Published:Updated:

கேள்விக்குறியான மலை மாடுகளின் மேய்ச்சல் உரிமை...? வாழ்வாதாரத்தை இழக்கும் கீதாரிகள்!

மாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
மாடுகள்

பிரச்னை

கேள்விக்குறியான மலை மாடுகளின் மேய்ச்சல் உரிமை...? வாழ்வாதாரத்தை இழக்கும் கீதாரிகள்!

பிரச்னை

Published:Updated:
மாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
மாடுகள்

வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்க்கத் தடை விதித்த உயர் நீதிமன்றத்தின் (மதுரைக் கிளை) உத்தரவால் மலை மாடு, ஆடு வளர்க்கும் கீதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யவும், கால்நடைகள் மற்றும் மேய்ப்பவர் களின் வாழ்வாதாரத்தில் அக்கறை கொண்டு அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஆடு, மாடு வளர்க்கும் கீதாரிகள் சரியான வருவாய் இல்லாமல், வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களாலும், சமூக விரோதிகளாலும் பாதிக்கப்பட்டுச் சமூக அந்தஸ்தும் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், உயர் நீதி மன்றத்தின் உத்தரவு, அவர்கள் வாழ்க்கையில் இடியாக இறங்கியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ‘‘அதிக வனப்பகுதியைக் கொண்ட தேனி மாவட்டத்தில் இயற்கை சூழ்ந்த மேகமலை வனப்பகுதி முக்கியமானது. இங்கு உற்பத்தியாகும் தண்ணீர்தான் முல்லை பெரியாறு, வைகை ஆற்றுக்குச் செல்கிறது. இந்த நீரை நம்பித்தான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் உள்ளனர். இந்த வனப்பகுதியில் புலிகள் சரணாலயமும், அரியவகை அணில்கள் சரணாலயமும் அமைந்துள்ளன.

மாடுகள்
மாடுகள்

இப்பகுதியில் சிலர் வணிக நோக்கில் மலைமாடுகளையும் ஆடுகளையும் வளர்த்து மேய்ச்சலுக்கு விடுகிறார்கள். இவற்றால் மேகமலை வனப்பகுதி அழிவுக்கு உள்ளா கிறது. தங்கள் கால்நடைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வன விலங்குகளுக்கு விஷம் வைக்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக் குறை ஏற்படுவதால் வன விலங்குகள் கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர்கின்றன. அதனால், இதற்குக் காரணமான கால்நடை மேய்ச்சலுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

‘‘பல்லுயிர் பெருக்கத்துக்கு அடிப்படையான மேய்ச்சல் தொழில் அழியாமல் பாதுகாக்கத் தமிழக அரசுக் கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.’’

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்குத் தடை விதிப்பதாக உத்தரவிட்டார்கள். இந்த உத்தரவால் அதிர்ந்துபோனார்கள் ஆடு மாடு வளர்ப்போர். உத்தரவு வந்து ஒருமாத காலத்துக்கும் மேலான நிலையில், ‘தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் அரசு மேல்முறையீடு செய்து, வனப்பகுதியில் கால்நடைகள் வளர்ப்பதற்கான உரிமையைப் பெற்றுத் தர வேண்டும்’ எனப் பல்வேறு மாவட்டங்களிலும் கால்நடை வளர்ப்போர் அரசுக்குக் கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் கண்ணன், ‘‘தேனி மாவட்டத்தில மேற்குத் தொடர்ச்சி மலையை நம்பி ஒரு காலத்துல 1,25,000 மலைமாடுகள் இருந்துச்சு. ஆனா, வனத்துறை கெடுபிடியால இப்ப, 15,000-க்கும் குறைவான மலைமாடுகள்தான் இருக்குது. மேகமலை வனப்பகுதிகள்லதான் மலைமாடுகளை மேய்க்கக் கூடாதுனு வழக்குத் தொடரப்பட்டது.

மாடுகள்
மாடுகள்

ஆனா, உயர் நீதிமன்றமோ ஒட்டு மொத்தமாகத் ‘தமிழகத்தில் உள்ள வனப் பகுதிகள்ல மலைமாடுகளை மேய்க்கக் கூடாது’னு உத்தரவு போட்டிருக்குது. இதை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யணும். மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரிடம் வலியுறுத்தணும்’’ என்றார்.

நாட்டு மாடுகள் பாதுகாப்புக்காகவும், கீதாரிகளின் வாழ்வாதாரத்துக்காகவும் இயங்கி வரும் மதுரை தொழுவம் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் பெரி.கபிலனிடம் பேசினோம். “பல சோதனைகளையும் வேதனைகளையும், இடி மின்னல், மழை வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளையும் சந்தித்து வரும் கீதாரிகள், இந்த நீதிமன்ற உத்தரவை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். பல்லுயிர் பெருக்கத்துக்கு அடிப்படையான மேய்ச்சல் தொழில் அழியாமல் பாதுகாக்கத் தமிழக அரசுக் கொள்கை முடிவை எடுக்கவும், தமிழகத்தில் மேய்ச்சல் நிலங்கள் குறித்த தெளிவான வரைபடம் வெளியிடவும், மேய்ச்சலில் ஈடுபடுவோர் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். மருத்துவர் இல்லாத இடத்தில் வேறொரு மருத்துவரோ, ஆசிரியர் இல்லாத இடத்தில் வேறோர் ஆசிரியரோ அமர்த்திக்கொள்ளலாம், பாரம்பர்ய அறிவு கொண்ட மேய்ச்சல் சமூகக் கீதாரிகளை இழந்தால் இந்த மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு ஏற்படும் என்பதை உணர்ந்து பாரம்பர்ய வன உரிமையை அரசு பெற்றுத் தர வேண்டும்.

போராட்டத்தில்
போராட்டத்தில்

இயற்கை முறையில் வேளாண்மை செய்யக்கூடிய உழவர்களுக்கு இந்த மாடுகளின் சாணங்களே மிக முக்கிய எருவாக அமைகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணை வளமாக வைத்திருப்பவை இந்தக் கிடை மாடுகளும், மலைமாடுகளும் தான். மன்னர் ஆட்சிக் காலத்தில் மாட்டுத்தொழுவம் எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட வனப்பகுதிகளில் ‘மாடு பாதம்’ பதித்த குறியீடுகள் பொறித்து வைத்தார்கள். மாடு பாதம் உள்ள இடத்தில் கொடிய விலங்கு களின் நடமாட்டம் இருக்காது என அறிந்து அங்கு இடத்தேர்வு செய்தனர். இந்தத் திணைத் தொழிலுக்காகப் பொறித்த கல்வெட்டுகள் இன்றும் தமிழ்ப் பண்பாட்டின் வயதையும் அறிவையும் மதிப்பிட உதவுகிறது.

ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய்த போது நம் மக்களிடம் எழுந்த எழுச்சி, நாட்டு மாடுகளின் வாழ்வாதாரம் சம்பந்தமாக விதிக்கப்பட்டுள்ள தடைகுறித்துச் சமூகத்தில் எந்த அசைவும் எழவில்லை என்பது கவலை யாக உள்ளது. இந்த வழக்கில் நாங்கள் மேல்முறையீடு செய்து கீதாரிகளின் நியாயத்தை நீதிமன்றத்தில் சொல்வோம்’’ என்றார்.

பெரு வியாபாரிகளுக்கு எதிரானது!

“இந்த உத்தரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மாடு வளர்ப்போர் போராட்டம் நடத்துகிறார்களே” என்று வழக்கு தாக்கல் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகனிடம் கேட்டோம், “இந்த வழக்கு மாடு வளர்ப்போருக்கு எதிரானது அல்ல. வர்த்தக ரீதியாக மாடு வளர்க்கும், வனத்தை அழிக்க நினைக்கும் சிலருக்கு எதிரானது. நான் பல வருடங்களாகப் பொதுமக்கள் நலனுக்கு வழக்கு தொடுப்பவன். மக்கள் பாதிக்கப்படும் வகையில் எந்த வழக்கும் நடத்த மாட்டேன். இதைப் புரிந்துகொள்ள விடாமல் கால்நடை மேய்ப்போர்களைச் சிலர் தூண்டி விடுகிறார்கள்.

மேகமலை வனப்பகுதி புலிகள் சரணாலயமாகவும், வரையாடுகள் காப்பகமாகவும் இருந்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக வரையாடுகளைக் காண முடியவில்லை. இதற்குக் காரணம் வன அழிப்புதான். வியாபாரிகள் சிலர் மாடுகளை மொத்தமாக வாங்கி அதற்கு எந்தத் தீவனமும் கொடுக்காமல் அவற்றை அப்படியே வனத்துக்குள் அனுப்பி விடுகிறார்கள். இதனால், வனத்தின் இயற்கை அழிகிறது. வன விலங்குகளின் இனப்பெருக்கச் சுழற்சி மாறி ஒட்டுமொத்த சூழலும் கெடுகிறது. இதை அறிவியல்பூர்வமாக விசாரித்துப் பல தரவுகளுடன் வழக்கு தாக்கல் செய்தேன்.

புலிகளும், யானைகளும் வனத்தில் இல்லையென்றால் நமக்கு நீராதாரமே இல்லாமல் போய்விடும். வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடுகின்ற கால்நடைகள் மிகக்குறைவுதான். இன்றும் சமவெளிப்பகுதியில் ஆடு மாடு மேய்ப்பது நடந்து கொண்டுதானிருக்கிறது. அவர்களால் யாருக்கும் பிரச்சனையில்லை. அப்படியே மேய்ச்சல் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அதை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டும். அதைவிட்டு மலைப்பகுதியில் மாடு மேய்க்க வலியுறுத்துவதன் பின்னணியில் பெரு வியாபாரிகள் உள்ளனர். ஒன்றரை வருடமாக நடந்த வழக்கில் நீதிபதிகள் விசாரிக்காமல், ஆய்வு செய்யாமல் உத்தரவிடமாட்டார்கள். நான் தாக்கல் செய்த வழக்குக் கால்நடை மேய்ப்போருக்கு எதிரானது அல்ல. அடர் வனத்துக்குள் மாடுகளை விடும் பெரு வியாபாரிகளுக்கு எதிராகத்தான்” என்று சொல்லிமுடித்தார்.

 பெரி.கபிலன், திருமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன்
பெரி.கபிலன், திருமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன்

இது குறித்துக் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம், “இதை முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு சென்று கால்நடை வளர்ப்போர் நலனுக்கான நடவடிக்கைகள் எடுப்போம்” என்றார்.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் கேட்டோம், “கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படாத வகையில், அதே நேரம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பரிசீலித்து அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism