Published:Updated:

தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட நெல் உற்பத்தி; செப் 1 முதல் நெல் கொள்முதல் தொடக்கம்!

நெல் கொள்முதல் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாட்டில், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக முந்தைய ஆண்டுகளின் சாதனையையும் விஞ்சி, நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் 5.28 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட நெல் உற்பத்தி; செப் 1 முதல் நெல் கொள்முதல் தொடக்கம்!

தமிழ்நாட்டில், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக முந்தைய ஆண்டுகளின் சாதனையையும் விஞ்சி, நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் 5.28 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
நெல் கொள்முதல் ஆலோசனைக் கூட்டம்

நெல் கொள்முதல் சீசன், வரும் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. அதனை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆகியோர் விவசாயிகளுடன் 2022-23 ஆம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.

நெல் கொள்முதல் ஆலோசனைக் கூட்டம்
நெல் கொள்முதல் ஆலோசனைக் கூட்டம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் , உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வேளாண் உற்பத்தி ஆணையர் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வே.ராஜாராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் சு.பிரபாகர், வேளாண்மைத் துறை இயக்குநர் அண்ணாதுரை, அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இதற்காக மத்திய - மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குகின்றன. விவசாயிகளிடம் வாங்கும் நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

நெல்
நெல்

ஆண்டுதோறும் அக்டோபர் 1-ல் துவங்கும் நெல் கொள்முதல் சேலம் மேட்டூர் அணையில் இருந்து, இந்தாண்டு மே மாதமே பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், செப். 1 முதல் நெல் கொள்முதல் செய்ய, தமிழக அரசு கோரிக்கை விடுத்ததால் மத்திய அரசு அதை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சக்கரபாணி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கூறியதாவது:

"கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2021-22 இல், 22.05 இலட்சம் எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, 122.22 இலட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைத்தது.

உரிய காலத்தில் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், கால்வாய்கள் மற்றும் ஏரிகளை முன்னேற்பாடாக தூர் வாரப்பட்டதும், டெல்டா மாவட்ட விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ. 61 கோடியில் "குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்" செயல்படுத்தப்பட்டதும், 14,84,052 விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூபாய் 10,292 கோடி வழங்கப்பட்டதாலும், விவசாயிகளின் தீவிர பங்கேற்பினாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சாதனை அடையப்பட்டது.

நெல் கொள்முதல் ஆலோசனைக் கூட்டம் நிறைவில்  பத்திரிக்கையாளர் சந்திப்பு
நெல் கொள்முதல் ஆலோசனைக் கூட்டம் நிறைவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்மணிகளை காலத்தே கொள்முதல் செய்யப்பட்டதால் 42.55 இலட்சம் மெ.டன் கடந்த குறுவைப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக முந்தைய ஆண்டுகளின் சாதனையையும் விஞ்சி, நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் 5.28 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு, டெல்டா மாவட்டங்களில் பெறப்பட்ட மழையும், பாசனத்திற்காக எப்போதும் இல்லாத வகையில் 19 நாட்களுக்கு முன்கூட்டியே, மே மாதம் 24 தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டதும், இதனை எதிர்நோக்கி அரசின் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக A மற்றும் B கால்வாய்கள் 5000 கி.மீ. நீளத்திற்கு, ரூ.90 கோடி செலவில் தூர் வாரப்பட்டதும், முன்பு எப்போதும் நிகழாத விதமாக 1500 கி.மீ நீளத்திற்கு c மற்றும் D வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதும், பாசனநீர் கடைமடை வரை சென்றடைந்ததற்கு முக்கிய காரணங்களாகும்.

கடந்த ஆண்டு, விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது போல, நடப்பாண்டிலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. குறுவை சாகுபடியை ஊக்குவித்திடும் வகையில் 3,18,201 விவசாயிகளுக்கு 2,432 கோடி ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு குறுவை பருவத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில், ரூ.61 கோடியில் 'குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்' செயல்படுத்தப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 8550 மெ. டன் யூரியா, 9500 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 4750 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் ஆலோசனைக் கூட்டம் நிறைவில்
நெல் கொள்முதல் ஆலோசனைக் கூட்டம் நிறைவில்

இத்தொகுப்பில் ஒரு ஏக்கருக்கு இலவசமாக வழங்கப்பட்ட உரங்களின் மதிப்பு ரூ.2,466.50 ஆகும். மேலும், 2400 மெ.டன் தரமான நெல் விதைகளையும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வேளாண் பொறியியல் துறை மூலம் விசை உழுவை இயந்திரங்கள், தானியங்கி நடவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், விசை களை எடுக்கும் கருவி மற்றும் வைக்கோல் கட்டும் கருவி ஆகியவை 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுககு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.37 இலட்சம் பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.

வரும் 01.09.2022 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவித்துள்ள பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை உழவன் செயலி மூலமாகவோ/ வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாகவோ பெற்று பயனடையலாம்" என்றார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது,

"தமிழ்நாட்டில் 103 இடங்களில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும், 1 மாதத்தில் அதற்கான பணிகள் முடிவடையும். மற்ற அரசு அலுவலக கட்டடங்களில் நெல்லை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை தனியார் ஆலைகளுக்கு அனுப்ப திங்கள் கிழமை டெண்டர் விடப்பட உள்ளது.

மேலும் வழக்கமாக ஆண்டு தோறும் அக்டோபர் 1 ம் தேதி தான் நெல் கொள்முதல் செய்வோம், ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதியே நெல்கொள்முதல் செய்யவுள்ளோம்.

அடுத்த ஆண்டு 5 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக குருவை சாகுபடி செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு 43 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 50 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெல்டா அல்லாத மற்ற மாவட்டங்களிலும் இந்த ஆண்டு அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட உள்ளது. வியாபாரிகள் எங்கேயும் பயன் அடைய கூடாது. விவசாயிகள் தான் பயன் அடைய வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் வேளாண்மை அலுவலர் உள்ளாட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கும் தவறு நடந்து விடக்கூடாது என்பதில் முதலமைச்சர் கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.

நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்வது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். இன்னும் ஒராண்டு காலம் ஆகலாம்" என்றார்.

``இந்தியாவில் முதல் முறையாக நெல் கொள்முதல் தொடங்கும் முன்பு விவசாயிகளை அழைத்து ஆலோசனை கேட்ட தமிழக அரசுக்கு நன்றி” என்று விவசாய சங்க பிரதிநிதிகள், அய்யாக்கண்ணு, இளங்கீரன், வேட்டவலம் மணிகண்டன்... உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர். அடுத்து, கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த வேளாண் துறை அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு பொன்னாடை அணிவித்து “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினார்கள். இந்த வாழ்த்தைக் கேட்டு அமைச்சர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். நாளை அமைச்சருக்கு பிறந்த நாள் என்பதது குறிப்பிடத்தக்கது.