Published:Updated:

65 நாள்கள்... ரூ.163 கோடி தஞ்சை நஞ்சையில் உளுந்து... மாவட்ட ஆட்சியரின் மகத்தான திட்டம்!

கள ஆய்வில் ஆட்சியர்
பிரீமியம் ஸ்டோரி
கள ஆய்வில் ஆட்சியர்

பயறு

65 நாள்கள்... ரூ.163 கோடி தஞ்சை நஞ்சையில் உளுந்து... மாவட்ட ஆட்சியரின் மகத்தான திட்டம்!

பயறு

Published:Updated:
கள ஆய்வில் ஆட்சியர்
பிரீமியம் ஸ்டோரி
கள ஆய்வில் ஆட்சியர்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயரெடுத்த தஞ்சாவூர், முப்போகம் விளைந்த பூமி. காலப்போக்கில் பல்வேறு சூழ்நிலைகளால் முப்போகத்துக்கான சாத்தியக்கூறுகள் குறைந்து, இரண்டு போகம் மட்டுமே பயிரிடப் பட்டு வருகிறது. இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னையால் கடந்த 10 ஆண்டுகளாகப் பெரும்பாலான விவசாயிகள் ஒரு போகம் மட்டுமே நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படி ஒரு போகம் சாகுபடி செய்யும் விவசாயிகள் மாற்றுப்பயிர் எதுவும் பயிரிடாத தால் மண் வளம் மட்டுமல்ல... விளைச்சலும் குறையத் தொடங்கியது. இந்நிலை தொடர்ந்தால் தஞ்சையின் மண் வளம் குறைந்து, எதிர்காலத்தில் நெல் மகசூலும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தனது சொந்த முயற்சியில் மண் வளத்தைப் பெருக்குவதற்காக விவசாயிகளை உளுந்து சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தியுள்ளார்.

அதற்காகத் ‘தஞ்சை நஞ்சையில் உளுந்து’ என்ற திட்டத்தைத் தொடங்கி, மானிய விலையில் விதை உளுந்து, இலவசமாக உரங்கள் போன்ற உதவிகளைச் செய்து கொடுத்தார். மாவட்ட ஆட்சியர் கொடுத்த உற்சாகத்தால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் அறுவடை முடிந்த பிறகு, சுமார் 37,000 ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளனர் விவசாயிகள். இதனால் குறைந்த நாள்களில் நிறைவான வருமானம் கிடைத்ததுடன் மண் வளமும் கூடியிருப்பதைக் கண் கூடாக அறிந்துள்ளதாக விவசாயிகள், மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டி வருகிறார்கள்.

உளுந்து வயலில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
உளுந்து வயலில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் ஜஸ்டினிடம் பேசினோம். “தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் பெரும்பாலும் நெல் மட்டுமே பயிரிட்டு வந்தனர். நெல் அறுவடை முடிந்த பிறகு மாற்றுப்பயிர் எதையும் பயிரிடாமல் நிலத்தைத் தரிசாகவே போட்டு வந்தனர். நிலம் தரிசாகக் கிடப்பது ஒரு பக்கம் இருந்தாலும் மாற்றுப் பயிர் செய்வதில் கவனம் செலுத்தாததால் மண் வளமும் குறையத் தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகத் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொறுப்பேற்றதிலிருந்தே விவசாயிகள் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதில் ஆர்வமுடன் செயல்படத் தொடங்கினார். நெல் அறுவடை முடிந்த பிறகு பெரும்பாலான விவசாயிகள் நிலத்தைத் தரிசாகப் போட்டிருப்பதைக் கவனித்த மாவட்ட ஆட்சியர், அதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். நிலம் தரிசாகக் கிடப்பது மண்ணுக்கும் நல்லதில்லை, விவசாயிகளுக்கும் நல்லதில்லை என்பதை உணர்ந்தவர், ‘தஞ்சை நஞ்சையில் உளுந்து’ என்ற திட்டத்தை அறிவித்து விவசாயிகளை உளுந்து சாகுபடி செய்ய அறிவுறுத்தினார்.

2021-22 ரபி பருவத்தில் நெல் பயிரிட்டு அறுவடை முடிந்த பிறகு, களத்தில் இறங்கிய ஆட்சியர், விவசாயிகள் உளுந்து பயிரிடு வதற்காக, தானே முன்னின்று பல்வேறு பணிகளைச் செய்தார். கடந்த முறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 2,18,417 ஹெக்டேரில் நெல் பயிரிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் சாதனை படைத்திருந்தது. எப்போதெல்லாம் நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறதோ அப்போதெல்லாம் அடுத்த மாற்றுப் பயிர் சாகுபடி பெரிய அளவில் குறைந்துவிடும். இதையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆட்சியர் நெல் அறுவடை தொடங்குவதற்கு முன்னரே, ஒவ்வொரு கிராமத்திலும் உளுந்து சாகுபடி செய்வதற்கான விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தினார். குறிப்பாக, ஏன் உளுந்தைப் பயிர் செய்ய வேண்டும்? என்பதை வேளாண் அலுவலர்கள் மூலமாக மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்.

உளுந்து வயலில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
உளுந்து வயலில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் சத்துகளை உளுந்து உரிந்து தன் வேர் முடிச்சுகளில் சேமித்து வைக்கும். உளுந்துச் செடியின் இலைகள் நிலத்திலேயே உதிர்ந்து உரமாகிறது. அதனால் மண் வளம் பெருகும். அடுத்து நெல் பயிரிடும்போது நல்ல விளைச்சல் கிடைக்கும். அதன் மூலம் 25 கிலோ அளவில் உரம் போடுவதைத் தவிர்க் கலாம் என்பதையும், பொன் விளையுற பூமியான தஞ்சை பூமி தரிசாகக் கிடக்கலாமா? எனக் கூறியதோடு, ‘உங்களுக்கு வேண்டிய உதவிகளை நான் செய்து தருகிறேன். நீங்க உளுந்து பயிரிடுங்கள்’ என்று உற்சாகப் படுத்தினார்.

‘உளுந்து பயிரிடும்போது அறுவடை நேரத்தில் மழை பெய்தால் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். அதனாலேயே நாங்க உளுந்து சாகுபடியைத் தவிர்க்கிறோம்’ என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மழை பெய்தால் வீணாகாமல் அதைத் தாங்கக்கூடிய விதைகளான வம்பன்-8, வம்பன்-6, ஆடுதுறை-5 போன்ற உளுந்து விதைகளைக் கொடுத்து, சந்தேகத்தையும் தீர்த்து வைத்தோம்.

அதோடு நிற்காமல் 50 சதவிகித மானியத் தில் விவசாயிகளுக்கு விதை உளுந்து கொடுக்கப்பட்டது. உரம் போன்றவை இலவசமாகக் கொடுக்கப்பட்டது. வேளாண் துறை, விவசாயிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்டத்தில் பரவலாக 10 இடங்களைத் தேர்ந்தெடுத்து வேளாண் அலுவலர்கள் உதவியுடன் உளுந்து சாகுபடி செய்யப்பட்டது. இதனால் விவசாயி களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு, உளுந்து பயிரிடுவதில் ஆர்வமாகக் களம் இறங்கினர். மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு பகுதிக்கும் ஆய்வுக்குச் சென்று அறுவடை முடியும் வரை கண்காணிப்பிலேயே வைத்திருந்தார்.

கிட்டத்தட்ட 37,000 ஹெக்டேர் உளுந்து சாகுபடி செய்யப்பட்டது. ஹெக்டேருக்கு 700 கிலோ வீதம் 37,000 ஹெக்டேருக்கு 25,900 டன் உளுந்து அறுவடை செய்யப்பட்டது. வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை மூலம் டன் 63,000 ரூபாய் (கிலோ 63 ரூபாய்) என்று கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதன்மூலம் சுமார் 163 கோடி ரூபாய் மதிப்பிலான உளுந்து தஞ்சை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மண் வளம் பெருகுவது ஒரு பக்கம் இருந்தாலும், கிராம பொருளாதாரமும் உயர்ந்திருப்பது குறிப்பிடத் தக்கது. 65 நாள்களில் சொல்லிக்கொள்ளும்படியான லாபமும் விவசாயிகளுக்குக் கிடைத்திருக்கிறது. அடுத்து குறுவைச் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்’’ என்றார்.

மாரியப்பன்
மாரியப்பன்


புலவன்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாரியப்பனிடம் பேசினோம். ‘‘எனக்குச் சொந்தமான ரெண்டரை ஏக்கர் நிலத்துல நெல் பயிரிட்டு அறுவடை முடிச்சிருக்கேன். நாலு வருஷமா நெல் அறுவடை முடிஞ்ச பிறகு, நிலத்தைத் தரிசாகவே போட்டிருப்பேன். இந்த முறை கலெக்டர் எங்க ஊருக்கு வந்து, உளுந்து சாகுபடி செய்யச் சொன்னாரு. அதுல எங்களுக்கு நஷ்டம் ஆகும் சார்னு சொன்னேன். நிச்சயம் இழப்பு ஏற்படாது. நான் பார்த்துக்கிறேன்னு நம்பிக்கைக் கொடுத்தாரு. மானிய விலையில விதை உளுந்து கொடுத்தாங்க. என்னுடைய ரெண்டரை ஏக்கரிலும் உளுந்து விதைச்சேன். உயிர் உரங்கள் எல்லாம் இலவசமாகக் கொடுத்தாங்க. விதை உளுந்தை விதை நேர்த்திப் பண்ணிப் பயிர் செஞ்சேன்.

உளுந்து செடியோட இலைகள் வயல்ல விழுந்து மட்கி உரமானது. இதனால் மண் புழுக்கள் அதிகமாச்சு. உளுந்து அறுவடை செய்யும்போது வேர்ப்பகுதியை வயல்ல விட்டு, மேல் பகுதியை மட்டும் அறுவடை செஞ்சேன். உளுந்து, வேர் முடிச்சு சத்துக்களைச் சேமிச்சு வைக்கக்கூடியது. வேரின் அடிப்பகுதி வயலுக்குள்ளேயே இருந்ததால, அதுவும் உரமாகி மண் வளத்தைப் பெருக்கும். அடுத்த பயிருக்கான சத்தை வயல்ல தேக்கி வைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் 300 கிலோ மகசூல் கிடைச்சது. இப்ப நெல் சாகுபடிக்கான வேலைகளை ஆரம்பிச் சிருக்கேன். மண்ணுல வளம் கூடியிருக்குது. நெல் பயிரிட்ட பிறகு, உரத் தேவை பெரிய அளவுல இருக்காது. மண்ணுக்குத் தேவையான வளத்தை உளுந்து கொடுத்திருக்குது’’ என்றார்.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பேசினோம், ‘‘நாட்டுக்கு சோறு போடும் பூமி தஞ்சாவூர். அப்படிப்பட்ட மாவட்டத்தில் மண் வளத்தை எந்த அளவுக்குப் பாதுகாக்க வேண்டும். அதைத் தான் நான் செய்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான விவசாயிகள் நெல் மட்டுமே பயிரிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மாற்றுப்பயிர் ஒன்றைச் சாகுபடி செய்தால் மண் வளம் பெருகும் என்ற நிலையில் இயற்கையிலேயே மண்ணுக்கு வளத்தைக் கொடுக்கக்கூடிய உளுந்து சாகுபடி செய்ய அறிவுறுத்தி, அதற்கான உதவிகளையும் செய்து கொடுத்தோம்.

தஞ்சை பூமி தரிசாகக் கிடக்கக் கூடாது. மண் வளத்தைப் பெருக்கினால் விளைச்சல் கூடி விவசாயமும் பெருகும் என்ற நோக்கத்தில் ‘தஞ்சை நஞ்சையில் உளுந்து’ திட்டம் செயல் படுத்தப்பட்டது. அதன் மூலம் நல்ல விளைச்சல் மட்டுமல்ல... மண் வளமும் பெருகியிருப்பதாக விவசாயிகள் சொல் கிறார்கள். இனி விவசாயிகள் இதைத் தொடர வேண்டும் என்ற கோரிக்கையினையும் வைத்திருக்கிறேன். வளம் கொழிக்கும் பூமியான தஞ்சைப் பகுதியின் வளம், விவசாயிகள் மூலமே காக்கப்பட வேண்டும். மண் வளத்துடன் விவசாயிகளும் வளம் அடைவதற்கான நடவடிக்கையே இந்த முயற்சி’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism