Published:Updated:

`எடப்பாடி பழனிசாமி மாவட்டம் என்பதால் புறக்கணிக்கிறீர்களா?' - கொந்தளிக்கும் விவசாயிகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
News
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

தமிழகம் முழுவதும் இரண்டு முறை வழங்கப்பட்ட பயிர்க் கடன்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு முடிந்து பல மாவட்டங்களில் பிரச்னை தீர்க்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி பிரச்னை தீராமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

``இது எடப்பாடி பழனிசாமி மாவட்டம் என்பதற்காகப் புறக்கணிப்பதாக ஒரு பேச்சு எழுகிறது. அதைத் தமிழக அரசு உண்மையாக்கிவிடக் கூடாது. சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

MK Stalin
MK Stalin

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ``தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பெற்ற நகைக் கடன் மற்றும் பயிர்க் கடன் தள்ளுபடி செய்வோம்." என்று வாக்குறுதி அளித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதும், அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110 விதியின் கீழ், ``தமிழகத்தில் 31.1.2021 வரை உழவர்கள் பெற்றுள்ள அனைத்து கூட்டுறவு பயிர் மற்றும் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவிப்பு வெளியிட்டார்.

தேர்தல் முடிந்து தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காத்திருந்த நேரத்தில், `கூட்டுறவு பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டதில் தவறு நடந்திருக்கிறது' என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கூறியதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் இரண்டு முறை வழங்கப்பட்ட பயிர்க் கடன்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு முடிந்து பல மாவட்டங்களில் பிரச்னை தீர்க்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி பிரச்னை தீராமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுகுறித்து போராடிய விவசாயிகள் தரப்பில் பேசியபோது, ``ஆய்வு செய்யும்போது, பயிர்க் கடனுக்குத் துளியும் சம்பந்தமில்லாத ஆவணமான `அடங்கல்' என்ற ஆவணத்தைக் கருத்தில்கொண்டதுதான் எல்லா பிரச்னைக்கும் காரணம். அதை வைத்துத்தான் சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள பயனாளிகளான 1,05,000 விவசாயிகளில், 49,000 விவசாயிகள் விதிமீறல் செய்துள்ளதாக வகைப்படுத்தியுள்ளனர். அடங்கல் என்பது அந்த பயிராண்டில் செய்த பயிர்களின் விவரங்களை உள்ளடக்கியது.

ஆனால், பயிர்க் கடனோ அந்த ஆண்டில் செய்யப்போகும் பயிர்களுக்கு வழங்கப்படுவது. எனவே பயிர்க் கடனை பொறுத்தவரையில் அடங்கல் என்ற ஆவணத்தைக் கருத்தில்கொள்வது பொருத்தமற்றது. அதுமட்டுமில்லை; பயிர்க் கடன் வழங்கப்படும்போது கண்டிப்பாக `அடங்கல்' பெற வேண்டும் என்று கூட்டுறவுத்துறையில் எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை. கடன் வழங்குவதற்குக் கிராம நிர்வாக அலுவலரின் சான்று மற்றும் கடன் பெறும் விவசாயிகளின் சுய உறுதிமொழி போதும் என்று சுற்றறிக்கை மிகத்தெளிவாக உள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

சரி, இந்த அடங்கலில் சரியான தகவல் இருக்குமா என்றால் அதுவும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டில் அடங்கல் கணக்கெடுப்பிற்கென `அஜ்மாயிஸ் தாசில்தார்' என்று அழைக்கப்படும் தனி தாசில்தார், கிராம கர்னம் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது அந்த பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் அந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் அந்த அடங்கல் கணக்கெடுப்பு பணியானது நிலத்திற்கே செல்லாமல் அலுவலகத்திலிருந்தபடியே வெறும் சடங்காக நடந்துவருகிறது. நிலத்தில் பயிரிடும் பயிர்களின் விபரங்களுக்கும் அடங்கலில் குறிப்பிடும் பயிர்களின் விபரங்களுக்கும் எவ்வித ஒற்றுமையும் இருப்பதில்லை. இப்படியான சூழலில்தான், அடங்கல் என்பதை ஆவணமாகக் கருதி விவசாயிகளின் வாழ்க்கையில் பெரும் சூறாவளியை உருவாக்கியுள்ளது கூட்டுறவுத்துறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இதேபோன்றுதான் நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையீட்டிற்குப் பிறகு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு, தற்போது புதிய கடன்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சேலம் மாவட்ட கூட்டுறவுத் துறையினரோ அதைப் பொருட்படுத்தாமல் 49,000 விவசாயிகளை விதிமீறல் என வகைப்படுத்தி அவர்கள் பெற்ற கடனை மீண்டும் வசூலிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

கடனை வசூலிக்குமாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு விதிமீறல் எனத் தவறாக வகைப்படுத்தப்பட்ட 49,000 விவசாயிகளுக்கு உரிய முறையில் கடன் தள்ளுபடி சான்றிதழ் அளித்து, நகைகளைத் திரும்ப வழங்குவதுடன் புதிய கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எடப்பாடி பழனிசாமி மாவட்டம் என்பதற்காகப் புறக்கணிப்பதாக ஒரு பேச்சு எழுகிறது. அதைத் தமிழக அரசு உண்மையாக்கிவிடக் கூடாது" என்றனர் ஆதங்கத்துடன்.