பிரீமியம் ஸ்டோரி

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

நேரடி நெல் கொள்முதல் நிலைய கொள்ளைகள் குறித்து விகடன் இணையதளத்தில் நீண்டதொரு கட்டுரை மற்றும் பசுமை விகடன் யூடியூப் தளத்தில் விரிவான வீடியோ ஆகியவற்றைப் பதிவிட்டிருந்தோம். நெல் விவசாயிகளின் வேதனைகளை வெளிப்படுத்தும் இந்த முயற்சி குறித்து, ‘ஊழல் பேய்களின் சவால்... ஷேர் செய்வோம்... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காதுகளில் ஏறும் வரை’ என்கிற தலைப்பில் கடந்த இதழில் கட்டுரையும் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காகத் தமிழக அரசு சில நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருப்பது, நம்பிக்கை ஒளி பாய்ச்சுவதாக இருக்கிறது.

‘1800 599 3540’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ‘அலுவலக நேரங்களில் இந்த எண்ணைத் தொடர்புகொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வது குறித்துத் தெரிந்துகொள்ளலாம். புகார்கள் மற்றும் ஆலோசனைகளையும் பகிரலாம்’ என்று மாநில உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்திருக்கிறார்.

இதேபோல, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உலர்த்துவதற்காக நவீன கருவி ஒன்று திருவாரூர் மாவட்டம், செருமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள் இவை. அதேசமயம், பெயருக்காக இல்லாமல், உண்மையான உணர்வுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஏற்கெனவே, அரசாங்கத்தின் சார்பில் இயங்கிவரும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் (உதவி மையங்கள்), பெரும்பாலும் கண்துடைப்புக்காகவே செயல்படுகின்றன. இதுவும் அந்த வரிசையில் இணைந்துவிடாமல், 100 சதவிகிதம் உருப்படியாக உழவர்களுக்கு உதவுவதை உறுதிப்படுத்தட்டும்... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசின் சாதனைகளில் ஒன்றாக இடம் பிடிக்கட்டும்!

- ஆசிரியர்

நம்பிக்கை ஒளி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு