலில் பதிவுசெய்ய வேண்டும். விவசாயி பெயர், நிலம் தொடர்பான விவரம், ஆதார் மற்றும் வங்கிக்கணக்கு போன்ற விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும்.

அந்த விவரங்களை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சரிபார்த்து உறுதிசெய்வார். அதன் பிறகு, நெல் விற்பனை செய்ய வேண்டிய நேரடி கொள்முதல் மையம் தொடர்பான விவரங்கள், தேதி மற்றும் நேரம் ஆகியவை விவசாயியின் செல்போன் நம்பருக்கு அனுப்பிவைக்கப்படும். குறிப்பிட்ட அந்த நேரத்தில் நெல் மூட்டைகளைக் கொண்டுசென்று விற்பனை செய்யலாம். இதனால், தேவையின்றி காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

நெல்
நெல்

எல்லாம் சரிதான். ஆனால், விவசாயிகளில் பலர் எழுதப்படிக்கவே தெரியாத நிலையில், அவர்களை ஆன்லைனில் பதிவுசெய்யுங்கள் என்று சொன்னால் எப்படி என்ற கேள்வி எழுந்தது. அதற்கு, ஆன்லைனில் பதிவுசெய்யும்போது ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு சில சிரமங்கள் இருக்கும். ஆனால், கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று அதிகாரிகள் கூறினார்கள். மேலும், ஆன்லைனில் பதிவுசெய்வதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அதை நாங்கள் சரிசெய்துவிடுவோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைக்கு தொழில்நுட்பத்தைக் கொண்டு தீர்வுகாணப்படுவது வரவேற்கத்தக்கதுதான் என்று விவசாய அமைப்புகளைச் சேர்ந்த சிலர் கூறினர். அதே நேரத்தில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் விவசாயிகளுக்கு இருக்கும் சிரமங்களைப் புரிந்துகொண்டு, தேவைப்படும் உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும், அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

நெல் மூட்டைகள்
நெல் மூட்டைகள்

நெல் விற்பனையில் சிறு குறு விவசாயிகள் சில பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளைக் கொண்டு செல்ல அவர்கள் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு, போக்குவரத்து பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனால், இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய சூழல் இருக்கிறது.

நேரடி கொள்முதல் மையங்களில் தரப்படும் விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு இடைத்தரகர்களிடம் விற்பனை செய்கிறார்கள். எனவே, நடமாடும் நேரடி கொள்முதல் மையங்களைக் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் கோருகிறார்கள். விவசாயிகளின் இந்தக் கோரிக்கை பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறது.

இந்த நிலையில்தான், காலதாமத்தைத் தவிர்ப்பதற்காக ஆன்லைனில் பதிவுசெய்யும் முறையை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொண்டுவந்திருக்கிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் விவசாயிகள் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், ``ஆன்லைன் பதிவு முறையால் விவசாயிகள் தேவையில்லாமல் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ள நடைமுறைப்படி கேட்கும் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

சண்முகம்
சண்முகம்

அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும், ஆன்லைன் பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழகத்தில் விளைச்சலுக்கு ஏற்ப நேரடி கொள்முதல் மையங்களின் எண்ணிக்கை இல்லை. வியர்வை சிந்தி பாடுபட்ட விவசாயிகள் நெல்மணிகளை அறுவடை செய்து தங்களின் உழைப்புக்கான பலனைப் பெற வேண்டிய நேரத்தில், ஆன்லைனில் பதிவுசெய்யும் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்வோம் என்கிற முறை விவசாயிகளிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், பெரும்பாலான அப்பாவி விவசாயிகளுக்கு ஆன்லைனில் பதிவுசெய்வது என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் மற்றவர்களின் உதவியை நாடிச்செல்ல வேண்டிய தேவை ஏற்படுகிறது. வருவாய்த்துறை அலுவலர்களின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. இதனால் ஏற்படும் காலதாமதத்தால், உரிய நேரத்தில் நெல் அறுவடை செய்ய முடியாமல் , வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள்.

இதனால் காலதாமதம் ஏற்படுமானால் இடைத்தரர்களை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டு, அவர்களிடம் சிக்கி சீரழிந்துவிடுவோமோ என்ற அச்சமும் விவசாயிகளிடம் ஏற்பட்டிருக்கிறது. ஆன்லைன் பதிவு முறையை எதிர்த்து தி.மு.க-வின் கூட்டணியில் இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளே ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எனவே, ஆன்லைன் பதிவு என்பதைக் கட்டாயமாக்காமல், ஏற்கெனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். அதிக எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். தார்ப்பாய், சாக்கு, சணல் போன்ற பொருள்களை அதிகளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு போதுமான அளவுக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism