Published:Updated:

மேக்கேதாட்டூ விவகாரம்: கர்நாடகாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு செய்யவேண்டியவை என்ன?

மேக்கேதாட்டூ

இரு மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தை என்பது காலங்கடத்தும் கர்நாடகாவின் சதித்திட்டங்களுக்கு துணைபோகும் செயல். 35 ஆண்டுக்கால காவிரிப் பேச்சுக்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த படிப்பினை. எனவே எந்தக் காலத்திலும் பேச்சு வார்த்தைக்குத் தமிழ்நாடு அரசு ஒத்துக் கொள்ளக் கூடாது.

மேக்கேதாட்டூ விவகாரம்: கர்நாடகாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு செய்யவேண்டியவை என்ன?

இரு மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தை என்பது காலங்கடத்தும் கர்நாடகாவின் சதித்திட்டங்களுக்கு துணைபோகும் செயல். 35 ஆண்டுக்கால காவிரிப் பேச்சுக்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த படிப்பினை. எனவே எந்தக் காலத்திலும் பேச்சு வார்த்தைக்குத் தமிழ்நாடு அரசு ஒத்துக் கொள்ளக் கூடாது.

Published:Updated:
மேக்கேதாட்டூ

சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணைகட்ட 2022-23 நிதியாண்டில் ரூ.1,000 கோடியை ஒதுக்கி, தமிழ்நாட்டில் அரசினர், அரசியல் கட்சியினர், உழவர் சங்கங்கள் மற்றும் நடுநிலையான அறிவாளிகளிடையே மிகப் பெரிய தாக்குதலைத் தொடுத்துள்ளது கர்நாடகா. கடந்த பத்தாண்டுகளாகவே கர்நாடக அரசு, காவிரியில் தமிழகம் - புதுச்சேரி கீழ்மடை மாநிலங்களுக்குரிய அளவு நீரைக் காலத்தே வழங்காமல் கர்நாடகாவின் பாசனப் பரப்பைக் கூட்டிட, சதித் திட்டங்களின் மூலமாகச் சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்திவருகிறது. கடந்த 16-02-2018 அன்று உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்மூலம், தமிழ்நாட்டின் பங்கில் 14.75 டிம்சி நீர் (பெங்களூரு குடிநீர் வழங்கல் என்ற பெயரில்) கர்நாடாகாவுக்கு வழங்கப்பட்டது. இது காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் தீர்ப்பிற்கு மேல் கூடுதலாக வழங்கப்பட்ட ஓரவஞ்சனைத் தீர்ப்பு.

கல்லணை
கல்லணை

1960 -70 ஆண்டுகளில் ஆண்டுக்கு 350 டிஎம்சி வரப் பெற்ற தமிழ்நாட்டின் பங்கு, காவிரி நதி நீர் நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பில் 205 டிஎம்சி (1990) யாகக் குறைந்து - இறுதித் தீர்ப்பில் (2007) 192 டிஎம்சியாகக் குறைந்தது. இதற்கு மேலும் அடிமேல் அடியாக இந்த அளவு - உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில் (16-02-2018) மேலும் 14.75 டிஎம்சி குறைந்து 177.25 டிஎம்சியாக ஆனது. இதையும் முறையாக கர்நாடகா மாதா மாதம் வழங்குவதில்லை. பெரும் வெள்ளக் காலங்களில் மட்டும் தமிழகத்தை வடிநிலமாகப் பயன்படுத்தி மிகு வெள்ளநீரை - நாம் பயன்படுத்த முடியா வண்ணம் விடுவிக்கிறது. நமக்கு வரப்பெற்ற மிகு வெள்ள நீரைப் பயன்படுத்தும் காவிரி - குண்டாறு இணைப்புக் கால்வாய், மேட்டூர்- சரபங்கா நீரேற்றும் திட்டங்களுக்குக் கூட முட்டுக்கட்டைபோட்டு வருகிறது. இது குறித்து ஒன்றிய அரசோ காவிரி மேலாண்மை ஆணையமோ கண்டுகொள்வதில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன் பின்பும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு குடிநீர் என்ற போர்வையில் மேக்கேதாட்டூ என்னுமிடத்தில் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் அமைக்க ரூ.9,000 கோடியில் விரிவான திட்ட அறிக்கையினைக் கர்நாடகா தயாரித்து ஒன்றிய அரசு, மைய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் இவற்றின் ஒப்புதலைப் பெறத் தீவிரமாக முயன்றுவருகிறது. இதைக் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களில் விவாதித்திட, இந்த ஆணையத்தை வற்புறுத்துகிறது. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு முறையும் இப்பொருளை விவாதித்திட கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த நிலையில்தான் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கங்கணம் கட்டிக் கொண்டு மேக்கேதாட்டூ அணை எங்களின் உரிமை என்று சொல்லி அணையைக் கட்டியே தீருவோம் என்று சூளுரைத்து ஒன்றிய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் தருகிறார். அண்மையில் (05-03-2022) பெங்களூரு வந்த ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகவாட், இருமாநிலங்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்புதல் பெற்று மேக்கேதாட்டூ அணை கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

காவிரி
காவிரி

இவற்றிற்கு எதிர்வினையாக - தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் கர்நாடகாவின் மேக்கேதாட்டூ அணையானது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் (05-02-2007) உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் (16-02-2018) எதிரானது. எனவே ஒன்றிய அரசின் நீர்வளத்துறையும் காவிரி மேலாண்மை ஆணையமும் - இதற்கு ஒப்புதல் கொடுக்கக்கூடாது. ஒன்றிய அரசு இதில் ஒருதலைப் பட்சமாகச் செயற்படக் கூடாது என்றும் காவிரி நதி நீரில் தமிழகத்திற்குள்ள உரிமையை நிலை நாட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்போம் என உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நாளிதழ் ஒன்றில், காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில், தம் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்க அதிகாரம் உரிமை உண்டா என்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் கருத்துரை கேட்க முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

18-03-2022 அன்று தொடங்கவிருக்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் கர்நாடகாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

கிருஷ்ணராஜசாகர் அணை
கிருஷ்ணராஜசாகர் அணை

வீரேந்திர பாட்டில், தேவ கவுடா, எடியூரப்பா, குமாரசாமி, சித்தராமையா, பசவராஜ் பொம்மை என கர்நாடகாவில் எந்தக் கட்சி முதல்வராக இருந்தாலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகக் காவிரியில் தமிழகத்திற்குரிய உரிமையளவினை வழங்காமல், மறைமுக மாற்றுத் திட்டங்களின் மூலம் அவர்தம் பாசனப் பரப்பைக் கூட்டிக்கொண்டே வந்துள்ளனர். ஒரு மாநில அரசும் அதன் முதலமைச்சர்களும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஒரு சிறிதும் மதிக்காமல் கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து தொல்லைகள் தந்து வருகின்றனர். தற்போது மேக்கேதாட்டூவில் பெரும் நீர்த்தேக்கத்தைக் கட்டத் தீவிரமாக முனைந்துள்ளனர். ஆனால் பொய்யான செய்திகளைப் புனைந்துரைக்கின்றனர்.

1974-க்குப் பின்னே எந்தக் காலத்திலும் எந்தச் சமயத்திலும் தமிழகத்திற்குரிய காவிரி நீரை நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பில் (25, ஜூன் 1991) அளிக்கப்பட்ட 205 டிஎம்சி தண்ணீரையோ, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் (05-02-2007) வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீரையோ எந்தக் காலத்திலும் வழங்கியது கிடையாது. ஒப்பந்த விதிகள், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்கள், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகள் மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டி நெறிகள் அனைத்துமே கர்நாடக அரசுக்கு ஒரு பொருட்டல்ல. அவை மீறப்படுவதற்கே என்ற மனப்பான்மை போக்கு கர்நாடக அரசிடமும் அதன் அரசியல்வாதிகளிடமும் ஏன் கர்நாடக விவசாயிகளிடமும் ஊறியுள்ளது என்பது பலமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காவிரி நதி கர்நாடக மாநிலத்தில் ஓடுவதால் அவர்களின் பயன்பாட்டிற்குப் போக மீதியுள்ள வெள்ள உபரி தண்ணீர்தான் இதுவரை வடிகாலாக (நிறுத்தி வைத்துக்கொள்ள கட்டமைப்பு வசதிகள் இல்லாமையால்) தமிழகத்திற்கு விடப்பட்டுள்ளது. எங்கள் அணைகள் முழுக் கொள்ளளவை எட்டினால்தான் உபரி நீர் தமிழ்நாட்டுக்கு, அவை நிரம்பாவிட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்பதுதான் அவர்களின் வாடிக்கையான கொள்கை முழக்கம்.

அணை
அணை

இந்த கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில்தான் இந்திய அரசும் தமிழக அரசும் எதுவும் செய்து விட முடியாது, செய்ய மாட்டார்கள் என்ற தடாலடி அரசியல் அடிப்படையில் எவ்வளவு முறையற்றதாகவும் ஒப்பந்தத்தை மீறியதாக இருந்தாலும் 67 டிஎம்சி கொள்ளளவில் மேக்கேதாட்டூவில் அணை கட்டிட கர்நாடக அரசு தொடர் முயற்சியில் இறங்கியுள்ளது. இச்சதித்திட்டத்தைப் புரிந்து கொண்டு இப்போதாவது தமிழக அரசு ஒரு சிறிதும் காலம் தாழ்த்தாது விரைந்து தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கிட வேண்டும் என்பது தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு கோரிக்கை.

நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டப்படி காவிரி நடுவர் மன்றம் ஓர் அரசியல் அமைப்பு சட்ட நிறுவனம். அதைப்போலவே இந்திய உச்ச நீதிமன்றமும் ஓர் அரசியல் அமைப்பு நிறுவனம். ஒவ்வொரு மாநில அரசும் சட்டமன்றமும் அரசியல் அமைப்பின்படி நிறுவப்பட்டவை. எனவே எந்த மாநில அரசும் அரசியல் அமைப்புச் சட்டப்படி நியமிக்கப்பட்ட நிறுவனங்களின் அறிவுத்தல்கள்படியே நடந்திட செயல்களை ஆற்றிட வேண்டும். இவற்றிற்கு மாறாக நடக்க கர்நாடக மாநிலத்திற்கு எந்த உரிமையும் இல்லை, தனிப்பட்ட அதிகாரமும் கிடையாது.

ஆனால் கர்நாடகா அரசு 1970 முதல் இன்று வரை மேற்குறிப்பிட்ட அரசியல் சட்ட அமைப்புகளின் தீர்ப்புக்கெதிராகவே தொடர்ந்து நடந்துவருகிறது. காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் இவ்விதி மீறலை, முறைகேடான கர்நாடகா அரசின் அப்பட்டமான சட்டத்திற்கெதிரான நடவடிக்கைகளை, குறிப்பாக 1973-1980 ஆண்டுகளில் காவிரி உடன்படிக்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட ஒன்றிய அரசு, நடுவணரசின் மைய நீர்வள ஆணையம், மையத் திட்டக்குழு முதலியவற்றின் ஒப்புதலன்றி கட்டிய கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, யாகாச்சி, சுவர்ணவதி - முதலிய ஐந்து அணைகள் - இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கெதிரானவை எனக் குற்ற குறிப்பாணை அனுப்பிக் கர்நாடகாவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும்.

அணை
அணை

மேலும் தற்போதைய மேக்கேதாட்டூ அணை கட்டலைத் தடுத்திட உச்சநீதிமன்றத்தில் போட்டுள்ள வழக்கை விரைவுபடுத்த வேண்டும். மிகச் சிறந்த வல்லுநர் வழக்கறிஞர்களை நியமித்து வாதாடவேண்டும். ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர், நடுவணரசு நீர்வள ஆணையம் மற்றும் காவிரி நிதிநீர் மேலாண்மை ஆணையம் மீதும் தனித்தனியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்ந்து வலியுறுத்தி வாதாடவேண்டும். இந்திய ஒன்றிய அரசின் தலைமையமைச்சர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கவன ஈர்ப்பு விண்ணப்பங்கள் அனுப்பி இந்திய அரசியல் சட்டம் எண் 365-ன்படி கர்நாடாக அரசுக்குத் தாக்கீது அனுப்பச் செய்ய வேண்டும்.

இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் குடியரசு தலைவருக்கும் அறிவுறுத்தல் வழங்கிடச் சிறப்புமனு வழக்கு ஒன்றினை உச்ச நீதிமன்றத்திலும் தமிழ்நாடு அரசு உடன் தொடுத்திட வேண்டும். இவை தவிர கர்நாடகா மாநிலத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பொருளாதாரத் தடைகளையும் தமிழ்நாடு அரசு கருதலாம். இச்சிக்கல் தமிழ்நாட்டின் - காவிரிப் பாசனப் பகுதிகளின் - தமிழக உழவர்களின் உயிர்ப்பிரச்னை என்ற உணர்வு - தமிழக நீர்வளத்துறை மேல் அலுவலர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுவின் பொறியாளர்கள், தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

முனைவர் அ.வீரப்பன்
முனைவர் அ.வீரப்பன்

இரு மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தை என்பது காலங்கடத்தும் கர்நாடகாவின் சதித்திட்டங்களுக்கு துணைபோகும் செயல். 35 ஆண்டுக்கால காவிரிப் பேச்சுக்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த படிப்பினை. எனவே எந்தக் காலத்திலும் பேச்சு வார்த்தைக்குத் தமிழ்நாடு அரசு ஒத்துக் கொள்ளக் கூடாது. இதில் ஒன்றிய அரசினை ஒரு சிறிதும் நம்பி விடக் கூடாது. காவிரி நதிநீர் இன்றேல் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும் என்று தமிழக முதல்வர் அவர்களும் இச்சிக்கலுக்குத் தலையாய முன்னுரிமை கொடுத்துத் தமிழக மக்களின் உரிமைகளைக் காத்திட ஆவன செய்யவேண்டும் என்று வேண்டுகிறோம்.

-மூத்த பொறியாளர் முனைவர் அ.வீரப்பன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism