Published:Updated:

நீலகிரி: இரும்புத்துகள்கள்; மறைக்கப்பட்ட கழிவு விவரம்! - 109 தேயிலை ஆலைகளுக்கு நோட்டீஸ்

தேயிலை
தேயிலை

தரமற்ற தேயிலை கொள்முதல், அதிக அளவு தேயிலைக் கழிவுகளை தேக்கிவைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட 109 தேயிலை தொழிற்சாலைகளுக்கு, தேயிலை வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

தரத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல், மோசமான பசுந்தேயிலையை வழங்கியதால் கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளாக அதள பாதாளத்தில் கிடந்த தமிழகத்தின் தேயிலை உற்பத்தி, கடந்த மூன்று ஆண்டுகளாக மெள்ள புத்துயிர் பெற்றுவருகிறது.

தேயிலைத் தோட்டம்
தேயிலைத் தோட்டம்

நீலகிரியில், சுமார் 55,000 ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும்,100-க்கும் அதிகமான தனியார் தொழிற்சாலைகளும் இயங்கிவருகின்றன.

சமீபத்தில் பசுந்தேயிலைக்கு ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக, தரத்தில் குளறுபடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தேயிலைத் தூள் உற்பத்தி செய்வதை உறுதி செய்யும் வகையில் தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலை வாரியம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரசாயனம் கலக்கப்பட்ட தேயிலை
ரசாயனம் கலக்கப்பட்ட தேயிலை

கடந்த இரண்டு மாதங்களில் 119 தேயிலை தொழிற்சாலைகளில் வாரிய அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். பல்வேறு குறைபாடுகளுடன் 109 தேயிலை தொழிற்சாலைகள் இயங்கிவருவதைக் கண்டு அவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி, ``இந்த ஆய்வில் தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்யாதது, சுகாதார தரமின்மை, சட்டரீதியாக ஆவணங்களை முறையாகப் பராமரிக்காதது, விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாகப் பணம் செலுத்தாமை, உரிமத்துக்கு அதிகமான உற்பத்தி செய்தது, இரும்புத்துகள்களை அகற்றாதது, கழிவு விவரத்தைத் தாக்கல் செய்யாதது, விவசாயிகளுக்கு விலை பகிர்வு அடிப்படையில் உரிய விலை செலுத்தாமை, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் தேயிலைக் கழிவுகளை சேர்த்துவைத்தல் போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

தேயிலை
தேயிலை

இது தொடர்பாக 109 தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிற. தேயிலை தொழிற்சாலைகளிடமிருந்து பதில்கள் கிடைக்கப் பெற்றதும், தேயிலை சந்தைப்படுத்துதல் கட்டுபாட்டு ஆணை, தேயிலை கழிவுக் கட்டுபாட்டு ஆணை ஆகியவற்றின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு