Published:Updated:

மேக்கேதாட்டூ:`விவசாயிகளைக் காக்க புதுச்சேரியும் இதைச் செய்யவேண்டும்!' - ரவிக்குமார் எம்.பி

மேக்கேதாட்டூ
மேக்கேதாட்டூ

``காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது. அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும்."

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணையைக் கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசைப்போல புதுச்சேரி அரசும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார் விழுப்புரம் மாவட்ட எம்.பி ரவிக்குமார்.

அந்தக் கோரிக்கையில், ``புதுச்சேரி மாநிலத்தின் பிரத்யேகமான புவியியல் சூழல் இங்கு தண்ணீரை சேமித்து வைக்கும் நீர்த்தேக்கம் கட்டுவதற்கு உகந்ததாக இல்லை. இங்குள்ள நிலம் களிமண் நிலமாக இருப்பதால் நெல்லைத் தவிர, வேறு பயிர் எதையும் சாகுபடி செய்ய முடியாது. புதுச்சேரியில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பான 27,000 ஏக்கர் என்பது நீண்டகாலமாக நிலையானதாக மாறாமல் உள்ளது.

புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரை சந்தித்த ரவிக்குமார் எம்.பி
புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரை சந்தித்த ரவிக்குமார் எம்.பி
மேக்கேதாட்டூ விவகாரம்: தொடங்கும் போராட்டங்கள்; ஆயத்தமாகும் டெல்டா விவசாயிகள்!

இங்குள்ள விவசாயம் பெரிதும் வடகிழக்குப் பருவமழையைத் தான் நம்பியுள்ளது. அதுமட்டுமன்றி கடலோரப் பகுதி முழுவதும் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. எனவே, புதுச்சேரி மாநில விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளனர். காவிரிப் பிரச்னை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் நம்பியார், புதுச்சேரிக்கு 9 டி.எம்.சி தண்ணீர் வேண்டும் என வாதாடினார்.

ஆனால், நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 7 டி.எம்.சி தண்ணீரைத்தான் உச்ச நீதிமன்றமும் ஒதுக்கியது. நடுவர் மன்றம் புதுச்சேரியில் குறுவை மற்றும் சம்பா இணைந்த முதல்போக சாகுபடி 27,145 ஏக்கரில் நடப்பதாகவும், தாளடி என்னும் இரண்டாம் போக சாகுபடி 15,388 ஏக்கரில் நடப்பதாகவும் உறுதி செய்தது. புதுச்சேரியின் பிரத்யேகமான புவியியல் நிலையை கருத்தில்கொண்டு அங்குள்ள விவசாயிகள் இரண்டு போகம் சாகுபடி செய்வதற்கான உரிமையை உச்ச நீதிமன்றமும் தனது இறுதித் தீர்ப்பில் அங்கீகரித்துள்ளது.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

அதற்காக ஒதுக்கப்பட்ட 7 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டின் வழியாக நந்தலாறு, நட்டாறு, வஞ்சி ஆறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, பிரவிடையான் ஆறு ஆகிய 7 ஆறுகளின் மூலம் புதுச்சேரி பெற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது.

அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும். மேக்கேதாட்டூவில் அணையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதோடு அரசியல் ரீதியில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர நேற்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. புதுச்சேரி அரசும் உடனடியாக இந்தப் பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் பகுதியில் நடைபெற்றுவரும் விவசாயம் முற்றாக அழியும் நிலை ஏற்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேக்கேதாட்டூ அணை அமையவிருக்கும் இடம்
மேக்கேதாட்டூ அணை அமையவிருக்கும் இடம்
மேக்கேதாட்டூ அணை: `மத்திய அரசை நம்பி மட்டும் தமிழகம் இருந்துவிடக்கூடாது!' - எச்சரிக்கும் விவசாயிகள்

சந்திப்பைத் தொடர்ந்து பேசிய எம்.பி ரவிக்குமார், ``காவிரிநீர் உரிமையை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நிலைநாட்ட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதுடன், தமிழ்நாடு அரசுடன் இணைந்து புதுச்சேரியின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்டத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு