Published:Updated:

`6 கோடி விவசாயிகளுக்கு 12,000 கோடி ரூபாய் மானியம்!' -`புதிய சாதனை' என நெகிழ்ந்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை கடுமையாக இருந்தது. விவசாயிகள் இதையும் வென்றனர்" என்று மோடி உரையாற்றினார்.

குஜராத் மாநிலம், காந்தி நகரில் மூன்றாவது உலக உருளைக்கிழங்கு மாநாட்டை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்துவைத்து உரையாற்றினார். இதில், 6 கோடி விவசாயிகளுக்கு 12,000 கோடி ரூபாய் நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்குக்கு அனுப்பி அரசு புதிய சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

உலக உருளைக்கிழங்கு மாநாடானது இந்திய உருளைக்கிழங்கு சங்கம், இந்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேளாண்மைக் குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடந்தது. உலகின் முக்கிய வேளாண் ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் உட்பட பலரும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். இதில், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகப் பிரதமர் மோடி உரையாற்றினார்.

மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்
மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்

மாநாட்டில் மோடி பேசுகையில், ``குஜராத், உருளைக்கிழங்கு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் மையமாகக் கடந்த இருபது வருடங்களில் வளர்ந்துள்ளது. இந்தியா உருளைக்கிழங்கு உற்பத்தியில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 20 சதவிகிதம் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. குஜராத்தில் 170 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளின் திட்டங்களே இதற்குக் காரணம். விவசாயிகள் உழைப்பு மற்றும் அரசின் கொள்கை முடிவுகள்தான் உலக அளவில் தானியங்களின் உற்பத்தியில் இந்தியாவை முதல் மூன்று இடங்களில் வைத்துள்ளது. இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை கடுமையாக இருந்தது. விவசாயிகள் இதையும் வென்றனர்" என்றார் உற்சாகத்துடன்.

ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவிலுள்ள 6 கோடி விவசாயிகளுக்கு 12,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டு புதிய சாதனையை இந்திய அரசு படைத்துள்ளது.
பிரதமர் மோடி

தொடர்ந்து பேசுகையில், ``தானியங்களை விநியோகிப்பது, உணவுப் பண்ணை அமைப்பது தொடர்பாக மிகப்பெரிய நெட்வொர்க் ஒன்று உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இதற்காக ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்படும். ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவிலுள்ள 6 கோடி விவசாயிகளுக்கு 12,000 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு புதிய சாதனையை இந்திய அரசு படைத்துள்ளது" என்றார் பிரதமர் மோடி.

மாநாட்டில் நீர்ப்பாசனம், வேளாண்மைத் துறையில் உள்ள சவால்கள், திட்டங்கள் ஆகியவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vikatan
பின் செல்ல