நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

சூரியகாந்தி விதை தட்டுப்பாடு தவிக்கும் விவசாயிகள்...

 மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

க்கத்து ஊர் சந்தையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார்கள் ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும். ஏரோட்டி சைக்கிள் ஓட்ட, வாத்தியார் பின்னாடி அமர்ந்துகொள்ள பேசிக்கொண்டே வந்தார்கள். காய்கறி விற்பனையை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மாவைச் சாலையில் பார்த்தார்கள். உடனே சைக்கிளை நிறுத்தி, மூவரும் பேசியபடியே நடந்து வர ஆரம்பமானது மாநாடு.

‘‘என்ன வாத்தியாரே ரெண்டு பேரும் சைக்கிள்ல வர்றீங்க... பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரா எதிர்ப்பைக் காட்டுறீங்களா? அதுதான் இப்ப மத்திய அரசு விலையைக் குறைச்சிடுச்சே?’’ நக்கலாகக் கேட்டார் காய்கறி.

‘‘நாங்க எதிர்ப்பைக் காட்டல. ஆனா, இன்னும் கொஞ்ச நாள்ல எல்லோரும் சைக்கிள்ல போற சூழ்நிலை வந்திடும். இந்த விலைக்கு பெட்ரோல், டீசல் வித்தா வேற என்ன பண்றது’’ சலிப்பாகச் சொன்னார் வாத்தியார்.

‘‘பெட்ரோல், டீசலுக்கு எதிரா எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தும்போதெல் லாம், ‘விலையை நிர்ணயிக்கிறது நாங்க இல்லய்யா... எண்ணெய் நிறுவனங்கதான்’னு சொல்லிச்சே மத்திய அரசு. அதெல்லாம் பொய்யா வாத்தியாரே?’’ வெள்ளந்தியாகக் கேட்டார் ஏரோட்டி.

 மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘இப்பவும் கலால் வரியைக் குறைச்சிருக்கோம்னுதான மத்திய அரசு சொல்லுது. 2024-ம் வருஷம் தேர்தல் வருது... அதுக்கான வேலையை இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க போல... சரி அதவிடுங்க நம்ம விஷயம் பேசலாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘அதுவும் சரிதான் வாத்தியாரே... பெரிய இடத்துப் பொல்லாப்பு நமக்கெதுக்கு. ஆமா, சந்தையில என்ன வாங்க வந்தீக... இப்ப வெறும் கைய வீசிகிட்டு போறீங்க. நீங்க வாங்க வந்த பொருள் கிடைக்கலயா?’’ வெள்ளந்தியாகக் கேட்டார் காய்கறி.

‘‘அட... நான் ஒண்ணும் வாங்க வரல. இவரு ஆடுகளைச் சந்தையில விக்கப் போறேன். கொஞ்சம் ஒத்தாசைக்கு வாங்கன்னு கூப்பிட்டாரு. வண்டியில ஆடுகளை ஏத்திக்கிட்டு வந்தோம். வித்துட்டு இப்ப வீட்டுக்குப் போறோம்’’ என்றார் வாத்தியார்.

‘‘ தென் மாவட்டங்கள்ல இந்தப் பட்டத்துல சூரியகாந்தி விதைப்பாங்க. ஆனா, சூரியகாந்தி விதை கிடைக்காம விவசாயிங்க அலையுறாங்க. சிறுதானியம், மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி, கடலைப் பயிர்களோட உற்பத்தியை ரெட்டிப்பாக்குறதுதான் தமிழக அரசோட 10 வருஷ செயல் திட்டத்தோட முக்கிய நோக்கம்னு சொல்றாங்க. ஆனா, விதையே கிடைக்குறதில்ல. இந்த லட்சணத்துல எப்படி ரெட்டிப்பாக்குறது’’ விரக்தியாய் சொன்னார் ஏரோட்டி.

‘‘விதை பிரச்னை பெருசா இருக்குய்யா. இன்னிக்கு நிலமையில அடுத்து வர்ற தைப்பட்டத்துக்குத் தேவையான விதைங்க அரசாங்கத்துகிட்ட இல்ல. வேளாண்மைத் துறையால செயல்படுத்தப்படுற விதைப் பெருக்கத் திட்டம் முறையா நடக்கல. அதோட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதோட உறுப்புக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் பலதும் சும்மா தூங்கிட்டு இருக்குது. புதுசா ரகங்களை வெளியிடுறது இல்ல. அதனால தமிழ்நாட் டோட விதைச் சந்தையை ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆளுங்க ஆண்டுகிட்டு இருக்காங்க. போர்க்கால அடிப்படையில அரசு இதைக் கையிலெடுக்கணும். அப்பதான் விதைத் தட்டுப்பாடு தீரும்’’ என்றார் வாத்தியார்.

‘‘என்னமோ போங்க... எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த அதிகாரிகளை மட்டும் மாத்த முடியாதுபோல’’ சலித்துக்கொண்டார் காய்கறி.

‘‘அப்படிப் பொத்தாம் பொதுவுல எல்லோரையும் சொல்லக் கூடாது. சில அதிகாரிங்க மக்களைப் பத்தி நினைச்சுட்டுதான் இருக்காங்க. உதாரணமா, நவம்பர் 1-ம் தேதி தலைமைச் செயலகத்துல உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கோரிக்கைகள் தொடர்பான ஒரு கூட்டம் நடந்துச்சாம். சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அதிகாரிகள் முன்னாடி நடந்த அந்தக் கூட்டத்துல கலந்துகிட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், ‘பாலை ஆவின் மூலமா விற்பனை செய்யுற மாதிரி, ஒவ்வோர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தயாரிக்குற பொருளை ஒரே பிராண்ட்ல விற்பனை செய்யணும். அதேபோல பொருள்களை அடைச்சு விற்பனை செய்யுற பேக்கிங் தொடர்பா பயிற்சி கொடுக்கணும். பொருள்களைச் சந்தைப்படுத்த கண்காட்சி நடத்தணும். 3 மாசத்துக்கு ஒரு தடவையாவது கண்காட்சி ஏற்பாடு செஞ்சா பொருள்களை வித்துடுவோம்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டம்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டம்

அதேபோல மத்திய அரசு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு 2 கோடி ரூபாய் முதலீட்டுத்தொகை கொடுக்குறாங்க. அதேபோல பல்வேறு திட்டங்கள் பேர்ல கடனுதவி, மானியம் கொடுக்குறாங்க. இதை மத்த மாநிலங்கள் வாங்கிட்டு இருக்காங்க. ஆனா, இதுவரைக்கும் தமிழ்நாடு மட்டும்தான் வாங்கல, அதுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரணும்னு கேட்டிருக்காங்க.

எல்லாத்தையும் கேட்டுகிட்ட சிறப்புச் செயலாக்க துறையோட தலைவர் உதயச் சந்திரன், ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்க தயாரிக்குற பொருள்களைக் காட்சிப்படுத்த கண்காட்சிகள் அமைக்கப்படும். முக்கிய நகரங்கள், மால்கள்ல நிரந்தரமா கடை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டுல 756 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இருக்கு. இந்தக் கூட்டத்துல பெரும்பான்மையான நிறுவனங்கள் வரல.

இனிமே இந்த மாதிரி கூட்டங்கள் தொடர்பா எல்லோருக்கும் முறையா தகவல் கொடுக்கணும். புவிசார் குறியீடு பெற்ற பொருள்களை சர்வதேச கண்காட்சிகள்ல காட்சிபடுத்தணும். வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில கூடுதல் கவனம் செலுத்த அரசுக்கு ஆலோசனைக் கொடுக்கப்படும்’னு சொல்லியிருக்காரு. இப்படியும் சில அதிகாரிங்க இருக்கத்தான் செய்றாங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘ஏதோ நல்லது நடந்தா சரிதான்...’’ எனச் சொன்ன ஏரோட்டி, ‘‘ஊரு வந்திடுச்சு, வீட்டுக்குப் போய் பொழப்பைப் பார்ப்போம்’’ என்று சொல்ல, அவரவர் வீட்டை நோக்கி நடக்க முடிவுக்கு வந்தது மாநாடு.