Published:Updated:

`படிமட்டம் இல்லா விவசாயம், நீலகிரியை பாலைவனமாக்கும்!' எச்சரிக்கும் ஆய்வாளர்கள் #WorldSoilHealthDay

நீலகிரி மாவட்டத்தில் படிமட்டம் இல்லாமல் சரிவுப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முறையற்ற விவசாயத்தால் ஒரு ஹெக்டரில் ஆண்டுக்கு 40 டன் மண் அரிப்பு ஏற்பட்டு மண் வளம் இழக்கப்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

top soil erosion
top soil erosion ( Arun.k )

மலைக்கு அரண் காடுகள். அவை அழிக்கப்பட்டு தேயிலையும், காபியும் நடவு செய்யப்பட்டதே சூழலியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது நீலகிரியில் முறையற்ற வகையில் காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. இது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது எனக் கவலைப்படுகிறார்கள் ஆய்வாளர்கள்.

top soil erosion
top soil erosion
வாட்ஸ் அப்பில் காய்கறி விற்பனை! - தொழிலதிபரின் இயற்கை விவசாயம்!

ஆங்கிலேயர் குடியேற்றத்துக்குப் பின்னரே தேயிலை, காபி உள்ளிட்ட பணப்பயிர்களும் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு போன்ற மலை காய்கறிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. சுற்றுலாவுக்கு அடுத்தபடியாகத் தேயிலை மற்றும் காய்கறி பயிர்களே நீலகிரியின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணியாக விளங்குகின்றன.

நீலகிரியில் 55,000 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை, 7,000 ஹெக்டேர் பரப்பளவில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறி பயிர்களுக்கு அதிக அளவிலான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த நிலையில், சரிவுப் பகுதிகளில் படிமட்டம் செய்யாமல் விவசாயம் செய்கிறார்கள். இதனால், டன் கணக்கில் மண் அரிப்பு ஏற்பட்டு மேல் மண் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

top soil erosion
top soil erosion
 ``நஞ்சற்ற விவசாயம்... நல்ல மகசூல்..!"- கலக்கும் காரைக்குடி விவசாயிகள் #MyVikatan

'மலைச்சரிவுகளில் விவசாயம் மேற்கொண்டால் மானியம் வழங்கப்படாது' என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். ஆனால், அதை யாரும் பின்பற்றுவதில்லை. முறையற்ற விவசாயத்தால் தொடர்ந்து மண் இழப்பு ஏற்படுவது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து மத்திய நீர் மற்றும் மண்வள ஆய்வு மைய முதன்மை அறிவியலாளர் மணிவண்ணன் கூறுகையில், "படிமட்டம் இல்லாமல் சரிவுப் பகுதிகளில் விவசாயம் செய்வதால் ஒரு ஹெக்டேருக்கு 40 டன் வரை மண் இழப்பு ஏற்படும். மழைக் காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு அணைகள், ஏரி, குளங்கள் அனைத்திலும் மண் நிரம்பும். இதனால், அங்கு கொள்ளளவு பாதிக்கும். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தண்ணீரைத் தேக்கி வைக்கமுடியாது. அதேபோல் மண்வளமும் பாதிக்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் நீலகிரி விரைவில் வறண்ட பாலையாக மாறும்" என்றார்.

top soil erosion
top soil erosion

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, "நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் அளவுகளைக் கணக்கிடும்போது, ஒரே நாளில் மிக அதிகளவு மழை பெய்கிறது. இதனால் காய்கறி பயிரிடப்படும் சரிவான நிலப்பகுதிகளில் அதிகளவு மண்ணரிப்பு ஏற்படுகிறது. இது நிலச்சரிவுக்குக் காரணமாகிறது. அதிக சத்துள்ள மேல் மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால் மண் வளம் குறைகிறது. இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் சரிவான பகுதிகளில் காய்கறிகளைப் பயிரிடும் முறையைத் தவிர்த்து, படிமட்டங்களில் காய்கறிகளைப் பயிரிட வேண்டும். சரிவான நிலப்பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் படிமட்டம் அமைக்க வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைத் தொடர்புகொண்டு படிமட்டங்கள் அமைத்து வேளாண் பணிகளை மேற்கொள்ளலாம்.

படிமட்டங்களில் பயிர்கள் செய்வதால் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு மண்வளமும், நீர்வளமும் பாதுகாக்கப்படும். மண்ணரிப்பைத் தடுத்திடும் வகையில் படிமட்டங்கள் அமைக்காத விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத்துறை மூலமாகச் செயல்படுத்தப்படும் திட்டங்களில் மானியம் வழங்க இயலாது" என அறிவித்திருந்தார்.

top soil erosion
top soil erosion

இதுகுறித்து கேத்தி பகுதியைச் சேர்ந்த விவசாயி ரவி கூறுகையில், "தேயிலை விலைவீழ்ச்சி காரணமாக ஊட்டி, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு, மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் கனரக உழவு இயந்திரங்களைச் சரிவுப் பகுதியில் பயன்படுத்தி உழவுப் பணிகளை மேற்கொள்கின்றனர். மழை சமயங்களில் விளை நிலங்களிலிருந்து மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால் மண் சரிவுகளும் ஏற்படுகின்றன. விவசாய நிலங்களிலிருந்து அடித்து வரப்படும் மண் சாலைகளில் படிந்து சாலைகளும் சேதமடைகின்றன. குறிப்பாகக் கேத்தி பாலாடா, கொல்லிமலை, முத்தோரை பாலாடா, பிக்கட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சரிவான பகுதிகளில் விவசாயம் செய்வது தொடர்கிறது. படிமட்ட முறையில் விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும்" என்றார்.

`இயற்கையுடன் கலந்த விதை காவலர்...!’- விவசாய வரலாற்றில் தவிர்க்கமுடியாத வெங்கடாச்சலம்

மண் அரிப்பு குறித்து வேளான் ஆய்வாளர் பிரான்சிஸ் மரியா, "பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றும் இந்த மண் அரிப்பு புவியியல் அமைப்பில் பெரிய அளவில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒரு சென்டிமீட்டர் மண் உருவாவதற்கு 600 ஆண்டு தேவைப்படுகிறது. சிந்து சமவெளி போன்ற நாகரிகங்கள்கூட மண் அரிப்பினால் மண் வளம் இழந்து பயிர் செய்ய முடியாமல் பட்டினியால் இறந்த வரலாறும் உண்டு. எனவே மேல் மண் பாதுகாப்பு என்பது மிக அவசியமான ஒன்றாக உள்ளது" என்றார்.