Published:Updated:

உயர் மின்அழுத்த கோபுரம்; விவசாயி தற்கொலை!’ - சேலத்தில் 4வது நாளாக உடலை வாங்க மறுத்துப் போராட்டம்

போராட்டம்
போராட்டம் ( எம்.விஜயகுமார் )

வெட்டிக் கிடந்த மரத்தை கட்டித் தழுவி கதறி அழுத விவசாயி பெருமாள் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்தார்.

சேலத்தில் உயர் மின் அழுத்தக் கோபுரம் அமைப்பதற்காக நங்கவள்ளி பள்ளக்கானூரைச் சேர்ந்த விவசாயி பெருமாளுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டது. இதனால், மனமுடைந்த விவசாயி பெருமாள் கடந்த 17-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து அவருடைய குடும்பத்தாரும் உறவினர்களும், விவசாய அமைப்பினரும் சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடி வருகிறார்கள்.

விவசாய அமைப்பு
விவசாய அமைப்பு
எம்.விஜயகுமார்

இதுபற்றி தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, ''பவர் கிரிட் நிறுவனமும் தமிழக அரசும் இணைந்து சத்தீஸ்கர் மாநிலம் ரெய்ச்சூரிலிருந்து திருப்பூர் மாவட்டம் புகழூர் வரை உயர் மின் அழுத்தக் கோபுரங்கள் விளை நிலங்கள் வழியாகக் கொண்டு வருகிறார்கள். இதற்காக, விவசாயிகளிடம் அனுமதி பெறாமலும், இழப்பீடு கொடுக்காமலும் காவல்துறையைக் கொண்டு மிரட்டி விவசாயிகளின் விளை நிலத்தில் அத்துமீறி நுழைந்து மரங்களையும் பயிர்களையும் நாசமாக்குகிறார்கள்.

கடந்த வாரம் சேலம் மாவட்டம் நங்கவள்ளி பள்ளக்கானூரைச் சேர்ந்த விவசாயி பெருமாளுக்குச் சொந்தமான 2 1/2 ஏக்கர் நிலத்தில் இருந்த மரங்களை அவருடைய அனுமதி இல்லாமல், இழப்பீடு வழங்காமல் காவல்துறையினரால் மிரட்டப்பட்டு 20 ஆண்டுகளாகப் பிள்ளைகளைப்போல வளர்த்த மரங்களை நொடிப் பொழுதில் வெட்டிச் சாய்த்துவிட்டார்கள். வெட்டிக் கிடந்த மரத்தை கட்டித் தழுவி கதறி அழுத விவசாயி பெருமாள் மனமுடைந்த பூச்சி மருந்து குடித்தார்.

அதையடுத்து அவரைச் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி 17-ம் தேதி மதியம் 1.30 மணிக்குக் காலமானார். அவரின் இறப்புக்குக் காரணமான பவர் கிரிட் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். நிலத்தில் இருந்த பயிர் மற்றும் மரத்துக்கான சேதாரமாக இழப்பீடு தொகை இரட்டிப்பு செய்து வழங்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று நான்காவது நாளாகப் போராடியும் பலன் இல்லை. அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. அரசு இறங்கி வந்து பாதிக்கப்பட்ட விவசாயி பெருமாளின் குடும்பத்துக்கு உதவ முன் வர வேண்டும். அதுவரை பெருமாளின் உடலை வாங்க மாட்டோம்'' என்றார்.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்
எம். விஜயகுமார்

இதுபற்றி இறந்துபோன பெருமாளின் மனைவி அன்னக்கிளி, ''என் கணவரையும் காட்டையும் நம்பி வாழ்ந்து வந்தோம். இரண்டுமே எங்க கையைவிட்டு போயிடுச்சு. நான் எப்படி என் நான்கு பிள்ளைகளையும் கரை சேர்க்கப்போகிறேன். இந்த அரசாங்கம் எங்களுக்கு ஒரு நல்ல முடிவு சொல்ல வேண்டும். அப்போதுதான் என் கணவரின் உடலை வாங்குவோம்'' என்று கண்ணீர் வடித்தார்.

இதுபற்றி அரசு தரப்பு அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ''அவர்களுடைய கோரிக்கைகளை அரசு தரப்பிடம் எடுத்துரைத்துள்ளோம். சில கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெருமாள் குடும்பத்தினரும் அதற்கு ஒப்புக்கொண்டிருப்பதால் விரைவில் உடலை பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது'' என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு