Election bannerElection banner
Published:Updated:

ரிஹானா ட்வீட், பதறி விளக்கம் கொடுத்த வெளியுறவுத்துறை... உலக கவனம் பெறும் விவசாயிகள் போராட்டம்!

ரிஹானா
ரிஹானா

எப்போதும் இல்லாத விதமாக ஒரு பிரபலத்தின் ட்விட்டர் பதிவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகமே பதிலளித்திருப்பது மிகவும் அரிதானதாகப் பார்க்கப்படுகிறது.

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்துவிட்டது. குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்! - சாலையில் தடுப்புச்சுவர், ஆணிகளுடன் டெல்லி காவல்துறை

அரசு எவ்வளவோ முயற்சி செய்தும் விவசாயிகள் போராட்டத்திலிருந்து பின் வாங்குவதாக இல்லை. குடியரசு தினத்தன்று நடந்த கலவரத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறும் விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. பிப்ரவரி 6-ம் தேதி, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில்தான் டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ரிஹானா. விவசாயிகள் போராட்டம் நடக்கும் பகுதிகளில் இணையதள சேவை முடக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்க்-ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த ரிஹானா, `ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிஹானா 100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலம் என்பதால் சில மணி நேரங்களில் அந்த ட்வீட் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. பதிவிட்ட 14 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான ரீ-ட்வீட், 4 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ள அந்த ட்வீட் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது. ரிஹானாவை பின் தொடர்பவர்கள் பலரும் #RihannaSupportsIndianFarmers என்ற ஹேஷ்டேக்கில் தங்களது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

ரிஹானாவின் பதிவுக்கு எதிர்ப்புகளும் இல்லாமல் இல்லை. பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ரிஹானாவின் பதிவை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ரிஹானாவின் ட்வீட்டை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கங்கனா, ``யாரும் அதைப் பற்றி பேசப் போவதில்லை. ஏனெனில், அவர்கள் விவசாயிகளே அல்ல. இந்தியாவை பிரிக்க நினைக்கும் தீவிரவாதிகள். எங்கள் நாட்டை ஆக்கிரமித்து தங்கள் காலனித்துவ நாடாக மாற்ற சீனா முயற்சிக்கிறது. முட்டாளே அமைதியாக உட்கார். உங்களைப் போல நாட்டை விற்பவர்கள் அல்ல நாங்கள்" என ஆதாரமற்ற தகவல்களையும் குற்றச்சாட்டுகளையும் ட்வீட் செய்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
`இது விவசாயிகளுக்கு ஏமாற்றமான பட்ஜெட்!' -  விவசாயிகள் சொல்வது என்ன?

கரீபியன் தீவு நாடான பார்படோஸை பூர்விகமாகக் கொண்டவரான ரிஹானா 2003-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். விவசாயிகள் போராட்டம் மட்டுமல்ல; மியான்மர் பிரச்னை உட்பட பல்வேறு அரசியல் விஷயங்கள் தொடர்பாகவும் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருக்கிறார் ரிஹானா.

ரிஹானாவின் ட்வீட் சர்வதேச அளவில் கவனம் பெற்றதைத் தொடர்ந்து சூழலியல் செயற்பாட்டாளர்களான கிரேட்டா துன்பெர்க், லிசிப்பிரியா, அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸின் உறவினரான மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். ரிஹானாவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் வலதுசாரிகள் தொடர்ச்சியாக கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், ரிஹானா இந்தக் கருத்தைப் பதிவு செய்த பிறகு அவரின் மதம் குறித்தும் கூகுளில் தேடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சர்வதேச பிரபலங்களின் கவனம் விவசாயிகளின் போராட்டம் பக்கம் திரும்பவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திடீரென விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ``வேளாண் சட்டங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்களுக்குப் பிறகே நிறைவேற்றப்பட்டன. மிகச்சிறிய அளவிலான விவசாயிகளே இதை எதிர்க்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை மனதில்கொண்டு தொடர்ந்து அவர்களுடன் அரசு உரையாடி வருகிறது. இதுவரை போராட்டம் நடத்தும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 11 சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. சட்டங்களை நிறுத்திவைக்கவும் அரசு தயாராக இருப்பதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரதமரே தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்.

ஆனால், சிலர் தவறான உள்நோக்கத்துடன் இந்தப் போராட்டங்களின் மீது தாக்கம் செலுத்தவும், அவர்களை திசைதிருப்பவும் முயல்கின்றனர். கடந்த ஜனவரி 26-ம் தேதி இந்தியாவின் தலைநகரில் நடந்த வன்முறை கூட இதன் காரணமாகவே நடந்தது. இந்தப் போராட்டங்களை இந்தியாவின் ஜனநாயக பண்பாகவே உலகம் பார்க்கவேண்டும். அரசும், விவசாயிகளும் நிச்சயம் இதற்கு ஜனநாயக முறையில் தீர்வு காண்பார்கள். இதுபோன்ற பிரச்னைகளில் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு, இந்தப் பிரச்னைகள் குறித்து புரிந்துகொண்டு சரியான தகவல்களை மட்டுமே தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பிரபலங்களால் போராட்டம் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துகள் எதுவும் சரியானவை அல்ல" எனத் தெரிவித்துள்ளது.

எப்போதும் இல்லாத விதமாக ஒரு பிரபலத்தின் ட்விட்டர் பதிவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகமே பதிலளித்திருப்பது மிகவும் அரிதானதாகப் பார்க்கப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு