Published:Updated:

25 கி.மீ நடக்கும்; பட்டி போட்டால் விளைச்சல் பொங்கும்; குரும்பை ஆடுகள்; கோவையின் பாரம்பர்ய அடையாளம்!

குரும்பை ஆடுகள்
பிரீமியம் ஸ்டோரி
குரும்பை ஆடுகள்

கால்நடை

25 கி.மீ நடக்கும்; பட்டி போட்டால் விளைச்சல் பொங்கும்; குரும்பை ஆடுகள்; கோவையின் பாரம்பர்ய அடையாளம்!

கால்நடை

Published:Updated:
குரும்பை ஆடுகள்
பிரீமியம் ஸ்டோரி
குரும்பை ஆடுகள்

ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற கால்நடைகள் பாரம்பர்யமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோயம்புத்தூர் சுற்று வட்டாரங்களில் வளர்க்கப்படும் குரும்பை ஆடுகள், நீண்ட நெடிய பாரம்பர்யத்தைக் கொண்டவை. இது செம்மறியாட்டு வகையைச் சேர்ந்தது. இவை, மேய்ச்சல் மூலம் மட்டுமே வளர்க்கப்படும் ஆடுகளாகும். கோவை சுற்றுவட்டார கிராமங்களில் இந்த ஆடுகளை வளர்ப்பவர்கள், மேய்ச்சலுக்காக இவற்றைக் கேரளா வரை ஓட்டிச் செல்கிறார்கள்.

குரும்பை ஆடுகளின் கழிவுகள், விவசாய நிலங்களை வளப்படுத்தும் என்பதால், கிடைப் போடுவதற்காகவும் மற்றும் இறைச்சிக் காவும் இவ்வாடுகள் வளர்க்கப்படுகின்றன. குரும்பை ஆடுகள் வளர்ப்பில் பாரம்பர்யமாக ஈடுபட்டு வருபவர்கள்... குறைந்தபட்சம் 50 ஆடுகள் தொடங்கி ஆயிரக்கணக்கான ஆடுகள் வரை வளர்த்து, விளைநிலங்களில் கிடைப் போடுவதைத் தங்களுடைய குலத்தொழிலாகவே செய்து வருகின்றனர்.

குரும்பை ஆடுகள்
குரும்பை ஆடுகள்


தனித்துவ அடையாளங்கள்

இந்த ஆடுகளின் சிறப்புகள் குறித்து விவரிக்கும் உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் குமாரவேல், “கோவை சுற்றுவட்டார கிராமங்கள்தான் குரும்பை ஆடுகளோட பூர்வீகம். இந்தப் பகுதிகள்ல அதிக எண்ணிக்கையில் இந்த ஆடுகள் வளர்க்கப்படுது. அதேசமயம் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்கள்லயும்கூட குரும்பை ஆடுகள் வளர்க்குறாங்க. இப்ப தமிழ்நாட்டுல மொத்தம் 2,42,000 ஆடுகள் இருக்கு. இதோட உடல்வாகு ரொம்ப பெரிதாக இல்லாமலும், சின்னதாக இல்லாமலும், நடுத்தரமா இருக்கும். குரும்பை ஆடுகளோட உடல்ல பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளை நிறத்துல இருக்கும். தலை, கழுத்து, தோள்பட்டை வரை கறுப்பு நிறம் இருக்கும். உடம்போடு ஒப்பிடும்போது, தலை ரொம்பச் சின்னதா இருக்கும். காதுகள் பின்னோக்கிய நிலையில இருக்கும். வால் சின்னதாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.

பெட்டை ஆடுகளுக்கும், கிடா ஆடுகளுக்குமான வித்தியாசத்தை ரொம்ப எளிதா, பார்த்ததுமே கண்டுபிடிச்சிடலாம். பெட்டை ஆடுகளுக்குக் கொம்பு இருக்காது. பெட்டை ஆடுகள் 12 மாதங்கள்ல பருவத்துக்கு வந்துடும். இருந்தாலும் 18 மாதங்களுக்குப் பிறகு இனவிருத்திக்கு தயார்படுத்தினாதான் நன்றாக இருக்கும்.

குமாரவேல்
குமாரவேல்


பெட்டை ஆடு பெரும்பாலும் ஒரு குட்டிதான் போடும். ரொம்ப அரிதாகத்தான் இரட்டைக் குட்டிகள் ஈன்றெடுக்கும். பிறக்கும்போது, குட்டியானது 3 கிலோ வரை எடை இருக்கும். மேய்ச்சல்ல தான் உணவுங்கறதுனால, பல கிலோமீட்டர் தூரம் மேய்ச்சலுக்கு அழைச்சிக்கிட்டுப் போவாங்க. இயற்கையான சூழல்ல, இந்த ஆடுகள் ஆரோக்கியமா வளர்றதுனால, சீக்கிரம் சோர்வடையாது. அறுவடை முடிஞ்ச வயல்கள்ல, மறு சாகுபடிக்கு மண்ணை வளப்படுத்துறதுக்காக விவசாயி கள், இந்த ஆடுகளை வெச்சு கிடைப் போடுவாங்க. குறைந்தபட்சம் 100 ஆடுகள் முதல் 800 ஆடுகள் வரை பட்டியில் அடைச்சு கிடைப் போடுவாங்க.

உடல் எடை

பெட்டை ஆடுகள் 20 - 22 கிலோ வரை யிலும், கிடா ஆடு 25 - 30 கிலோ வரையிலும் எடை இருக்கும். குரும்பை ஆடுகள் வளர்க்குறவங்களுக்கு, கிடா குட்டியில்தான் நல்ல வருமானம் கிடைக்குது. 2 - 3 மாதங்கள்ல 6 கிலோ உடல் எடை வந்ததும், ஒரு குட்டி 3,000 ரூபாய்னு விற்பனை செய்றாங்க. குரும்பை ஆடுகளோட ஆயுள் காலம் 15 வருஷம். இந்த ஆடுகளை வளர்க்கக்கூடிய வங்க, 10 வருஷம் வரைக்கும் வச்சிருந்துட்டு வியாபாரிங்ககிட்ட வித்துடுவாங்க. செம்மறி ஆட்டு இறைச்சியைப் பலர் விரும்பி சாப்பிடுறாங்க. தோல் பதனிடும் தொழில்ல ஈடுபடக்கூடியவங்க, குரும்பை ஆடுகளோட தோலை விலைக்கு வாங்கிக்குறாங்க.

கிடாக்கள்
கிடாக்கள்

முறையான பராமரிப்பும் தீவனமும் அவசியம்

இந்த ஆடுகளை என்னதான் இயற்கை சூழல்ல வளர்த்தாலும்கூட கோமாரி, கழிச்சல் நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த ஆடுகளை வளர்க்கக்கூடிய வங்கள்ல சிலர் மட்டும்தான் தடுப்பூசி போடுறாங்க. பலர் முறையாகப் பராமரிக் குறதில்லை.

இயற்கை சூழல்ல இந்த ஆடுகளை வளர்க்குறது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு, காலத்துக்கு ஏத்த அறிவியல் பூர்வமான பராமரிப்புகளும் ரொம்ப அவசியம். அதுமாதிரி வளர்த்தால், இழப்புகள் ஏற்படாமல் இன்னும் சிறப்பா வளர்க்கலாம். உணவுக்கு மேய்ச்சல் மட்டுமே போதுமான தல்ல. இதுக்கு நல்ல சத்தான அடர் தீவனங்கள் கொடுக்கலாம். அதுமாதிரி கொடுத்தா, இதோட உடல் எடை இன்னும் அதிகரிக்கும். குட்டிகளும் ஆரோக்கியமா வளரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கலாம்.

இனவிருத்திக்கு ஒரே கிடாயை விடாமல், பிற பகுதிகள்ல உள்ள தரமான கிடாயை சுழற்சி முறையில பயன்படுத்தலாம். குரும்பை ஆடுகள் வளர்க்கக்கூடியவங்க பெரும்பாலும் இடைத்தரகர்களை மட்டுமே சார்ந்திருக்குறதுனால, நியாயமான லாபம் கிடைக்குற தில்லை. ஒருங்கிணைந்த சந்தை ஏற்பாடு செஞ்சா, இவங்க நேரடியாகப் பயனடை வாங்க. இது குரும்பை ஆடுகள் வளர்ப்பை ஊக்கப்படுத்தும்’’ என்று ஆலோசனை வழங்கினார்.

கறுப்பு குரும்பை ஆடுகள்
கறுப்பு குரும்பை ஆடுகள்

கோவை குரும்பை ஆடுகள் வளர்ப்போர் நலச்சங்கம் துணைச் செயலாளர் செந்தில், “நாங்க பல தலைமுறையா குரும்பை ஆடுகள் வளர்த்துக்கிட்டு வர்றோம். எங்களைக் குரும்பர், குரும்பா, குரும்ப கவுண்டர்கள்னு பல பெயர்கள்ல அழைப்பாங்க. இந்த ஆடு கள் பலநூறு வருஷங்களா எங்க வாழ்க்கையில முதன்மை அங்கமா இருந்துக்கிட்டு இருக்கு. இது எங்களுக்குக் குலத்தொழில்.

நான் ஆரம்பத்துல ஓர் ஆலையில வேலை பார்த்துக்கிட்டுருந்தேன். ஒருகட்டத்துல நம்மோட பாரம்பர்ய தொழிலை விட்டுடக் கூடாதுனு சுதாரிச்சிக்கிட்டு, இதுக்கு வந்துட்டேன். இந்த ஆடுகளோட என் வாழ்க்கை 20 வருஷங்கள் கடந்துடுச்சு. அப்பா எனக்கு ஆரம்பத்துல 230 ஆடுகள் கொடுத்தார். அது படிப்படியா பெருகி, இப்ப என்கிட்ட 3,000 குரும்பை ஆடுகள் இருக்கு.

இந்த ஆடுகளோடு, எங்க குடும்பமே ஊர் ஊரா மேய்ச்சலுக்குப் போவோம். இந்த ஆடுகள் பெரும்பாலான நேரங்கள்ல மேய்ஞ்சுகிட்டே இருக்கும். அதனால எங்கெல்லாம் மழை பெய்ஞ்சு, நல்ல தீவனம் கிடைக்குதோ, அங்கதான் எங்க ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போவோம்.

காலை 9 மணியில இருந்து சாயந்தரம் 6 மணி வரைக்கும் மேய்ச்சலுக்கு விடுவோம். மத்த நேரங்கள்ல பட்டியில அடைச்சிடுவோம். தவிட்டுத் தண்ணி, புண்ணாக்கு தண்ணி எல்லாம் கொடுக்க மாட்டோம். இயற்கையா கிடைக்குற புல்களைச் சாப்பிட்டுதான் இந்த ஆடுகள் வளருது.

குரும்பை ஆடுகள்
குரும்பை ஆடுகள்

கோபிசெட்டிப்பாளையம் பகுதியில நெல் அறுவடை முடிஞ்சதும் எங்களை அழைப்பாங்க. ஆண்டுக்கு இரண்டு முறை அங்க நெல் சாகுபடி நடக்கும். நடவுக்கு முன்னாடி எங்க ஆடுகளை ஓட்டிக்கிட்டுப் போயி, அங்கவுள்ள வயல்கள்ல பட்டி போடுவோம். இதோட சாணம், சிறுநீர் மண்ணுக்கு நல்ல சத்தான உரம். நெல் விவசாயிங்க மட்டுமல்ல... மஞ்சள், வாழை, தக்காளி, பச்சை மிளகாய் விவசாயம் செய்றவங்களும் எங்களை அழைப்பாங்க. ஒருமுறை பட்டி வைத்தால், இரண்டு வெள்ளாமைக்குத் தாக்குப் பிடிக்கும். கேரளாவுல உள்ள பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்கள்ல இருந்தும் நிறைய விவசாயிங்க எங்களை அழைப்பாங்க.

ஆடுகளை ஓட்டிக்கிட்டு நடைப் பயணமாகவே கேரளாவுக்குப் போவோம். எங்களோட குரும்பை ஆடுங்க ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தூரம்கூட சளைக்காம நடக்கும். ஆனா, அதுக்கு எங்களால ஈடு கொடுத்து நடக்க முடியாது. ஒரு நாளைக்கு சராசரியாக 25 கிலோ மீட்டர் தூரம் நடந்துட்டு, ஓய்வெடுத்துக்குவோம்.

குரும்பை ஆடுகளுடன் செந்தில்
குரும்பை ஆடுகளுடன் செந்தில்

ரோமத்தில் கம்பளி

இந்த ஆடுகளோட ரோமத்துல இருந்து கம்பளி செய்வாங்க. அது நீண்ட நாள்களுக்கு வரும். குளிருக்கு இதமா இருக்கும். இப்போதெல்லாம் ஆடு மேய்க்கிற தொழிலை செய்றது ரொம்ப சிரமமா இருக்கு. மேய்ச்சலுக் கான நிலம் கிடைக்குறதில்லை. ஆடுகளுக்குப் போதுமான தீவனங்கள் கிடைக்குறதில்ல. வாகனங்கள் ரொம்ப அதிகமா பெருகிடுச்சு. அதனால ஆடுகளை வேற பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அழைச்சிக்கிட்டு போறப்ப, விபத்துகள் அதிகமா நடக்குது. அரசாங்கம் எங்களோட ஆடுகளுக்குக் காப்பீடு கொடுக்குறதில்லை. தனியார்ல அதிக தொகை கேட்குறாங்க.

இப்பெல்லாம் எங்க ஆடுகளுக்கு நிறைய நோய்த்தாக்குதல்கள் ஏற்படுது. இதனால நிறைய இழப்புகள் ஏற்படுது, குட்டியை வித்தாதான் எங்களுக்கு வருமானம். முன்னாடி ஒரு குட்டி 4,000 வரைக்கும் விலை போச்சு. ஆனா, இப்பெல்லாம் 2,500 - 3,000 ரூபாய்க்குதான் விலைபோகுது.

இந்த இனம் அழிஞ்சிடக் கூடாது

இறைச்சிக்காக, வெளிமாநிலங்கள்ல இருந்து அதிக அளவுல ஆடுகள் இறக்குமதி செய்யப்படுது. இதனால, எங்களோட குரும்பை ஆடுகளுக்கு நியாயமான விலை கிடைக்குறதில்லை. இதுமாதிரி இன்னும் பல பிரச்னைகள். இந்த இனம் அழிஞ்சிடக் கூடாதுங்கறதுக்காகத்தான் இவ்வளவு சவால்களையும் கடந்து இந்தத் தொழில்ல தொடர்ந்து நீடிச்சுக்கிட்டு இருக்கோம். காப்பீடு, சந்தை, மருத்துவ வசதி... இதுக்கெல்லாம் தமிழக அரசாங்கம் ஏற்பாடு செஞ்சு கொடுத்தாதான் இந்த இனத்தை எதிர்காலத்துல காப்பாத்த முடியும்’’ என்றார்.

அரசு அக்கறையுடன் செயல்படுகிறது!

இதுகுறித்து தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத்துறை இயக்குநர் டாக்டர் ஞானசேரகனிடம் பேசினோம். “பாரம்பர்ய கால்நடை இனங்கள் அழியாமல் பாதுகாக்க ஏற்கெனவே தமிழ்நாட்டில் அந்தந்தப் பகுதிகளில் ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் குரும்பை ஆடுகள் அழியாமல் பாதுகாக்க, தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.