பிரீமியம் ஸ்டோரி
“நான் முதல்வர் ஆன பிறகு எவ்வளவோ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன்.

அவை எதிலும் கிடைக்காத மகிழ்ச்சி, இந்த நிகழ்ச்சியில் கிடைத்திருக்கிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி’’ என்று கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 4-ம் தேதி, 565 கோடி மதிப்பில், நீரேற்று முறையில் காவிரி-சரபங்கா இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில்
திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில்

உண்மையில் இந்தத் திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம்தானா? இந்தத் திட்டத்தால் சேலம் மாவட்ட விவசாயிகளுக்குக் கிடைக்கும் பயன்கள் குறித்துத் தெரிந்துகொள்வதற்காக, காவிரிக் கரையோரமாக இருக்கும் விவசாய அமைப்பினரிடம் பேசினோம். இதுபற்றி காவிரி உபரிநீர் நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தம்பையா, ‘‘மேட்டூர் அணை 1925 முதல் 1934-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஓமலூர் விவசாயிகள், மேட்டூர் அணையிலிருந்து எங்க பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டுவர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி, பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பிவைத்தார்கள். மேடான பகுதியாக இருந்ததால் அன்றைய பிரிட்டிஷ் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட மக்கள் 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும், பல லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடல் உழைப்பையும் கொடுத்து மேட்டூர் அணையை உருவாக்கினார்கள். ஆனால், சேலம் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணையின் உபரி நீரைக்கூடப் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. அதனால் மேச்சேரி, நங்கவள்ளி, கொங்கணாபுரம், எடப்பாடி தாரமங்கலம், ஓமலூர், மகுடஞ்சாவடி போன்ற ஒன்றியப் பகுதிகளிலுள்ள விவசாய பூமிகள் வறண்டு, பொட்டல் காடுகளாக இருக்கின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இம்மண்ணின் மைந்தர் என்பதால் இத்திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். மேட்டூர் உபரி நீர் வரும்பட்சத்தில் அதிகமானோர் பயன்பெறுவார்கள். தென்னை, கரும்பு, வாழைச் சாகுபடி அதிகரிக்கும்.

மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!

இந்தப் பகுதி மக்கள் விவசாயம் இல்லாமல் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் எனத் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், பெங்களூரு, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் கட்டட வேலைக்கும், கல் உடைக்கும் வேலைக்கும் செல்கிறார்கள். இதையெல்லாம் சுட்டிக்காட்டி நீரேற்று முறையில் இந்தப் பகுதிகளுக்கு காவிரி உபரிநீர் கொண்டுவர வேண்டும் எனப் பல ஆண்டுகளாகப் போராடினோம். அதையடுத்து 2007-ம் ஆண்டு தி.மு.க அரசு இந்தத் திட்டத்தைக் கொள்கை முடிவாகவே ஏற்றுக்கொண்டது. 2013-ம் ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி, ஒன்றரை லட்சம் கன அடி உபரி நீர் வெளியேறியது. அப்போது, அன்றைய முதல்வர் ஜெயலலிதா 2,000 கோடி ரூபாயில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முதற்கட்டமாக 50 லட்சம் ஒதுக்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். ஆனால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இம்மண்ணின் மைந்தர் என்பதால் எங்கள் கஷ்டங்களை நேரடியாக உணர்ந்து அற்புதமான இந்தத் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

காவிரி ஆறு
காவிரி ஆறு

இது வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம். பொதுப்பணித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய திட்டம். இதனால் வறண்டு கிடக்கும் இந்தப் பகுதிகள் வளம் கொழிக்கும் பகுதிகளாக மாறும். நிலத்தடி நீர்மட்டம் உயரும், உயிர்ச் சூழல் பெருகும். மழை வளம் அதிகரிக்கும். நேர்முகமாகவும் மறைமுகமாகவும் மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயப் பேரியக்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் சுரேஷ், ‘‘தமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களுக்குத் தண்ணீர் வழங்கும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் இருந்தாலும், அதனால் மாவட்டத்துக்கு எந்தப் பயனும் இல்லை. மழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப் பெருக்கெடுத்து மேட்டூர் அணை நிரம்பி, 100 டி.எம்.சி உபரி நீர் கடலில் கலக்கிறது. அதில் வெறும் 1 டி.எம்.சி நீரை நீரேற்று முறையில் இந்தப் பகுதிகளிலுள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும் எனச் சுமார் 40 ஆண்டுகளாகப் போராடி வந்தோம்.

அணை
அணை

தற்போது எங்களுடைய கனவுத் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியிருக்கிறார். பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளே அதிகமாக இருக்கிறோம். மேட்டூர் உபரி நீர் வரும்பட்சத்தில் அதிகமானோர் பயன்பெறுவார்கள். தென்னை, கரும்பு, வாழைச் சாகுபடி அதிகரிக்கும். வெளி மாநிலங்களுக்குக் காய்கறி ஏற்றுமதி செய்யும் அளவுக்குக் காய்கறி உற்பத்தி செய்வார்கள். எண்ணைவித்துகளும் பெருகும். மொத்தத்தில் சேலம் மாவட்டத்தில் தொழில் வளம் பெருகும்; பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

தம்பையா, சுரேஷ், கனகம்
தம்பையா, சுரேஷ், கனகம்

வெள்ளபுரத்தைச் சேர்ந்த விவசாயி கனகம், “இது வானம் பார்த்த பூமி. இந்த நிலத்தை நம்பி எந்த விவசாயமும் செய்ய முடியாது. மழைக் காலத்துல நிலக்கடலை, கொள்ளு, அவரை, சோளத் தட்டை போடுவோம். மற்ற காலங்கள்ல வறண்டு கிடக்கும். மாடு, கன்னு குடிக்கக் கூடத் தண்ணி கிடைக்காது. மேட்டூர் உபரி நீர் வந்து, எங்க ஏரிகளை நிரப்பினால் கிணறு, குட்டைகள் நிறையும். ஊரே செழிப்பா மாறும். இரு போக வெள்ளாமை செய்யலாம். எங்க மனசும் குளிரும்’’ என்றார்.

உபரிநீர் கானல் நீர்தான்!

காவிரி-சரபங்கா இணைப்பு... இனி சேலத்தில் இருபோகச் சாகுபடி!

துகுறித்து ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சி.வையாபுரியிடம் பேசினோம், “சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியான ஆத்தூர், தலைவாசல் சுற்றுப்புறப் பகுதிகள் நஞ்சைப் பகுதி. இங்கேயே தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் தவித்துவருகிறார்கள். வசிஷ்ட நதியில் வளமாகத் தண்ணீர் போய் பல ஆண்டுகள் ஆகின்றன. இங்கே தண்ணீர் கொண்டு வராமல் மானாவாரி விவசாயம் நடைபெறும் தாரமங்கலம், நங்கவள்ளிப் பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்வது கானல் நீராகத்தான் போகும். இது, நான் அடிக்கடி வலியுறுத்தி வரும் `பயிர்வாரி முறை’க்கு எதிரானது. காவிரியில் உபரி நீரே இல்லை. அப்படியிருக்கையில் இல்லாத நீரை எப்படி எடப்பாடி கொண்டு வருகிறார் என்று பார்ப்போம்” என்றார் ஆவேசமாக.

திட்டம்:1

ந்தத் திட்டம் இரண்டு வழியில் செயல்படுத்தப்படுகிறது. மேட்டூர் அணையின் 16 கண் பாலத்தின் அருகில் திப்பம்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த நீரேற்று நிலையத்திலிருந்து 940 குதிரைத்திறன்கொண்ட 10 மின் மோட்டார்கள் மூலம் உபரி நீர் எடுக்கப்படும். கிழக்கு நோக்கி 2.20 மீட்டர் விட்டமுள்ள குழாயின் வழியாக 12 கி.மீ தூரத்திலுள்ள மேச்சேரி ஒன்றியம் காளிப்பட்டி ஏரியை நிரப்பும். பிறகு, இயற்கையாகவுள்ள கால்வாய்கள் வழியாக மானத்தாள், மல்லிகுட்டை, தொளசம்பட்டி, பெரியேரிப்பட்டி, தாரமங்கலம் ஏரிகள் மற்றும் சிறு குட்டைகளை நிரப்பி சரபங்கா ஆற்றில் இணைகிறது.

சரபங்கா ஆறு அணைமேடு, தெசவிளக்கு, சின்னப்பம்பட்டி, வெள்ளாளபுரம், புதுபாளையம், வேம்பனேரி, எடப்பாடி வழியாகச் சென்று மீண்டும் காவிரியில் கலக்கும். மேலும் வெள்ளாளபுரம் ஏரியில் அமையவிருக்கும் துணை நீரேற்று நிலையத்திலுள்ள மோட்டார் மூலம் கச்சிப்பள்ளி ஏரியை நிரப்பி, அங்கிருந்து இயற்கையாக உள்ள கால்வாய்கள் மூலம் சென்று பல ஏரிகளை நிரப்பும். இந்தத் திட்டத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்ட ஏரிகளும் குட்டைகளும் நிரப்பப்படும்.

திட்டம்:2

திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து 1,080 குதிரைத் திறன்கொண்ட ஆறு மின் மோட்டார்கள் மூலம் எடுக்கப்படும் உபரி நீர், தெற்கு நோக்கி 1.60 மீட்டர் விட்டமுள்ள குழாயின் வழியாக 12 கி.மீ தூரத்திலுள்ள நங்கவள்ளி ஏரியை நிரப்பும். அங்கிருந்து இயற்கையாக உள்ள கால்வாய்கள் வழியாகச் சென்று வனவாசி ஏரியை நிரப்பி சாணாரம்பட்டி, சூரப்பள்ளி, காட்டம்பட்டி, நந்தக்காட்டானூர், பனிக்கனூர், சமுத்திரம் வழியாகச் சென்று சரபங்கா ஆற்றில் கலக்கும். மேலும், இயற்கையான கால்வாய்கள் இல்லாத பகுதிகளுக்கு புதிய கால்வாய்கள் அமைத்து பக்கநாடு, சவுரியூர், இருப்பாளி செட்டிமாங்குறிச்சி பஞ்சாயத்துகளிலுள்ள ஏரிகளை நிரப்பி சரபங்கா ஆற்றை அடையும். இந்த வழியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட சிறிய ஏரி, குளம், குட்டைகளும் நிரம்பும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு