Published:Updated:

இயற்கை வேளாண்மைக்குத் தனிப்பிரிவு... நம்மாழ்வார் ஆராய்ச்சி மையம்... தமிழக வேளாண்மை பட்ஜெட் 2021-22

வேளாண் பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
வேளாண் பட்ஜெட்

வேளாண் பட்ஜெட்

இயற்கை வேளாண்மைக்குத் தனிப்பிரிவு... நம்மாழ்வார் ஆராய்ச்சி மையம்... தமிழக வேளாண்மை பட்ஜெட் 2021-22

வேளாண் பட்ஜெட்

Published:Updated:
வேளாண் பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
வேளாண் பட்ஜெட்

மிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். ஏற்கெனவே கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டுக்கு இது புதிது. தஞ்சாவூர், கோவை, மதுரை மண்டல வாரியாகவும், மாநில அளவில் சென்னை யிலும் வேளாண்மை பட்ஜெட்டுக்கு விவசாயிகளிடமும், விவசாயப் பிரதிநிதி களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. இதைத் தவிர, பல தரப்பினரிடமும் வேளாண்மைக்குக் கருத்துகள் கேட்கப்பட்டதால், தமிழக அரசு தாக்கல் செய்யும் வேளாண்மை பட்ஜெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற அம்சங்களை இங்கு காண்போம்.

கலைஞரின் அனைத்து கிராமஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்

பல துறைகள் சேர்ந்து ஒரு கிராமத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும்பொருட்டு, கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஐந்தில் ஒரு கிராம பஞ்சாயத்தைத் தேர்ந்தெடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். கிராமங்களைத் தன்னிறைவு பெற்றதாக மாற்றவே இத்திட்டம்.

முதல்வர் ஸ்டாலினுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
முதல்வர் ஸ்டாலினுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



இளைஞர்களை வேளாண்மைக்குக் கொண்டு வருதல்

இளைய தலைமுறையினருக்கு கணினியைப் பற்றித் தெரியும் அளவுக்குக் கழனியைப் பற்றித் தெரிவதில்லை. இதனால் இளைஞர்கள் வேளாண்மையில் ஈடுபடுவது குறைந்துள்ளது. இதை மாற்ற `ஊரக இளைஞர் வேளாண் மேம்பாட்டுத் திட்டம்’ இந்த ஆண்டு 5 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும். முதல்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு இந்த ஆண்டு பயிற்சிகள் வழங்கப்படும்.

பனை

பனைமரத்தின் பரப்பு குறைந்து வருவதை அறிந்து நடப்பாண்டில் பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும். இதோடு பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் விதைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிள்ளிக் குளம் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் பனைமரம் பற்றிய ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படும். இதோடு பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவை விதியும் அறிமுகப் படுத்தப்படும்.

நெல் கொள்முதல் ஆதார விலை உயர்வு

தற்போது நெல் குவிண்டால் சன்ன ரகத்துக்கு ரூ.1960-ம், சாதாரண ரகத்துக்கு ரூ.1940-ம் வழங்கப்படுகிறது. இனி சன்ன ரகத்துக்கு 2060ம், சாதாரண ரகத்துக்கு 2015-ம் வழங்கப்படும்.

சிறுதானிய இயக்கம்

சாமை, தினை, வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.12.44 கோடியில் ‘சிறுதானிய இயக்கம்’ செயல்படுத்தப்படும். இந்த இயக்கம் கடலூர், திண்டுக்கல், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். நீலகிரி மாவட்டத்தில் சிறுதானியங்கள் பதப்படுத்தல் மையம் அமைக்கப்படும். விருதுநகரில் சிறுதானிய சாகுபடியை பற்றிக் கற்க மையம் அமைக்கப்படும்.

வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனிப் பிரிவு தொடங்கப் படும். இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதோடு இந்த ஆண்டில் ‘இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்’ என்ற பெயரில் ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்

பல்வேறு பயிர்களின் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வளம் குன்றா வேளாண்மைத் துறை `நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.

உழவர் சந்தை

பல மாவட்டங்களில் உள்ள 50 உழவர் சந்தைகளை ஆராய்ந்து மக்கள் வந்து செல்லும் இடமாக மேம்படுத்திட 12.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, வேலூர், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் புதிய உழவர் சந்தைகள் தொடங்கப்படும்.

நாளுக்கு நாள் காய்கறிகளின் தேவை அதிகரித்து வருவதால், காய்கறி, கீரைச் சாகுபடியை அதிகரிக்கத் தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ரூ.95 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

மாடித்தோட்டங்கள் நகர்ப்புறங்களில் பரவலாகி வருவதால், அதை இந்த ஆண்டிலும் நடைமுறைப்படுத்த நகர்ப்புறங்களில் 6 வகைக் காய்கறி விதைகள் அடங்கிய 1 லட்சம் மாடித்தோட்ட தொகுப்புகள் வழங்கப்படும்.

விவசாய நிலங்களில் நிலத்தடி நீரை அதிகரிக்கும் பொருட்டும் பாசன வசதியை மேம்படுத்தும் பொருட்டும் 100 சதவிகித மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் இந்த நிதியாண்டில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாத்து பரவலாக்கும் பொருட்டு, அரசு விதைப்பண்ணைகளில் பாரம்பர்ய நெல் விதைகளைப் பயிரிட்டு விவசாயிளுக்கு வழங்கப் படும். முதற்கட்டமாக 200 ஏக்கரில் பாரம்பர்ய நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு விவசாயி களுக்கு விநியோகிக்கப்படும்.

பயறு வகைகளின் உற்பத்தி குறைந்து வருவதால் அதைப் பெருக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. இதோடு ரேஷன் கடைகளிலும், மதிய உணவுத் திட்டத்திலும் பயறு வகைகளை வாங்கிப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 45.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய எண்ணெய் வித்துப் பயிர்களைத் தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். இதனால் உள்நாட்டு எண்ணெய் வகைகளின் பயன்பாடு அதிகரிக்கும்.

விலைவீழ்ச்சியால் விவசாயிகள் தவிப்பதைத் தவிர்க்கவும், விளைபொருள்களைச் சேமித்து வைக்கவும் ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இரு இடங்களில் ரூ.10 கோடி செலவில் புதிய குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.150 வழங்கப் படும். இதன்மூலம் ஒரு டன் கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்கும்.

உழவர்கள் பற்றிய உண்மைகளைப் பற்றியும், வேளாண்மையின் மகத்துவத்தைப் பற்றியும் இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்வது அவசியம். இதற்காகச் சென்னையில் வேளாண்மைக்கு என 1 கோடி ரூபாய் செலவில் தனி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

டெல்டா மாவட்ட தென்னை விவசாயி களுக்காகத் தஞ்சாவூரில் தென்னை மதிப்புக்கூட்டு மையம் தொடங்கப்படும். இதனால் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பம் எளிதாகக் கிடைக்கும்.

நீலகிரி மாவட்டம், எடப்பள்ளியில் ஒருங்கிணைந்த வேளாண் கிராம சந்தை ரூ.2 கோடியில் அமைக்கப்படும். இதன்மூலம் விவசாயிகள் கிராமங்களில் விளையும் விளை பொருள்களை அந்தப் பகுதியிலேயே விற்பனை செய்துகொள்ள முடியும்.

காய்கறிச் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.15,000 அல்லது இடுபொருள்கள் வழங்கப்படும்.

உழவர் சந்தையில் வெளி மார்க்கெட் விலை, உழவர் சந்தைவிலை அடங்கிய டிஜிட்டல் போர்டு அமைக்கப்படும்.

கொல்லிமலையில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.

உழவர் சந்தை கழிவுகளை உரமாக்கும் திட்டம் 25 உழவர் சந்தைகளில் ரூ.2 கோடியில் செயல்படுத்தப்படும்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் விளை பொருள்களை அழுகாமல் பாதுகாக்க ரூ.10 கோடியில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.

பண்ருட்டியில் பலா சிறப்பு மையம் அமைக்கப்படும்.

கோவையில் தேங்காய், ஈரோட்டில் மஞ்சள், விருதுநகரில் சிறுதானியங்கள் கற்கும் மையம் அமைக்கப்படும்.

தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை ஆகிய 7 மாவட்டங் களில் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மையம் அமைக்கப்படும்.

சென்னை, சேலம், திருப்பூர், திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடிகள் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்படும்.

ரூ.10 கோடி செவில் கிருஷ்ணகிரியில் புதிதாகத் தோட்டக்கலைக் கல்லூரி அமைக்கப்படும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலைக் கல்வி படிப்புகளைப் படிக்கத் தொடங்கப்படும்.

பசுந்தீவன வங்கிகளை ஏற்படுத்துதல், கால்நடை நலம் மற்றும் நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பண்ணைக்கு ரூ.27.12 கோடி ஒதுக்கீடு.

கறவை மாடு வளர்ப்போரின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க 14.28 கோடி ஒதுக்கீடு.

இரண்டு மணி நேரம் வேளாண் பட்ஜெட் உரை நீடித்தது. வேளாண்மை மற்றும் அதுசார்ந்த சார்பு துறைகளுக்கு ரூ.34,220 கோடி மொத்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.