Published:Updated:

`மகிழ்ச்சியும், குழப்பமும்!' எட்டுவழிச் சாலை தீர்ப்பு குறித்து விவசாயிகள் சொல்வது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மகிழ்ச்சியில் விவசாயிகள்
மகிழ்ச்சியில் விவசாயிகள் ( படம்: எம்.விஜயகுமார் )

இந்தத் தீர்ப்பு வெளியான உடன் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் சற்று நேரத்தில் குழப்பமும் அடைந்திருக்கிறார்கள்.

வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன் முடிவு எப்படி இருக்கும் என தெரியவில்லை. இந்நிலையில் இன்று தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக சேலம் டு சென்னை 8 வழிச் சாலை திட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேல் முறையீட்டு வழக்கில் இந்தத் தீர்ப்பை எதிர் நோக்கி சேலம் அயோத்தியாப்பட்டினத்தை அடுத்த ராமலிங்கபுரம் மாரியம்மன் கோயிலில் 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காத்திருந்தார்கள். இந்தத் தீர்ப்பு வெளியான உடன் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் சற்று நேரத்தில் குழப்பமும் அடைந்திருக்கிறார்கள்.

மகிழ்ச்சியில் விவசாயிகள்
மகிழ்ச்சியில் விவசாயிகள்

2018 பிப்ரவரி மாதம் மத்திய அரசு சேலம் டு சென்னை 8 வழிச் சாலை 10,000 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுவதாக அறிவித்தது. இச்சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என 5 மாவட்ட வழியாக 277 கி.மீட்டர் தொலைவு போடப்பட உள்ளது. இத்திட்டத்தால் கஞ்சமலை, ஜருகு மலை, கல்வராயன் மலை, தீர்த்த மலை, கவுதி மலை, வெடியப்பன் மலை என 8 மலைகளும், 5-க்கும் மேற்பட்ட ஆறுகளும், 100-க்கும் மேற்பட்ட ஏரிகளும், 1000-க்கும் மேற்பட்ட கிணறுகளும், 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களும், 7,500 ஏக்கர் விவசாய நிலங்களும், 40,000 குடும்பங்களும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் குமுறியதோடு தொடர் போராட்டத்திலும் குதித்தார்கள்.

ஆனால், இவர்களின் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பொருட்படுத்தாமல் 8 வழிச்சாலை அமைய உள்ள பகுதிகளில் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு போட்டதைப் போல விவசாயிகளை ஒன்று கூட விடாமல் நிலத்தை கையகப்படுத்தின. விவசாயிகள் கையறு நிலையில் தொடர் போராட்டம் மேற்கொண்டதோடு உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்கள்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2019 ஏப்ரல் 8-ம் தேதி விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசும், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தன. இந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ``உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிக்கும் என்றும், புதிய அறிவிக்கை வெளியிட்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தடை இல்லை'' என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மோகனசுந்தரம்
மோகனசுந்தரம்

இதுபற்றி விவசாயிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விவசாயி மோகனசுந்தரம், ``உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விவசாயிகளின் முதல்கட்ட வெற்றியாகப் பார்க்கிறோம். அரசு எங்களிடம் எந்த ஒரு கருத்தையும் கேட்காமல் அராஜகமாக நிலங்களைக் கையகப்படுத்தியது. அதைத் தற்போது உச்ச நீதிமன்றம் தவறு என்று அரசுக்கு குட்டு வைத்திருக்கிறது. இதை விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம்.

அதே வேளையில் புதிய அறிவிப்பு செய்து திட்டத்தை செயல்படுத்தலாம் என்று கூறியிருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி அடுத்தகட்ட முடிவுகள் எடுக்க இருக்கிறோம். அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையை வைக்கிறோம்'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி பூங்கொடி, ``இந்த 8 வழிச் சாலை திட்டத்தை அறிவித்த நாள் முதல் இன்று வரை நிம்மதி இழந்து நடை பிணங்களாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு தொழில் தெரியாது. எங்க உயிர் போனாலும் இந்த நிலத்தை விட்டுப் போக மாட்டோம். உண்மையில் மக்களுக்குப் பயன்படுவதாக இருந்தால் கொடுக்கத் தயார்.

பூங்கொடி
பூங்கொடி

ஆனால், சேலத்திலிருந்து சென்னைக்கு பல வழிகள் இருக்கும்போது எங்களின் நிலங்களை அபகரித்து, இயற்கையை அழித்து இன்னொரு சாலை போடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் ஒன்று சேர்ந்து பேசி அடுத்தகட்ட முடிவை அறிவிக்க இருக்கிறோம். அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு