Published:Updated:

இலவசமாக உழவு ஓட்டிக் கொள்ளலாம்... டாஃபே நிறுவனம் அறிவிப்பு!

டிராக்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
டிராக்டர்

அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும் அடுத்த சாகுபடியை தொடங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகாசி பட்டத்தில் விதைப்பதற்கு நிலங்கள் தயார் ஆகி வருகின்றன. இந்நிலையில் டிராக்டர் உற்பத்தி செய்யும் நிறுவனமான டாஃபே விவசாயிகளுக்கு உதவும் வகையில் டிராக்டர் மூலம் இலவசமாக உழவு ஓட்டிக்கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தற்போதைய சாகுபடி காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்காக இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை அறிவித்துள்ளோம்.

இத்திட்டம் 2021 மே மாதம் முதல் 2021 ஜூலை மாதம் வரை மாநிலம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும். தமிழ்நாட்டில் 2 ஏக்கர் அல்லது அதற்கு (2 ஏக்கருக்கும்) குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய விவசாயிகளின் நலனுக்கான இந்த இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை அறிவித்துள்ளோம்.

16,500 மேஸி ஃபெர்குசன் மற்றும் ஐஷர் டிராக்டர்கள் (Massey Ferguson and Eicher tractors) மற்றும் 26,800 வேளாண் சாதனங்களை இத்திட்டத்தின் மூலம் டஃபே நிறுவனம் வழங்குகிறது.

தமிழக அரசின் உழவன் செயலியில் (Uzhavan app) உள்ள ஜேஃபார்ம் சர்வீசஸின் டிஜிட்டல் செயல்தளத்தின் வழியாகவோ, கட்டணமில்லாத தொலைபேசி எண் 1800-4200-100 வழியாகவோ விவசாயிகள் பதிவு செய்து டிராக்டர்களை வாடகைக்கு எடுக்கலாம். தமிழ்நாடு அரசின் வேளாண்துறை மற்றும் அத்துறையின் மாவட்ட அதிகாரிகளின் ஆதரவோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

டிராக்டர்
டிராக்டர்எப்படிப் பதிவு செய்வது?

ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் விவசாயிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உழவன் செயலியைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும். உழவன் செயலியில் கேட்கும் விவரங்களை அளித்து பதிவு செய்து கொள்ளவும். பிறகு, செயலியின் முகப்பு பக்கத்தில் வேளாண் இயந்திரம் வாடகை மையம் என்ற பிரிவு இருக்கும். அதை க்ளிக் செய்து இருப்பிடம், சாகுபடி செய்யப்படும் பயிர், பரப்பளவு விவரங்களைப் பதிவு செய்துகொள்ளவும்.

அடுத்து இயந்திரத்தை வாடகைக்கு எடுக்க என்ற பிரிவை க்ளிக் செய்து மீண்டும் ஒருமுறை நிலத்தின் பரப்பளவு, சாகுபடி செய்யப்படும் பயிர் ஆகிய விவரங்களைக் கொடுத்து சமர்ப்பித்தால் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) வரும். குறுஞ்செய்தி வந்த ஒருநாளுக்குள் டிராக்டரை அனுப்புவது தொடர்பாகத் தொடர்பு கொள்வார்கள். கட்டணமில்லாத தொலைபேசி எண் (1800-4200-100) வழியாகப் பேசும்போது, 1. இந்தி, 2.தமிழ், 3. தெலுங்கு 4. கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் பேசமுடியும். உரிய மொழியைத் தேர்வு செய்து பேசவேண்டும். வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் உரிய வழிகாட்டல்களை வழங்குவார்.

டிராக்டர்
டிராக்டர்உழவு ஓட்டுவதற்கு மட்டுமல்லாமல் விதை போடுவதற்கு, களையெடுப்பதற்கு எனப் பலவித பணிகளுக்கும் கருவிகளை வழங்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முதலில் பதிவு செய்பவர் களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உழவு ஓட்டி கொடுக்கிறார்கள்.

சில மாவட்டங்களில் குறிப்பிட்ட வேளாண் வட்டாரத்தில் ஒரே ஒரு விவசாயி பதிவு செய்திருந்து, அவருக்கு எந்தவிதப் தகவலும் வரவில்லையென்றால், உடனடியாக அந்த வேளாண் வட்டார உதவி அலுவலரைத் தொடர்பு கொள்ளவும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போதும் டஃபே நிறுவனம் இந்த சேவையை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷ்
சதீஷ்

சிட்டா மட்டும் கேட்டாங்க...

இலவச டிராக்டர் சேவையைப் பயன்படுத்தி உழவு ஓட்டிய சேலம் மாவட்டம், அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சதீஷ், “எனக்கு ஒரு ஏக்கர் 85 சென்ட் நிலமிருக்கு. மக்காச்சோளம் போடுறதுக்காக உழவு ஓட்ட இருந்தேன். ஊர்ல இதபத்தி பேசிட்டிருந்தாங்க. நான் உழவன் ஆப் வழியாக பதிவு செய்தேன். பதிவு செஞ்ச தேதியிலே வந்து ஓட்டிக் கொடுத்தாங்க. என்கிட்ட சிட்டா ஆவணம் இருக்கான்னு மட்டும்தான் கேட்டாங்க. அத காட்டினதும் முழுசுமே ஓட்டி கொடுத்தாங்க. ரெண்டு சால், மூணு சால் கணக்கெல்லாம் இல்ல. நமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துல எத்தன சால் வேணும்னாலும் ஓட்டி கொடுத்துட்டு போயிடுறாங்க. டீசல், டிராக்டர் ஓட்டுற டிரைவர்னு எதுக்கும் செலவு செய்ய வேண்டியதில்லை. இந்த நேரத்துக்கு இது ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு” என்றார்.