கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி தீவிரமடைந்துவரும் நிலையில், முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு 136 அடியை எட்டியது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கனமழை தொடர்வதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால் தமிழக நீர்வளத்துறை சார்பில் முல்லை பெரியாறு அணை பொறியாளர்கள் இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியது. அணைக்கு சராசரியாக 7,616 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், தமிழகத்துக்கு அதிகபட்சமாக 2,166 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மத்திய நீர்வளக் கமிட்டியின் ரூல்கர்வ் விதிப்படி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை அணையில் 137.50 அடி வரை மட்டும் தண்ணீர் தேக்க முடியும் என்பதால், தமிழகத்துக்கு அதிகபட்சமாகத் திறக்கப்பட்ட தண்ணீரை தவிர்த்து எஞ்சிய நீர் உபரி நீராக கேரளாவுக்கு திறக்கப்பட்டது.

அதன்படி அணையின் பிரதான 13 மதகுகளில் 3 மதகுகள் மட்டும் தற்போது 30 சென்டி மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டு தலா 534 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து மேலும் 4 மதகுகள் திறக்கப்பட்டு 1,870 கன அடி வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அணையின் நீர்வரத்துக்கேற்ப நீர்மட்டம் 137.50 அடியில் நிறுத்தும் வகையில் கேரளாவுக்குத் திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்படும் என அணை பொறியாளர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் அணையில் 142 அடி நீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாய சங்கத்தினர், ``முல்லை பெரியாறு அணையில் பருவகாலங்களில் மழைநீரை சேமிக்க முடியவில்லை என்றால், கோடைக்காலத்தில் தண்ணீரின்றி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். தமிழகத்துக்கு பாதகமான ரூர்ல்கர்வ் முறையை ரத்து செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டோம்.

ஆனால், தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளோம். சட்டரீதியான போராட்டத்தையும் நடத்த தயாராகிக்கொண்டிருக்கிறோம்'' என்றனர்.