Published:Updated:

அமெரிக்காவுக்குப் பறந்த மிளகாய்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு; இயற்கை விவசாயத்தால் கிடைத்த வாய்ப்பு!

மிளகாய்
பிரீமியம் ஸ்டோரி
மிளகாய்

அங்கீகாரம்

அமெரிக்காவுக்குப் பறந்த மிளகாய்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு; இயற்கை விவசாயத்தால் கிடைத்த வாய்ப்பு!

அங்கீகாரம்

Published:Updated:
மிளகாய்
பிரீமியம் ஸ்டோரி
மிளகாய்

ராமநாதபுரம் மாவட்டம் என்று சொன்னாலே வறட்சிதான் நினைவுக்கு வரும். ஆனால், அந்த நிலை தற்போது மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகமும் இப்பகுதி விவசாயிகளும் மழைநீர் சேகரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதால், இங்கு நீர்வளம் மேம்பாடு அடைந்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் விவசாய உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கோடைக்கால சாகுபடியிலும் இப்பகுதி விவசாயிகள் அசத்தி வருகின்றனர். இம்மாவட்டத்தின் முதன்மை பயிராக நெல்லும், அதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரத்துக்கே உரிய முண்டு மிளகாய் மற்றும் பருத்தி, சோளம், குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மிளகாய்
மிளகாய்

அதிக ரசாயன உரங்கள்... வளமிழந்த நிலங்கள்

இது வானம் பார்த்த பூமி. ஆண்டுதோறும் கிடைக்கும் மழைநீரை சேமித்துதான் பாசனம் செய்ய வேண்டும். இதனால் குறுகிய காலத்தில் அதிக மகசூல் எடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிக அளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தியதால், மண்வளம் குன்றி, இப்பகுதி விவசாயிகள் பலவிதமான பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில்தான் இவர்களில் சிலர் இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்து வெற்றி கண்டுள்ளனர்.

கமுதியைச் சேர்ந்த விவசாயி ராமர், இயற்கை முறையில் முண்டு மிளகாய் சாகுபடி செய்து, அதை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து அசத்தி வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம், இயற்கை விவசாயத்தில் நெல் மற்றும் பருத்திச் சாகுபடி செய்து நிறைவான லாபம் பார்த்து வருகிறார். இயற்கை விவசாயத்தின் மூலம் சாதிக்க முடியும் என்று நிரூபித்த இவர்கள் இருவரும்தான் தற்போது பிரதமர் மோடியைச் சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

ராமர்
ராமர்

ராமரை சந்திக்கச் சென்றோம். அடுத்த போகத்துக்கு நிலத்தைத் தயார் செய்துகொண்டிருந்தவர், இன்முகத்துடன் நம்மை வரவேற்று, மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார். ‘‘பிரதமரை சந்திக்குற அளவுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக் கும்னு நான் கற்பனைகூட செஞ்சு பார்த்ததில்ல. எனக்கு இது மிகப் பெரிய அங்கீகாரம். இயற்கை விவசாயத்தாலதான் இந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்திருக்கு.

இது ஏற்கெனவே வறண்ட பூமி. இதுல அளவுக்கதிகமா ரசாயன உரங்கள் போட்டதுனால மண்ணு மலடாகி, படிப்படியா மகசூல் குறைஞ்சிகிட்டே வந்துச்சு. உழைப்புக் கேத்த லாபம் கிடைக்காததால, விவசாயத்தை விட்டுட்டு வேற வேலைக்குப் போகலாம்னு யோசனை பண்ண ஆரம்பிச்சிருந்தேன். அந்தச் சமயத்துலதான் எங்க ஊர் கே.வி.கே-வுல விவசாயிங்களுக்கான ஆலோசனை முகாம் நடத்தினாங்க. எதுக்கும் போயி பார்க்கலாமேனு எங்க ஊரு விவசாயிங்களோட சேர்ந்து நானும் அங்க போனேன். அவங்கதான் இயற்கை விவசாயத்தோட நன்மைகளைப் பத்தி விரிவா எடுத்து சொன்னாங்க. எனக்கு நம்பிக்கை ஏற்பட்டு, இதுல இறங்கினேன்.

கடந்த அஞ்சு வருஷமா இயற்கை விவசாயத்துல பெங்களூர் தக்காளி, குண்டு மிளகாய், வெண்டி, வாழைனு எல்லா வகையான பயிர்களையும் சாகுபடி செய்றேன். சொட்டுநீர்ப் பாசனம் மூலம் பயிர்களுக்குத் தண்ணி கொடுக்குறேன். மண்ணு நல்லா வளமா இருக்குறதால குறைவான தண்ணியிலேயே பயிர்கள் நல்லா செழிப்பா வளர்ந்து மகசூல் கொடுக்குது.

ராமர்
ராமர்


இந்த நிலையிலதான் எஸ்.4 ரக மிளகாய் சாகுபடி செஞ்சிப் பாருங்க... நல்ல லாபம் கிடைக்க வாய்ப் பிருக்குனு கே.வி.கே விஞ்ஞானிகள் ஆலோசனை சொன்னாங்க. 8 ஏக்கர்ல பயிரிட்டேன். நல்ல விளைச்சல் கிடைச்சது. இந்த மிளகாயை வெளிமாநிலங்கள்ல இருந்து வந்து வாங்கிக்கிட்டு போனாங்க.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாம்னு சொல்லி ஏற்றுமதியாளர் ஒருத்தர், என்னோட மிளகாயை அமெரிக்காவுக்குத் தர ஆய்வுக்கு அனுப்பி வச்சார். அனுமதி கிடைச்சி ஏற்றுமதி செய்ற வரைக்கும் மிளகாயைத் தரம் குறையாம பாதுகாக்கணுங்கறதுக்காக, சூரங்குடி குளிர்பதன சேமிப்பு கிடங்குல வச்சிருந்தேன்.

அமெரிக்காவுல தர ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் கிடைச்சது. அரசு அதிகாரிங்க முன்னிலை யில 12 டன் மிளகாயை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாளர் அனுப்பி வச்சார். தமிழ்நாட்டோட கடைக்கோடியில உள்ள ஒரு குக்கிராமத்துல இயற்கை முறையில விளைவிக்கப்பட்ட மிளகாய் முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுருக்கு. இது எனக்கு மட்டுமல்ல... ராமநாதபுரம் மாவட்டத்துக்கே பெருமைனு நண்பர்கள் சொல்றாங்க. இந்த நிலையிலதான் கூடுதல் பெருமை சேர்க்குற விதமா டிஜிட்டல் இந்தியா விழாவுல பிரதமர் மோடியை சந்திச்ச வாய்ப்பு கிடைச்சது’’ என்றார் உற்சாகத்துடன். இவரைப் போலவே, இப்பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி முத்துராமலிங்கமும் மிகுந்த நெகிழ்ச்சியில் உள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வில்
குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வில்

பிரதமரை சந்தித்துக் கலந்துரையாட இந்த இரு விவசாயிகளும் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து நம்மிடம் பேசிய ராமநாதபுரம் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குநர் சேக் அப்துல்லா, ‘‘ராமநாதபுரம் மாவட்டம் மத்திய அரசின் வளரும் மாவட்டங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு நடத்தும் டிஜிட்டல் இந்தியா வார விழாவில், பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாட ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 2 விவசாயிகளைத் தேர்வு செய்து அனுப்புமாறு தமிழக அரசு சார்பில் எங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி ராமநாதபுரத்தில் இயற்கை விவசாயத்தில் தங்களைத் தனித்தன்மையுடன் அடையாளம் காட்டிவரும் ராமர் மற்றும் முத்து ராமலிங்கம் ஆகிய விவசாயிகளைத் தேர்வு செய்துள்ளோம். கடந்த ஜூலை 1-ம் தேதி டெல்லியில் நடைபெறவிருந்த விழா ஜூலை 4-ம் தேதி குஜராத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி குஜராத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்ட டிஜிட்டல் இந்தியா நிகழ்வில் இரண்டுபேரும் கலந்துகொண்டார்கள்’’ எனத் தெரிவித்தார்.

தொடர்புக்கு, ராமர்,

செல்போன்: 91594 05051