Published:Updated:

`எங்களை மேலும் புண்படுத்துகிறாரா மோடி?' - சர்க்கரை ஆலை மானிய விவகாரமும் விவசாயிகள் கோபமும்

விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தோடு, மத்திய அரசு சர்க்கரை ஆலைகளுக்கு 3,500 கோடி ரூபாய் மானியம் வழங்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. இந்நிலையில், விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தோடு, மத்திய அரசு சர்க்கரை ஆலைகளுக்கு 3,500 கோடி ரூபாய் மானியம் வழங்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Indian Prime Minister Narendra Modi
Indian Prime Minister Narendra Modi
AP Photo / Manish Swarup

இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் பாடுபட்டு உற்பத்தி செய்து கொடுத்த கரும்புக்கான பணத்தை முழுமையாகத் தராமல் சர்க்கரை ஆலைகள் நீண்ட காலமாக இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றன. இதைத் தட்டிக்கேட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு, மீண்டும் மீண்டும் சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமாகவே நடந்துகொள்கிறது. இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் எனக் குற்றம்சாட்டுகிறார்கள்.

சர்க்கரை ஆலை
சர்க்கரை ஆலை

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், ``இது விவசாயிகளுக்கு சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கும் நாள். நிலுவைத்தொகை பெறாமல் உள்ள விவசாயிகளுக்கு, உதவித் தொகை வழங்குவதற்காக, சர்க்கரை ஆலைகளுக்கு 3,500 கோடி ரூபாய் மானியம் வழங்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள், கடந்த சந்தைப்படுத்துதல் ஆண்டில், கரும்பு விவசாயிகளுக்கான பணத்தைத் தர முடியாமல் நிலுவை வைத்துள்ளன. இதனால் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாவதைக் கருத்தில் கொண்டு, கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் ஆலைகளுக்கு மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2020-21 நடப்பு சந்தைப்படுத்தும் ஆண்டில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கான மானியமாகவே இத்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் ஐந்து கோடி கரும்பு விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளுடன் பல வகைகளிலும் தொடர்பில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கரும்பு விவசாயிகளுக்காகப் போராடி வரும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதனிடம் பேசியபோது, ``3,500 கோடி ரூபாயை சர்க்கரை ஆலைகளுக்கு ஏற்றுமதி மானியமாகக் கொடுப்பதால், கோடிக்கணக்கான விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று சொல்வது ஏமாற்று வேலை.

சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

தமிழ்நாட்டில் மட்டும் கரும்பு விவசாயிகளுக்கு 1,580 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வர வேண்டியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள் பல ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது. சர்க்கரை ஏற்றுமதி செய்யும் ஆலைகளுக்குதான் இந்த மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு சொல்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை ஆலைகள் மட்டுமல்ல, தனியார் சர்க்கரை ஆலைகளே கூட, வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யக்கூடிய தகுதியையோ, திறனையோ பெற்றிருக்கவில்லை.

இந்த வகையில் பார்த்தால், தமிழ்நாட்டில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கிடைக்காது. இந்த ஏற்றுமதி மானியத்தால் இங்குள்ள விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருவையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதி சுகுமாறன், ``விவசாயிகளுக்குத் தர வேண்டிய பணத்தைத் தராமல் சர்க்கரை ஆலைகள் ஏமாற்றி வருகின்றன. மத்திய மாநில அரசுகள் இதைத் தட்டிக் கேட்டு சட்டப்படி நடவடிக்கை எடுத்து, கரும்பு ஆலைகளிடமிருந்து நிலுவைத் தொகையைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு மத்திய அரசு, அன்புப் பரிசு வழங்குகிறது. பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், விவசாயிகளை மேலும் காயப்படுத்தும் வகையில் கரும்பு ஆலைகளுக்கு 3,500 கோடி ரூபாயை மத்திய அரசு வாரி வழங்குகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் கண்டித்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரில் போராடி வருகிறார்கள்.

சுகுமாறன்
சுகுமாறன்

விவசாயிகளின் உணர்வுகளுக்கு கொஞ்சம்கூட மதிப்பளிக்காமல், விவசாயிகளை மேலும் வேதனைப்படுத்தும் வகையில் சர்க்கரை ஆலைகளுக்கு சலுகைகளை வழங்குகிறது. இது விவசாயிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும் எனக் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாக இருந்தால் அந்தப் பணத்தை நேரடியாக விவசாயிகளிடமே வழங்கியிருக்க வேண்டும். ஆலைகளுக்கு ஏன் மானியம் தர வேண்டும்? இந்தப் பணத்தையும் கூட, சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு தராமல் ஏப்பம் விட வாய்ப்பு அதிகம். கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள அனுபவம் இது. விவசாயிகளின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி, சர்க்கரை ஆலைகள் வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்றுள்ளன. எந்தத் தவறும் செய்யாமல், எந்தப் பலனும் அடையாமல் விவசாயிகள் கடனாளியாக உள்ளார்கள். முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு மத்திய அரசு ஓடோடி சென்று உதவுவது வேதனையளிக்கிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு