நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

காத்திருக்காமல்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘உச்சிமரத்தில் உட்கார்ந்துகொண்டு, அடிமரத்தை வெட்டுபவர்’ பற்றிய கதையைச் சின்னவயதில் கேள்விப்பட்டிருப்போம். கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்தும் அப்படித்தான் தொடர்ந்து அரிவாளைத் தீட்டி, வெட்டியபடியே இருக்கின்றன.

உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு எதிராக நடத்தப்படும் செயல்பாடுகளால், புவியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. சராசரி வெப்பநிலையைவிட 1.5 டிகிரி கூடுதலாகியுள்ளது. இதன் எதிரொலியாக உணவு உற்பத்தியின் அடிநாதமாக இருக்கும் விவசாயம், உலக அளவில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதேபோல பெரும்பாலான துறைகளும் சிக்கலில்தான் இருக்கின்றன. அதேசமயம், மேலும் வெப்பநிலை உயரும் வகையிலான செயல்பாடுகள் தொடரவே செய்கின்றன.

இது, இன்னும் பேராபத்தில் நம்மைத் தள்ளிவிடும் என்பது தெரிந்திருந்தும், ‘பேராசை’யைக் குறைத்துக்கொள்ள முடியவில்லை நம்மால். இதோ, பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில், அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 12-ம் தேதி வரை நடந்துகொண்டிருக்கும் ‘சி.ஓ.பி.26’ எனப்படும் பருவநிலை மாநாட்டிலும் உறுதியான முடிவை எட்டவில்லை, உலக நாடுகள்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள், ‘2050-ம் ஆண்டுக்குள் சராசரி வெப்பநிலை என்கிற நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளன. ‘2070-ம் ஆண்டுக்குள்’ என்று இந்தியா உறுதியளித்துள்ளது. ஆண்டுதோறும் இப்படி கூடுவதும் உறுதியளிப்பதும் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்வதுதான் வேதனை.

உலக நாடுகள் ஒரு முடிவுக்கு வருவது இருக்கட்டும். முதலில், தமிழக அளவிலாவது இந்த விஷயங்களில் உறுதியான முயற்சிகளை முன்னெடுக்க மாநில அரசு முன்வர வேண்டும். கொரோனாவைவிட கொடுந்துயர் தரக்கூடிய பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போரை, 2070 வரை காத்திருக்காமல், உடனடியாகத் தொடங்க வேண்டும். இல்லையேல், துரும்புகூட மிஞ்சாது.

- ஆசிரியர்

காத்திருக்காமல்!