Published:Updated:

தொடர்ந்து 27,000 கனஅடி நீர்வரத்து!- 86 ஆண்டுகளில் 41-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

உபரி நீர் 16 கண் பாலத்தின் வழியாக 4,500 கனஅடி நீரும், மின்சாரம் எடுக்கும் சுரங்கத்தின் வழியாக 22,500 கனஅடி நீரும், பாசனக் கால்வாய் வழியாக 350 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை ( க. தனசேகரன் )

வடகிழக்குப் பருவ மழை வெளுத்து வாங்குவதாலும், கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணை கிடுகிடுவென அதன் முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. அதையடுத்து, இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணையிலிருந்து 16 கண் பாலம் வழியாக உபரிநீர் இன்று காலையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

தண்ணீர் வெளியேற்றம்
தண்ணீர் வெளியேற்றம்
க. தனசேகரன்

தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் பெரிய நீர்த்தேக்கமாகக் கருதப்படுவது மேட்டூர் அணை. இந்த அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் பதினொன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குப் பாசன வசதியையும், குடிநீர்த் தேவைகளையும் பூர்த்தி செய்துவருகிறது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை கால தாமதமாகவும், வடகிழக்குப் பருவ மழை உடனே பெய்து வருவதால் தமிழகம் முழுவதும் தண்ணீர்த் தேவை பூர்த்தியடைந்திருப்பதோடு பாசனத்துக்கும் தண்ணீர்த் தேவை குறைந்துள்ளது.

அதையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு வெறும் 800 கனஅடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வந்தது. நேற்று முன்தினத்திலிருந்து வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறி இருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணையிலிருந்து விநாடிக்கு19,000 கனஅடி நீரும், கபினியிலிருந்து 5,000 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர் தேக்கம்
நீர் தேக்கம்
க. தனசேகரன்

இதனால் மேட்டூர் அணைக்கு 27,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 119.50 அடியாக இருந்தது. இன்று காலை 6:30 நிலவரப்படி 120 அடி எட்டியது. காலை 9:30 மணிக்கு 120.02 அடியாக உயர்ந்ததையடுத்து உபரி நீர் 16 கண் பாலத்தின் வழியாக 4,500 கனஅடி நீரும், மின்சாரம் எடுக்கும் சுரங்கத்தின் வழியாக 22,500 கனஅடி நீரும், பாசனக் கால்வாய் வழியாக 350 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை கட்டப்பட்டு 86 ஆண்டுகளில் 41-வது முறையாக அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக இன்று உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.