Published:Updated:

புதிய தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம்... சென்னைக்கு தேவையே இல்லை எனும் மூத்த பொறியாளர்... ஏன்?

கண்ணன்கோட்டை - தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கம் சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நீர்த் தேக்கத்திற்காக செலவிடப்பட்ட தொகை முழுக்க தண்டச்செலவு என்கிறார் மூத்த பொறியாளர் வீரப்பன்.

``சென்னை மாநகரின் குடிநீர் தேவையைப் போக்க ஐந்தாவது நீர்த்தேக்கமாகக் கண்ணன்கோட்டை - தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கம் சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி அரசு சார்பாகப் பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்துக்காக ஏறக்குறைய ரூ.500 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தெளிவான பொறியியல் நோக்கமின்றி, குருட்டாம் போக்கில் மக்களின் வரிப்பணத்தைப் பயனற்ற திட்டங்களில் செலவிட்டிருக்கிறார்கள். அரசுத் திட்டங்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் திட்டம் ஆரம்பிக்கும் முன்பே இணையதளத்தில் வெளியிட்டு, தகுதியும் சமுதாய அக்கறையுடைய பொறியாளர் வல்லுநர்களிடமிருந்து கருத்துரைகளும் கேட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் கேட்கப்படவில்லை” என்று சாடுகிறார் தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர் முனைவர் அ.வீரப்பன்.

Kannankottai Dam
Kannankottai Dam

இதுகுறித்து அவர் விளக்கமாகப் பேசியபோது, ``2000 - 2010-ம் ஆண்டுகளில் சென்னைக் குடிநீர் மற்றும் நகராட்சித் துறையிலிருந்த சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சென்னையின் குடிநீர்த் தேவைக் கொள்ளளவை 16 டி.எம்.சி-க்கு உயர்த்த வேண்டும். அதற்காகச் சென்னை மாநகரைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கிக் கட்டமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை, தேர்வாய்க் கண்டிகை என்ற இரண்டு ஏரிகளை ஒன்றாக இணைத்து ஒரு புதிய கூடுதல் நீர்த்தேக்கத்தை 1 டி.எம்.சி (இருமுறை நிரப்புதல் அடிப்படையில்) கொள்ளளவில் நிரப்புவது எனத் திட்டம் தீட்டி 2013-ம் ஆண்டில் ரூ.330 கோடி திட்ட மதிப்பீட்டில் வேலைகளைத் தொடங்கினர்.

இத்திட்டத்தின்படி தமிழ்நாட்டு எல்லையில் உள்ள பூண்டி கால்வாயின் `0’ புள்ளி (Zero Point)-யிலிருந்து பூண்டி நீர்த்தேக்கத்துக்குக் குடிநீர் வழங்கும் கண்டலேறு - பூண்டி கால்வாயில் (கே.பி கால்வாய்) ஒரு கிளைக் கால்வாயை 7.90 கி.மீ தொலைவுக்கு வெட்டி கண்ணன்கோட்டை - தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கத்தை நிரப்ப வேண்டும். இதற்காக 1,495 ஏக்கர் தனியார் நிலத்தை ரூ.160 கோடி தொகை கொடுத்து கையகப்படுத்த வேண்டி இருந்தது. இத்தகைய தனியார் நிலத்தைக் கையகப்படுத்துவதில் உள்ள மக்களின் எதிர்ப்பால் - நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலம் கையகப்படுத்துவதற்காக ரூ.160 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கால நீட்டிப்பால் இத்திட்டச் செலவு ரூ.330 கோடியிலிருந்து ரூ.380 கோடியாக அதிகரித்தது. இதையே கான்கிரீட் குழாய்கள் மூலமாக சாலையோரங்களில் எடுத்துச் சென்றிருந்தால் ரூ.175.87 கோடி செலவில் இரண்டு ஆண்டுகளில், (தனியார் நிலம் கையகப்படுத்தலின்றி) விரைவாக நிறைவேற்றியிருக்கலாம்.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்

இத்திட்டத்தின் இன்னுமொரு பகுதி +35.16 மீ உயரமுள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் தேக்கிய தண்ணீரை 17.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளூர் சாலைகளின் ஓரமாக 900 மி.மீ விட்டமுடைய குழாய்களின் மூலமாக +43.10 மீட்டர் உயரமுடைய கே.பி கால்வாயில் இறைவைகளால் நீரேற்றி மீண்டும் கொண்டுவந்து விடுவது. அதன் பின்னர் இந்தத் தண்ணீரை கே.பி கால்வாயில் மீதமுள்ள 21.425 கி.மீ தூரம் ஓடி பூண்டி நீர்த்தேக்கத்தில் சேர்ப்பது. இதற்காகச் சென்னைக் குடிநீர் ரூ.102.50 கோடியைச் செலவழித்துள்ளது. இந்தச் செலவையும் சேர்த்து இந்தத் திட்டத்தின் மொத்தத் திட்ட செலவு ரூ.482.50 கோடியாக உயர்ந்துள்ளது. இதைப் பற்றிய செய்தி எந்த ஊடகங்களிலும் வரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதற்காக கே.பி கால்வாயிலிருந்து +2200 மீ இடத்திலிருந்து 7.90 கி.மீ தூரத்துக்குத் திறந்தவெளிக் கால்வாய் வெட்டி - கே.பி கால்வாய்த் தண்ணீரைத் திருப்பி கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்துக்கு எடுத்துச் சென்ற பின் மீண்டும் நீரேற்றும் குழாய்கள் வழியாக (சாலை ஓரங்களின் வழியே) 17.50 கிலோமீட்டர் தூரமுள்ள கே.பி கால்வாயிலேயே +3850 மீட்டரில் விட வேண்டிய அவசியமென்ன?

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்

இப்போது உள்ள கே.பி கால்வாய் (0 புள்ளியிலிருந்து 25.275 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்) இந்தக் கிருஷ்ணா நதி தண்ணீரை எடுத்துச் செல்லத்தக்க வகையிலிருக்கும்போது எதற்காக இப்படி ஒரு கிளைக் கால்வாய் நீர்த்தேக்கம், மறுபடியும் கே.பி கால்வாயிலேயே பைபாஸ் செய்து எதற்காக விடப்படுகிறது? இதனால் கண்ணன்கோட்டை - தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கம் கூடுதல் நீர்த்தேக்கமாக இல்லாமல் இடையிட்ட நீர்த்தேக்கமாகவே (Transit Storage) அமைந்திருப்பதைக் காணலாம்.

இது கூடுதல் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கமாகவும் செயல்படவில்லை. அதற்குப் பதிலாக பூண்டி நீர்த்தேக்கத்திலே தண்ணீரை ஆண்டுக்கு இருமுறை நிரப்பினால் எந்தச் செலவுமின்றி 3.23 டி.எம்.சி தண்ணீரைக் கூடுதலாகச் சேமித்து வைக்க முடியும். ஆண்டுதோறும் ஆந்திரஅரசு கே.பி கால்வாய் மூலமாக நமக்கு ஒப்பந்தப்படி 12 டி.எம்.சி தண்ணீரை ஆறுமாதங்களுக்கு மேலாகத் தர வேண்டும்.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்

இந்த முழுத் தண்ணீரையும் பூண்டியில் ஆண்டுதோறும் சேமித்து சோழவரம், செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களின் மூலமாக (இருமுறை நிரப்பல் மூலமாக) எவ்விதக் கூடுதல் செலவும் இன்றி நம்முடைய 4 நீர்த்தேக்கங்களில் 22.50 டி.எம்.சி (இருமுறை நிரப்பினால்) நமக்கு கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்கும் வசதி இப்போதே இருக்கிறது. நிலைமை இப்படியிருக்க ரூ.482.50 கோடி தண்டச் செலவின்றி வேறென்ன?

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க கால்வாய்
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க கால்வாய்

எனவே, புதியதாகக் கட்டமைக்கப்பட்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தால் சென்னைக் குடிநீருக்கு எந்தப் புதிய கூடுதல் பயனுமில்லை. மேலும், உண்மையில் கூடுதல் கொள்ளளவு வேண்டி நீரை தேக்கி வைத்திட பூண்டி நீர்த்தேக்கத்தைச் சராசரியாக ஒரு மீட்டர் ஆழப்படுத்தினால் 1.15 டி.எம்.சி தண்ணீரைக் கூடுதலாகச் சேர்த்து வைக்கலாம்.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்
நிலம் நீர் நீதி: நிரம்பிய ஏரி... கசியும் தண்ணீர்... அரசின் அலட்சியத்தால் கவலையில் விவசாயிகள்!

6 மாதங்களில் (7 ஆண்டுகளைக் கடத்தாமல்) ரூ.163.15 கோடியில் இதை எளிதாகச் செய்திருக்க முடியும். இந்தச் சமயத்தில் கே.பி கால்வாய் (0 புள்ளி முதல் பூண்டி நீர்த்தேக்கம் வரை 25.275 கி.மீ தூரம்) பல ஆண்டுகளாகச் சரியாகப் பராமரிக்கப்படாமல் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இந்த 25.275 கி.மீ தூரத்தை முழுவதும் கான்கிரீட் லைனிங் செய்தால் (ரூ.35.70 கோடி செலவில்) கிருஷ்ணா நீர் முழுமையும் விரைவாகப் பூண்டி நீர்த்தேக்கத்தில் சேர்க்க முடியும். எதற்காகப் பகுதி பகுதியாகக் கூடுதலாகச் செலவு செய்து பழுது நீக்கல் வேலை செய்ய வேண்டும்? இதுவும் தவறான அணுகுமுறை.

2030-ம் ஆண்டில் சென்னையின் குடிநீர்த் தேவை 20 டி.எம்.சியாக இருக்கும். இப்போது இருக்கும் நான்கு நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 11.257 டி.எம்.சி மட்டுமே. எனவே மீதி 8.75 டி.எம்.சி கொள்ளளவுடைய புதிய நீர்த்தேக்கங்கள் விரைந்து உருவாக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கொள்கை முடிவு தீர்மானம் மிகச் சரியானதன்று, தேவையற்றது.

தற்போது சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அளவு ஆண்டுக்கு 2.10 டி.எம்.சி (மீஞ்சூர் மற்றும் நெம்மேலி). சென்னைப் புறநகரில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து பெறும் நீரின் அளவு 0.50 டி.எம்.சி. வீராணம் ஏரி - நெய்வேலியில் இருந்து பெறும் நீரின் அளவு 1 டி.எம்.சி. மேலும், இன்னொரு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் 200 எம்.எல்.டி (2.10 டிஎம்சி) கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதுபோக சென்னைக் குடிநீருக்கு ஓராண்டுக்குத் தேவைப்படுவது 9.96 டி.எம்.சி மட்டுமே. இதை இன்றுள்ள நான்கு நீர்த்தேக்கங்களிலேயே (11.257 டிஎம்.சி) தேக்கி வைக்க முடியும். இந்தக் கூடுதல் நீரை பூண்டி, சோழவரம், செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் வருடத்துக்கு இருமுறை நிரப்புதல் என்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்தால்... ஆண்டுக்குக் கூடுதலாக 11.257 டி.எம்.சி நீரைத் தேக்கி வைத்து பயன்படுத்த முடியும். எனவே, 2030-ம் ஆண்டுகளில் சென்னை மாநகரகத்துக்குத் தேவைப்படும் (மதிப்பிடும் அளவு) 20 டி.எம்.சி தண்ணீரை மேலே குறிப்பிட்ட நான்கு ஏரிகளிலேயே சேமிக்க முடியும். கூடுதலாகப் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படாது. மக்கள் வரி பணத்தை வீணடிக்கவும் தேவையில்லை” என்றார்.

முனைவர் வீரப்பன்
முனைவர் வீரப்பன்

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அமைந்திருக்கும் இடம் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலம். இந்தத் திட்டத்தால் 1,400 ஏக்கர் நிலங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரவில்லை. வளர்ச்சி திட்டங்களையோ, மக்கள் சார்ந்த திட்டங்களையோ தீட்டுவதற்கு முன்பு நன்கு யோசித்து செயல்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை அல்லவா?" என்கிறார் வீரப்பன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு