Published:Updated:

̀அந்த 5 அணைகளில் ஏமாந்ததைப் போல மேக்கேதாட்டூவிலும் தமிழகம் ஏமாறக்கூடாது!' - எச்சரிக்கும் பொறியாளர்

மேக்கேதாட்டூ
மேக்கேதாட்டூ

மேக்கேதாட்டூவில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரத்தில் உள்ளே நுழைந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்காக, ஆரம்பகட்டப் பணிகளான சாலை அமைத்தல், கட்டுமானப் பொருள்களைச் சேகரித்தல் போன்ற பணிகளை கர்நாடக அரசு செய்து வருவதாகச் செய்தி வெளியானது. இந்தச் செய்தியின் அடிப்படையில், மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் வனப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2006-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை ஆகியவற்றின்படி, உரிய அனுமதியினைப் பெற்றுள்ளதா என்பதை அறிவதற்காக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கினை விசாரணைக்கு எடுத்ததோடு, இதுகுறித்த ஆய்வு செய்து தீர்ப்பாயத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவையும் அமைத்துள்ளது.

National Green Tribunal
National Green Tribunal
Photo: Vikatan / Ashok kumar.D

இதையடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``மேக்கேதாட்டூவில் அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது" என்று தெரிவித்துள்ளார். `மேக்கேதாட்டூவில் அணை கட்டக்கூடாது' என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரத்தில் உள்ளே நுழைந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுசம்பந்தமாக தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் முனைவர் வீரப்பன் பேசியபோது, ``மேக்கேதாட்டூவில் அணை கட்ட பணிகள் நடந்து வருகின்றன என்ற தகவலைத் தமிழ்நாட்டில் தெரிவித்தவர் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன். தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர் செயலராக இருப்பவர் தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சத்யகோபால். இவர் சுற்றுச்சூழல் சட்ட விதிகளின்படி அனுமதி பெறாமல் வனம் சார்ந்த பகுதியில் கர்நாடகம் எப்படி அணை கட்டும் பணிகளை மேற்கொள்ளலாம் என்று வழக்காக எடுத்துக் கொண்டு, இதுகுறித்து விசாரிக்கவும் குழு அமைத்துள்ளார். கர்நாடகத்தின் முறையற்ற இந்தச் செயலை காவிரி மேலாண்மை ஆணையமோ, மத்திய அரசோ இதுவரை கண்டிக்கவில்லை. என்ன நடந்தது என்றுகூட கேட்கவில்லை.

தமிழகம் சட்ட ரீதியாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கர்நாடகத்துக்கு எப்படி இப்படியொரு துணிச்சல் எப்படி வந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அதற்கு கர்நாடகம் ஏற்கெனவே காவிரி மற்றும் துணையாறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டிய வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்.

காவிரி ஆறு
காவிரி ஆறு

1973-80 காலகட்டத்தில் கபினி அணை (19 டிஎம்சி) ஹேரங்கி (8 டிஎம்சி), ஹேமாவதி (37 டிஎம்சி) யாகாச்சி (3 டிஎம்சி) மற்றும் ஸ்வர்ணவதி (1 டிஎம்சி) ஆகிய 5 அணைகளை காவிரியிலும் காவிரியின் துணை ஆறுகளிலும் கட்டியிருக்கிறது கர்நாடகா. இந்த அணைகளில் தேக்கும் நீரின் அளவு ஏறத்தாழ 70 டி.எம்.சி. இத்தகைய மறைமுகமான திட்டங்களால் கபினி அணைக்கும் கிருஷ்ணராஜசாகர் நீர்த்தேக்கத்திற்கும் போதிய நீரை வரவிடாமல் தடுத்துவிட்டு, `அணைகளில் திறந்து விடப் போதிய நீர் இல்லை' என்று ஒவ்வொர் ஆண்டும் கர்நாடகம் கபட நாடகமாடிக் கொண்டுள்ளது. கர்நாடக அரசு தமிழக அரசின் இசைவு இன்றி, மத்திய அரசின் நீர்வளத்துறை, மத்திய அரசின் காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் துறையின் தடையில்லாச் சான்று பெறாமல், மத்திய அரசின் திட்டக் குழுவின் அனுமதியின்றியே காவிரி ஆற்றின் குறுக்கே மாநில நிதியிலிருந்து மேலே சொல்லிய அணைகளைக் கட்டி தங்களுடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டன. இன்று வரை இந்த அணைக்கட்டுகள் கட்டப்பட்டவை இந்திய அரசால் முறைப்படுத்தப்படாத முறைகேடுகளாகவே தொடர்கின்றன. இவற்றிற்காக மத்திய அரசு கர்நாடகா அரசுக்கு தவறு செய்தது எனச் சுட்டிக் காட்டி எந்த தாக்கீதும் அனுப்பவில்லை. இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருப்பதும், பார்வையாளராக இருப்பதும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 365-க்கு முற்றிலும் எதிரானது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இப்படி அணைகளைக் கட்டியதால் காவிரியில் வரும் தண்ணீரின் அளவு பெருமளவில் குறைந்துவிட்டது. இந்த அணைகளைக் கட்டியதால் கர்நாடகா சுமார் 21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் பரப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது. காவிரியில் 2012-ல் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் 25 நீர்வளத்துறை அதிகாரிகள் 56 இடங்களில் ஆய்வு செய்து 30 இடங்களில் அணைகள் கட்டலாம் என்ற கர்நாடகா அரசுக்கு அறிக்கை அளித்தனர். அப்போதே தமிழகம் விழித்திருக்க வேண்டும். இப்போது `அணை கட்டுவதற்குப் பொருள்களை எடுத்துச் செல்ல சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன' என்ற செய்தி வெளியே வரும் வரை தமிழகத்தின் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? அணை கட்டும் முயற்சிகளை அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டாமா? ஏற்கெனவே 5 அணைகளை கட்டும்போது கோட்டை விட்டுவிட்டோம். இப்போதாவது தமிழகம் விழித்துக் கொண்டிருக்கக்கூடாதா? சட்ட போராட்டம் நடத்துவது ஒருபுறம் இருந்தாலும், அணை கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கும்போது உளவு பார்த்து அதை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று பிரச்னையைத் தெரியபடுத்தியிருக்க வேண்டாமா?

கிருஷ்ணராஜசாகர் அணை
கிருஷ்ணராஜசாகர் அணை

மத்தியிலும் பி.ஜே.பி அரசு, கர்நாடகத்திலும் பி.ஜே.பி அரசு. அதனால், மத்தியில் இருக்கும் அரசு கண்டும் காணாமல்தான் இருக்கும். அந்தத் தைரியத்தில்தான் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான பணிகளைத் தொடங்குகிறது. இதற்கு முன்பு 5 அணைகளைக் கட்டியபோதும் அது சுற்றுச்சூழல், வனத்துறை, நீர்வளத்துறை என்று எந்தத் துறையிடமிருந்தும் அனுமதி வாங்கவில்லை என்பது வரலாறு. மாநில அரசின் நிதியை வைத்தே அணைகளைக் கட்டிக் கொண்டது. இதைத் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு நில்லாது, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி சென்று பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஆகியோரை நேரடியாகச் சந்தித்து கர்நாடகாவின் அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்திட வேண்டும். புது டில்லியில் அடிக்கடி முகாமிட்டு மத்திய அரசுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி நெருக்கடி தர வேண்டும். குடியரசுத் தலைவரையும் சந்தித்து முறையிட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கும் நீர்ப்பாசனம் தொடர்புடைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசின் ஆலோசகர் மற்றும் தமிழகப் பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர்கள் சந்தித்து விளக்கி கர்நாடக அரசுக்கு நெருக்கடி தர வேண்டும்.

வீரப்பன்
வீரப்பன்

இப்படிச் செய்யாமல் `உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டோமே... இனி நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும்' என்று கிணற்றில் போட்ட கல்லாக இருந்துவிட்டால், கர்நாடக அரசு எந்த வழக்குக்கும் அஞ்சாது. சட்டத்துக்கு பணிவது போன்றே இருந்துவிட்டு, கமுக்கமாக அது செய்ய வேண்டிய பணிகளைச் செய்துவிடும். கர்நாடகத்தின் கபட நாடகத்தை தமிழகம் பழைய அனுபவங்களிலிருந்து தெரிந்து வைத்திருக்கும் என்று நம்புகிறேன். இனியாவது விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே மேக்கேதாட்டூ அணை பணிகளை தடுத்து நிறுத்த முடியும். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு