Published:Updated:

மேக்கேதாட்டூ: `விரைவில் சட்டரீதியான நடவடிக்கையும் எடுப்போம்!' - புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர்

புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன்
புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன்

``காவிரி நடுவர் தீர்ப்பாயத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை மாற்றும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருக்கிறது. காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை”.

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களையும், புதுச்சேரியில் காரைக்கால் பகுதியையும் சேர்த்து சுமார் 28 லட்சம் ஏக்கர்களில் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, உளுந்து, சோளம் போன்றவை காவிரி நீரினால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணையை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், அதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் விவாதித்து தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கிறது.

மேக்கேதாட்டூ
மேக்கேதாட்டூ
மேக்கேதாட்டூ அணைக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு; பிரதமருக்கு கடிதம் எழுத ரங்கசாமி முடிவு?

அதன் தொடர்ச்சியாக முதல்வர் ரங்கசாமி நேற்று தனது அலுவலகத்தில் மேக்கேதாட்டூ அணை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ``காரைக்கால் கடைமடைப் பகுதி விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு அச்சுறுத்தல் வந்துள்ளது. கர்நாடக அரசு மேக்கேதாட்டூவில் அணை கட்டி தமிழகத்திற்கும், புதுவைக்கும் வரவேண்டிய நீரை தடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தடுக்க முயற்சி எடுத்துள்ளது,

கடந்த 2018-ல் இருந்து அதனை தடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். தற்போது, தமிழக எல்லையில் 67 டி.எம்.சி அளவில் தண்ணீர் தேக்கும் திட்டத்தை கர்நாடக அரசு துவக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. புதுவைக்கு 7 டி.எம்.சி தண்னீர் கொடுக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதிலேயே ஏற்கனவே சிக்கல்கள் உள்ளன.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு
மேக்கேதாட்டூ: `ஒன்றிணைவோம் வா எனச் சொன்ன முதல்வர், எங்களை ஒதுக்கியது ஏன்?' - விவசாயிகள் ஆதங்கம்

அந்த சிக்கலை இன்னும் அதிகபடியாக்குவது போல மேக்கேதாட்டூவில் அணை கட்டுவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல். அதனை தடுக்க வேண்டும் என்று தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த அனைத்து சமுதாய அமைப்புகளும், விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளன.

அதனடிப்படையில் நேற்று முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதில் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நீர்பாசன அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என கடிதம் எழுத முடிவு செய்து அதன்படி கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை மாற்றும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருக்கிறது. மழை இல்லாத காலங்களில் காரைக்காலுக்கு 7 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என காவிரி நடுவர் தீர்ப்பாயத்தில் உத்தரவாதம் உள்ளது. ஆனால் தற்போது மேக்கேதாட்டூ அணை கட்டுவது மூலமாக 7 டி.எம்.சி தண்ணீர் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும்.

மேக்கேதாட்டூ அணைக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு; பிரதமருக்கு கடிதம் எழுத ரங்கசாமி முடிவு?

உச்சநீதிமன்றத்தின், தீர்ப்பையும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மாற்றுவது போல கர்நாடக அரசின் நடவடிக்கைள் இருக்கின்றன. காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. காரைக்கால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைப் பறிக்கும் முயற்சியைத் தடுக்க முதல்வர் தயாராக இருக்கிறார். நிர்வாக ரீதியாக தற்போது கடிதம் மூலம் தடுக்க முயற்சி செய்து வருகிறோம். தேவைப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வதுடன், அனைத்துக் கட்சி கூட்டத்தையும் நம் முதல்வர் கூட்டுவார். இந்த விவகாரத்தில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவது குறித்து அந்த நேரத்திற்கு தகுந்ததுபோல முடிவெடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு