Published:Updated:

தமிழ்நாடு, தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்று சொல்வது பொய்! பொங்கும்மூத்த பொறியாளர்!

நீர்நிலை சீரமைப்பு
பிரீமியம் ஸ்டோரி
நீர்நிலை சீரமைப்பு

கூட்டம்

தமிழ்நாடு, தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்று சொல்வது பொய்! பொங்கும்மூத்த பொறியாளர்!

கூட்டம்

Published:Updated:
நீர்நிலை சீரமைப்பு
பிரீமியம் ஸ்டோரி
நீர்நிலை சீரமைப்பு

கடந்த ஜூலை 31-ம் தேதி, சென்னை அசோக் நகரில் ‘உயிர் நீர் சேமிப்புக் கூட்டம்’ நடைபெற்றது. ‘காவிரி’ தனபாலன், முனைவர் நடராஜன், ‘நந்தன் கால்வாய்’ அன்பு, பேராவூரணி ‘கைஃபா’ விஜயகுமார்... உள்ளிட்ட விவசாயச் சங்கத் தலைவர்கள், நீர் சேமிப்பில் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க பொதுச் செயலாளர் வீரப்பன் சிறப்புரையாற்றும்போது,

‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. நீர் சேமிப்புக்காக நல்ல முயற்சியை எடுத்துள்ளீர்கள். இது தொடர வேண்டும். நீர்நிலை பாதுகாப்பில் பணியாற்ற விரும்பவர்களுக்கு, தமிழ்நாட்டின் நீர் நிலைகள் பற்றிய தகவல்கள் துல்லியமாகத் தெரிய வேண்டும். ஆனால், தமிழக அரசின் இணையதளங்களில் போதுமான தகவல்கள் இல்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், வெளிப்படைத்தன்மை இல்லை. ஆந்திரா, கர்நாடகா... போன்ற மாநிலங்களின் இணையதளத்துக்குச் சென்று பார்த்தால், தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. தமிழ்நாட்டிலும் அதுபோல வேண்டும். அடிப்படைத் தகவல்கள் இருந்தால்தான், களப்பணிகள் சரியாகச் செய்ய முடியும்.

கூட்டம்
கூட்டம்

மேலும், தமிழ்நாட்டு மக்களைப் பொதுப் பணித்துறை அதிகாரிகளும், இன்னும் பல அறிவாளிகளும் சேர்ந்து ஒரு பொய்யான தகவலைப் பல ஆண்டுகளாகச் சொல்லி, நம்ப வைத்து வருகிறார்கள். அதாவது, தமிழ்நாடு ஒரு தண்ணீர் பற்றாக்குறை மாநிலம். ஆந்திரா, கர்நாடகா, கேரளா விலிருந்து தண்ணீர் வர வேண்டும். கங்கையை இணைக்க வேண்டும். கோதாவரியும், மகாநதியும் தமிழகம் நோக்கிப் பாய வேண்டும். அப்போதுதான், நம் தண்ணீர் தாகம் தீரும். இதற்குப் பல ஆயிரம் கோடி செலவாகும் என்று சொல்லி வருகிறார்கள். இதை நம்பாதீர்கள்; இவை உண்மை அல்ல.

ஓர் ஆண்டுக்கு தமிழ்நாட்டுக்குப் பாசனம், தொழிற்சாலை, குடிநீர்... உள்ளிட்ட தேவை களுக்கு 1,260 டி.எம்.சி தண்ணீர் இருந்தால் போதும். ஆனால், நமக்கு மழை மூலம் 2,500 டி.எம்.சி வரை தண்ணீர் கிடைக்கிறது. இதை முறையாகப் பயன்படுத்தும் கலையைத்தான் இன்னும் கற்றுக்கொள்ளாமல் இருக்கும். தமிழ்நாட்டில் 113 நீர்த் தேக்கங்களும் 40,000 ஏரிகளும் உள்ளன. இதன் மூலம் சுமார் 750 டி.எம்.சி நீர் கிடைக்கிறது. இவை போதுமான கொள்ளளவு இல்லாமல் உள்ளன. அதாவது, தூர்வாரப்படாமல் உள்ளன. இதை 1 - 2 மீட்டர் ஆழத்துக்குத் தூர்வாரினால் போதும், 300 டி.எம்.சி நீர் கிடைக்கும். இதை மழை பெய்யும்போது பிடித்து வைத்துக்கொண்டால், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு தண்ணீர் தன்னிறைவு மாநிலமாக மாறும்.

நீர்நிலை சீரமைப்பு
நீர்நிலை சீரமைப்பு

சரி, தூர்வாரக் கோடிக்கணக்கில் பணம் வேண்டும் என்று மலைத்து நிற்க வேண்டாம். அந்தப் பகுதி விவசாயிகளுக்கு நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண் எடுக்க அனுமதி கொடுத்தால் போதும். மேலும், செங்கல் சூளை, மண்பாண்டம், கட்டுமான நிறுவனங்களுக்கு மண் அதிக அளவுக்குத் தேவைப்படுகின்றன. விவசாயிகளுக்குக் கட்டணம் இல்லாமலும், நிறுவனங்களுக்குப் பணம் வாங்கிக் கொண்டும் வண்டல் மண்ணைக் கொடுக்கலாம். இதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கும். நீர் நிலை களும் தூர் வாரப்பட்டு, போதுமான அளவுக்கு நீர் வளம் பெருகும். இதைச் செய்தால், விரைவில் தமிழ்நாடு தண்ணீர் தன்னிறைவு மாநிலமாக மாறும். இந்தத் தகவல் அரசுகளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு விவசாயிக்கும் சென்று சேர வேண்டும். நம்மிடம் நீர் வளம் உள்ளது என்று, அவர் களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுங்கள். நிச்சயம், இந்தக் கூட்டம் நல்ல தொடக்கமாக இருக்கும்’’ என்று சொல்லி முடித்தார், மூத்த பொறியாளர் வீரப்பன்.

வீரப்பன்,  ரவிச்சந்திரன்
வீரப்பன், ரவிச்சந்திரன்

இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரனிடம் பேசினோம், ‘‘அடிப்படை யில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை விவசாயம் செய்தும், கால்நடை வளர்த்தும்தான் எங்களை நன்றாகப் படிக்க வைத்தார். இப்போது நல்ல நிலையில் உள்ளோம். நான் நாட்டை ஆளும் தேசிய கட்சியின் விவசாயப் பிரிவில் முக்கியப் பொறுப்பில் உள்ளேன். ஆனால், கட்சியின் சாயம் இல்லாமல், இது போன்ற விவசாயப் பணி செய்து வருகிறேன். நீர் சேமிப்பு, மரம் நடுதல்... என்று பலருடன் இணைந்து செயல் பட்டு வருகிறேன். விவசாயம் செழிக்க வேண்டும் என்றால், நீர் சேமிப்பு முக்கியம். அதை வலியுறுத்தவும், கட்சி சார்ப்பற்று அரசுக்கு ஆலோசனை வழங்கவும், இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இங்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் அனைத்தையும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வோம்’’ என்றார் நம்பிக்கையுடன்.


தொடர்புக்கு, ரவிச்சந்திரன்

செல்போன்: 91766 99747.

“கட்சியைத் தூர வைத்து விடுங்கள்!’’

மூத்த பொறியாளர் வீரப்பன் பேசும்போது அழுத்தம்திருத்தமாகச் சொன்ன ஒரு விஷயம், வந்திருந்தவர்களை திரும்பிப் பார்க்க வைப்பதாக இருந்தது.

“இங்குள்ளவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள். நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். நீர்நிலை பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்னைக்குக் குரல் கொடுக்க வரும்போது, கட்சியைத் தூர வைத்துவிடுங்கள். எனக்குத் தமிழ்நாட்டில் உள்ள விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது வருத்தம் உள்ளது. இவர்கள் பச்சைத் துண்டு அணிந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஏதாவது ஒரு கட்சியின் பின்னால் நிற்கிறார்கள். அந்தக் கட்சி என்ன சொல்கின்றதோ, அதற்குக் கோஷம் போடுகிறார்கள். அரசியல் கட்சி பக்தி பரவசமாக இருக்கிறார்கள். இதனால், இவர்கள் நடத்தும் போராட்டம், கோரிக்கைகள் நீர்த்துப் போகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள விவசாயச் சங்கங்கள், கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா... போன்ற வெளிமாநில விவசாயச் சங்கங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். அரசியல் கட்சி பணி என்பது வேறு. விவசாயச் சங்கப் பணி என்பது வேறு. தயவு செய்து, இனியும் இதை ஒன்றாகப் பார்க்காமல், தனித்தனியாகப் பார்த்தால்தான், உங்களுக்கும் மரியாதைக் கிடைக்கும். விவசாயப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நீங்கள் இப்படி இரண்டு பட்டுக்கிடப்பதால், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை ஏமாற்றி வருகின்றது’’ என்று சொன்னார் வீரப்பன்!