Published:Updated:

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விவசாயிகள் இல்லாத வல்லுநர் குழு ஏன்?

வேளாண் மண்டல சட்டம் இயற்றி பல மாதங்களாகியும் கூட இன்னும் விதிமுறைகள் உருவாக்கப்படாமல் இது கிடப்பில் கிடக்கிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இந்நிலையில்தான் தமிழக அரசு தற்போது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிமுறைகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

காவிரி டெல்டா, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கான விதிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம் என இப்பகுதி விவசாயிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அதேசமயம் இதற்காக அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடம்பெறாதது மிகப் பெரும் குறையாக கருதப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது டெல்டா மக்களின் நீண்டகால கோரிக்கை. இங்கு ஏற்கனவே செயல்பட்டு வரும் பெட்ரோல் - கேஸ் கிணறுகளால், விவசாயம் பாதிக்கப்பட்டதாலும், மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் பெரும் ஆபத்து நெருங்கியதாலும் இக்கோரிக்கை முன் வைக்கப்ப்ட்டது. இந்நிலையில்தான் தமிழக முதல்வரின் அறிவிப்பு இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. தமிழ்நாட்டில் இதற்கு முன்பு இருந்த வேறு எந்த முதலமைச்சரும் செய்யாத துணியாத சாதனையை இவர் நிகழ்த்தியிருப்பதாக, டெல்டா மக்கள் வியந்துபோனார்கள். ஆனால் அதேசயம் இதில் சில குறைகளும் ஓட்டைகளும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இச்சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்ற கருத்தும் உருவானது.

காவிரி டெல்டா, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதால், இங்கு மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவக்குமார் மதுரை உயர்தீமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆகஸ்டு 5-ம் தேதி அவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ``பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை" என தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுகுறித்து விகடன் குழும இதழ்களான ஜூனியர் விகடன் மற்றும் பசுமை விகடனில் விரிவான கட்டுரைகள் வெளியிட்டோம்.

வளமான டெல்டா பூமி
வளமான டெல்டா பூமி

புதிதாக இயற்றப்படும் எந்த ஒரு சட்டமாக இருந்தாலும், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டால்தான், அது நடைமுறைக்கு வரும். வேளாண் மண்டல சட்டம் இயற்றி பல மாதங்களாகியும் கூட இன்னும் விதிமுறைகள் உருவாக்கப்படாமல் இது கிடப்பில் கிடக்கிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இந்நிலையில்தான் தமிழக அரசு தற்போது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிமுறைகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது டெல்டாவை, வேளாண் மண்டலமாக பாதுகாக்க பலன் அளிக்குமா?

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது, ``இது ஒரு நல்ல முன்னேற்றம். அடுத்தக்கட்ட நகர்வு. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய ஆணையத்திற்கு பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கான வல்லுநர் குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வேளாண்மை துறை செயலாளர், இக்குழுவின் தலைவராக இருப்பார். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தொழில்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியவைகளின் உயர் அலுவலர்கள் இக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து விதமான வழிமுறைகளையும் இக்குழு வழங்க வேண்டும் என அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது.

பாரதிச்செல்வன்
பாரதிச்செல்வன்

வேளாண் மண்டல பகுதியில் நிலம், நீர், சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம், வேளாண் மண்டலத்தில் மேலும் சேர்க்கப்பட வேண்டிய பகுதிகள், வேளாண்மை சார்ந்த தொழில்கள் ஆகியவைகள் தொடர்பான பரிந்துரைகளை ஆணையம் அரசுக்கு வழங்கும். ஆணையத்திற்கு உதவியாக வல்லுநர் குழு செயல்படும். எந்தெந்த தொழில்கள் இங்கு அனுமதிக்கப்படும், எவையெவை அனுமதிக்கப்பட மாட்டாது என ஏற்கனவே சட்ட முன்வடிவில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக எண்ணெய் - எரிவாயு தொழில்களும், ரசாயன தொழிற்சாலைகளும் இங்கு அனுமதிக்கப்படமாட்டாது எனச் சொல்லப்பட்டுள்ளது. தற்போது விதிமுறைக்கான அரசாணை வெளியிடப்பட்டு, வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டதால், இச்சட்டம் தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளது.

காவிரி டெல்டா மக்களின் உடனடி எதிர்பார்ப்பு என்னவென்றால், கடந்த ஆண்டு, எரிவாயு நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்ட திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். எரிவாயு திட்டங்களை செயல்படுத்த, மக்களின் கருத்துக்கேட்பும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும் தேவையில்லை என மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள 2020-சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டெல்டா உழவர்கள் அச்சமடைந்துள்ளார்கள். இவர்கள் எதிர்பார்க்கும் அந்த ஆபத்திலிருந்து, தற்போதைய வேளாண் மண்டல சட்டம் பாதுகாக்குமா என தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். இவை குறித்து, வேளாண் மண்டல ஆணையமும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய தெளிவான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.’’ என்றார்.

டெல்டாவில் மணல் குவாரிகளுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்த வழக்கறிஞரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளில் ஒருவருமான வெ.ஜீவக்குமார், ``பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் தற்போது உயிர் பெற்றுள்ளது. காவிரி டெல்டாவை, பசுமை மண்டலமாக கண்டிப்பாக பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்க, எரிவாயு திட்டங்களுக்கு தடை விதிப்பது எந்தளவிற்கு முக்கியமோ, அதே அளவுக்கு, மணல் குவாரிகளுக்கு தடை விதிப்பதும் மிகவும் அவசியமானது. இதுகுறித்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

ஜீவக்குமார்
ஜீவக்குமார்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையத்திற்கு ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழஙகவதற்கான வல்லுநர் குழுவில் அரசியல் சார்பற்ற விவசாயிகளும், செயல்பாட்டாளர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களும் இடம்பெறவில்லை. இவர்கள் இடம்பெற்றால்தான் விவசாயிகள் நலன் சார்ந்த பரிந்துரைகள் இடம் பெறும். விவசாயம் அல்லாத திட்டங்களினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பிரதிபலிக்க முடியும். தற்போது அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில் அரசு அதிகாரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளார்கள். இவர்கள் மக்களின் அனைத்துப் பிரச்னைகளையும் பிரதிபலிப்பதற்கான வாய்ப்பு குறைவு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு