Published:Updated:

விதைகள் தட்டுப்பாடு... தவிக்கும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்குமா அரசு?

விதை
பிரீமியம் ஸ்டோரி
News
விதை

பிரச்னை

வேளாண்மைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளின் பாராட்டைப் பெற்றது தமிழக அரசு. தற்போது 10 லட்சம் ஏக்கராக உள்ள தமிழகத்தின் சாகுபடி பரப்பை 20 லட்சம் ஏக்கராக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சாகுபடி பரப்பை அதிகமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகச் சமீபத்தில் மூன்று பசுமை இயக்கங்கள் தொடங்கப்பட்டன. வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுக்க எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே பெய்திருக்கிறது. அதனால் விவசாயிகள் அடுத்த விதைப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழகம் முழுக்க விவசாயிகள் சாகுபடி செய் வதற்கு விதைகள் இல்லை என்று தவித்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள். இது தொடர்பாக அவர்களிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம். அவர்கள் சொல்லியவற்றை இங்கு தொகுத்திருக்கிறோம்.

சாகுபடி பரப்பை அதிகரிக்கும் தமிழக அரசின் நோக்கம் சிறப்பானதுதான். ஆனால், வழக்கமாக விதைக்கும் நிலங்களுக்கே போதுமான விதைகள் கைவசம் இல்லை. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களின் விதைகள்தான், விதைத்தட்டுப்பாடு இருப்பது வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்கின்றன. அதன் பலனாக அதிக விலைக்கு விதைகளை விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்துக்கொண்டிருக்கின்றன விதை நிறுவனங்கள். அதிக விலைகொடுத்தாலும் பல நேரங்களில் தரமில்லாத விதைகளைத் தலையில் கட்டி விடுகிறார்கள். சமீபத்தில் உடுமலைப்பேட்டை பகுதியில் 130 நாள்களுக்கு மேலாகியும் கதிர்விடாத நெல் விதைகள்... ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

தரமான விதைகளைக் குறைந்த விலையில் விவசாயி களுக்குக் கொடுக்க வேண்டிய வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை போன்றவற்றிடம் விவசாயிகளுக்குத் தேவையான அளவு விதைகள், கன்றுகள் இருப்பு இல்லை. இந்தத் துறைகளுக்கு விதைகளைக் கொடுக்க வேண்டிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திடம் போதுமான அளவு வல்லுநர் விதைகள் இல்லை என்பதுதான் யதார்த்த நிலை.

வரக்கூடிய ஜனவரி மாதத்தில் டெல்டா பகுதியில் நெல் அறுவடை முடிந்த பிறகு, உளுந்து சாகுபடி செய்வார்கள். வம்பன் ஆராய்ச்சி நிலையம் மூலமாக வெளியிடப்பட்ட வம்பன்-8 ரக உளுந்தைத்தான் பெரும்பாலும் விதைப்பார்கள். அதில் உள்ள மஞ்சள் தேமல் நோய் போன்ற சில குறைபாடுகளை நீக்கி மேம்படுத்தப்பட்ட ரகமாக வம்பன்-10 மற்றும் வம்பன்-11 ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக, வம்பன்-11 ரகம் விவசாயிகளால் விரும்பி சாகுபடி செய்யப்படுகிறது.

ஜனவரி மாதம் விதைக்க வேண்டிய உளுந்து விதைகள் பல்வேறு விதை உற்பத்தி மையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு டிசம்பர் மாதமே வேளாண்துறை கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது உளுந்து விதைகள் கையிருப்பிலிருந்திருந்தால் இப்போது கிடைத்திருக்கும் மழைநீரைப் பயன்படுத்தி மானாவாரி நிலங்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து இருக்கலாம். அரசின் நோக்கமும் நிறைவேறி இருக்கும். கூடுதல் விதைகளை விடுங்கள். தேவையான விதைகள் கைவசம் இல்லை என்பதுதான் கொடுமை.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிலையங்கள் பல காலமாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றன. சமீப காலமாகப் புதிய ரகங்கள் வெளியிடப்படுவது மிக மிகக் குறைவாக இருக்கிறது. இதைச் சமீபத்தில் ஒரு விவசாயி கேட்டிருந்த தகவல் உரிமைச் சட்டத்தின் மூலமாக வேளாண் பல்கலைக் கழகமே ஒப்புக்கொண்டுள்ளது.

தற்போது இளைஞர்கள், இளம் பெண்கள் ஆர்வமாக விவசாயத்தில் களம் இறங்கு கிறார்கள். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் சாகுபடி பரப்பை நிச்சயம் அதிகமாக்க முடியும். புதிதாக விவசாயத்துக்கு வருபவர்கள் குறைந்த முதலீட்டில் விவசாயம் செய்து கொஞ்சம் லாபம் பார்க்க நினைக் கிறார்கள். அது நடந்தால் நம்பிக்கையோடு விவசாயத்தைத் தொடர்வார்கள். அதற்கு ஏற்றப் பயிர்கள், உளுந்து, கடலை, எள்ளு போன்றவைதான். ஆனால், இந்தப் பயிருக்கான தரமான விதைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மானாவாரி பரப்பு சாகுபடி அதிகரிக்காமல் இருக்கிறது. இறவைச் சாகுபடியோடு மானாவாரி பரப்பு சாகுபடியும் அதிகரிக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதற்காகப் பல திட்டங்களையும் பல கோடி ரூபாய் பணத்தையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், அது பெரும்பாலும் விழலுக்கு இறைத்த நீராகவே முடிவதுதான் வேதனை.

அரசுமூலம் கிடைக்கும் தரமான விதைகள் கிடைக்காமல் எண்ணெய் வித்து பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், தனியார் விதைகளை வாங்கி விதைக்கிறார்கள். பல நேரங்களில் அந்த விதைகளில் கலப்பு, எண்ணெய் பிழிதிறன் குறைவான விதைகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி யிருக்கிறது. எண்ணெய் அளவு குறைந்து பிண்ணாக்கு அளவு அதிகரிப்பதால் லாபம் குறைகிறது. தகுதி வாய்ந்த அதிக எண்ணெய்ப் பிழி திறனுள்ள எண்ணெய் வித்துப் பயிர் ரகங்கள் கடந்த 10 ஆண்டுகளாகக் கண்டு பிடிக்கப்படவே இல்லை.

மானாவாரிச் சாகுபடி அதிகரிப்பதில் சிறுதானியங்களின் பங்கு முக்கியமானது. ஆனால், சிறுதானிய விதைகளும் போதுமான அளவு கையிருப்பில் இல்லை. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மிளகாய் விதை அரசாங்க கிட்டங்கிகளில் இல்லாததால் தனியாரிடம் அதிக விலை கொடுத்துக் குறைவான மகசூல் கொடுக்கும் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.

ஆந்திராவில் உள்ள என்.ஜி.ஆச்சாரியா வேளாண்மைப் பல்கலைக்கழகம், திருப்பதி யில் உள்ள வேளாண்மைக் கல்லூரிகளில் விதைகளை நமது விவசாயிகள் வாங்கி வந்து சாகுபடி செய்கிறார்கள். ஆந்திராவில் அறிமுகப்படுத்தியுள்ள கதிரி-1812 என்ற நிலக்கடலை ரகம், சுமாராகப் பராமரித்தாலே ஒரு ஏக்கரில் 1,500 கிலோ கிடைக்கிறது. சரியான பராமரிப்பு இருந்தால் 2,300 கிலோ மகசூல் கொடுக்கிறது. ஆனால், நம்மிடம் அதிகபட்சம் 500 கிலோவுக்கும் மேல் மகசூல் கொடுக்கும் ரகங்கள் இல்லை.

ஆந்திராவில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் லக்னோ-49, தைவான் பிங்க் கொய்யா நாற்றுகள் இங்கு 80 முதல் 100 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. இதை அரசு நர்சரி மூலம் விற்பனை செய்தால் 50 ரூபாய்க்கு விவசாயிக்குக் கிடைத்திருக்கும். புதிதாக ரகங்கள் கண்டுபிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. வெளிமாநிலங்களில் உள்ள சிறந்த ரகங்களை வாங்கி விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் கொடுத்திருக்கலாம். அந்த வேலையையும் அரசு நிறுவனங்கள் செய்வதில்லை.

தற்போது வல்லுநர் விதைகளை வேளாண் துறைக்குக் கொடுப்பதற்காக வேளாண் பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. ஆனால், பல்கலைக்கழகம் எப்போது விதை உற்பத்தி செய்து, எப்போது கொடுக்கப்போகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

இப்படி இருந்தால் வேளாண்மைத்துறையில் அரசு எதிர்பார்க்கும் வளர்ச்சி நிச்சயமாக இருக்காது. விஞ்ஞானிகள், அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள்தான் நேரடியாகப் பாதிக்கப்படுகிறார்கள். கிலோ 60 ரூபாய்க்குக் கிடைக்க வேண்டிய விதைகளை அதிகபட்சமாக 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை. இதனால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. லாபம் குறைகிறது.

ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் ஆயிரக்கணக்கான கோடிகள் வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதில் பல கோடிகள் ஆராய்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், அதற்கான பலன் கிடைக்காமல் மக்களின் வரிப்பணம் வீணாகப் போவதுதான் வேதனை. இதில் ஒவ்வொரு துறையும் அடுத்த துறைமீது பழியைப் போட்டுத் தப்பித்துக்கொள்கின்றன.

தமிழகத்தில் 7 வகையான காலநிலை மண்டலப் பகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற விதைகள் அந்தந்தப் பருவத்துக்கு முந்தைய காலத்திலேயே முடிவு செய்யப்பட வேண்டும். ஒட்டுமொத்த விவசாய பரப்பு, தேவைப்படும் விதைகள், கூடுதலாக இந்த ஆண்டு விதைக்கப்படும் பரப்பு போன்றவற்றைக் கணக்கிட்டு தேவையான விதைகளைப் பருவ காலத்துக்கு முன்பே உற்பத்தி செய்து இருப்பு வைக்க வேண்டும். இதை ஒழுங்குபடுத்தி விதைகளைக் கையிருப்பு வைக்கும் வரை தமிழக வேளாண்மைத் துறையில் வளர்ச்சி என்பது கனவாகவே இருக்கும்.

இந்த ஆண்டு 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. விதைகள், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பயிருக்குமான தன்னிறைவு, அதிக ஏற்றுமதி, தரமான பொருள்கள் உற்பத்தி, அதிக லாபம் தரும் பயிர்கள் உருவாக்கம் போன்ற காரணங்களுக்காக இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக, இதில் என்னென்ன நோக்கங்கள் நிறைவேறியிருக்கின்றன என்பதைப் பார்த்து, அது நடக்காத பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசின் மனநிலை புரிந்து கொள்ளாமல் அதிகாரிகள், விஞ்ஞானிகள் அலட்சியமாகத்தான் இருப்பார்கள். இத்தனை கோடி பணத்தால் பெரிதாகப் பலன் இல்லை எனும்போது, அதை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்தால்கூட விவசாயிகளின் வருமானம் கூடிவிடும்.

பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மைத் துறையின் அலட்சியப் போக்கு காரணமாகத் தரமான விதைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், உண்மை நிலையை அரசின் பார்வைக்குக் கொண்டு செல்லாமல் அனைத்தும் இருப்பதைப் போன்ற ஒரு மாயையை அதிகாரிகள் உருவாக்கி வருகிறார்கள். விவசாயத்துக்கு அடிப் படையாக இருக்கும் விதைகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் போதுதான் தமிழக அரசின் லட்சியமான சாகுபடி பரப்பு இருமடங்காவது சாத்தியமாகும்.

விதை
விதை

இதுதொடர்பாகத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விதைகள் மைய இயக்குநர் மற்றும் சிறப்பு அதிகாரி சுந்தரேஸ்வரனிடம் பேசினோம். “விதைகள் தட்டுப்பாடு என்பது பொய்யான தகவல். அந்தந்தப் பகுதிகளுக்கான தேவைகளைப் பொறுத்து, விதைகளை உருவாக்கிக் கொடுக்கிறோம். வேளாண் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, எங்களுக்குக் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம் என்று மூன்று பணிகள் உள்ளன. விதை உற்பத்தி என்பதைக் கூடுதலாகச் செய்து வருகிறோம். பல்கலைக்கழகத்தில் உருவாக்கும் விதைகள், உழவர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் அதைச் செய்து வருகிறோம்.

இதுவரை விதைகள் கிடைக்கவில்லை என்று எந்தப் புகாரும் வரவில்லை. கடந்த ஆண்டு 15,000 குவிண்டால் விதை உற்பத்தி செய்து கொடுத்துள்ளோம். தற்போது 1,500 குவிண்டால் விதை கைவசம் உள்ளது. பல்கலைக்கழக இணையதளத்திலேயே, விதை கையிருப்பு தொடர்பான விவரங்களைப் பதிவிடுகிறோம். அதிலேயே முகவரி, தொடர்பு எண் போன்ற அனைத்து விவரங்களும் குறிப்பிடுகிறோம். மாதத்துக்கு ஒருமுறை அதை ‘அப்டேட்’ செய்து வருகிறோம்.

சில நேரங்களில் விதைகள் சற்று விரைவாக விற்றுவிடும். அந்தச் சமயங்களில் விதைகள் கிடைக்காமல் போகலாம். அது மிகவும் அரிது. புதிதாக ஒரு ரகத்தை உருவாக்க, ஆராய்ச்சியாளர்கள் 10 ஆண்டுகள் வரை பணியாற்ற வேண்டும். எனவே, ஒவ்வோர் ஆண்டும் தேவையைப் பொறுத்துதான் புதிய ரகங்களைக் கண்டுபிடிப்போம்.

அந்தவகையில் ஆண்டுக்குப் புதிதாக 10 ரகங்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். விவசாயிகளுக்குத் தேவையற்ற ரகங்களை அறிமுகப்படுத்தி பயனில்லை. கடந்த ஆண்டு தோட்டக்கலை மூலம் ஏராள மான புதிய ரகங்களை வெளியிட்டுள்ளோம்” என்றார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் இது தொடர்பாகப் பேசுவதற்கு முயற்சி செய்தோம். நீண்ட முயற்சிக்குப் பிறகு, நம்மிடம் பேசிய அமைச்சரின் தனிச் செயலாளர் கணேசன், “அமைச்சர் மீட்டிங்ல இருக்காரு” என்றவரிடம் விதைத் தட்டுப்பாடு விஷயத்தைச் சொன்னோம். அதைக் கேட்டுக்கொண்டவர், “நான் அமைச்சர்கிட்ட சொல்றேன்’’ என்றபடி தொடர்பைத் துண்டித்தார். அமைச்சர் தரப்பில் விளக்கம் கொடுத்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

ஈசன்
ஈசன்

புகார் கொடுத்திருக்கிறோம்!

விதைகள் தட்டுப்பாடு பற்றிப் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனரும் வழக்கறிஞருமான ஈசன், “தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துல விதைகள் தொடர்பா ஆராய்ச்சி நடக்குது. ஆனா, அதோட முடிவுகள் தனியாருக்கு போயிடுறதா சந்தேகப்படுறோம். அதிக மகசூல் கொடுக்குற காய்கறி விதைகளைத் தனியார் நிறுவனங்கள் 6 மாசத்துக்கு ஒண்ணை அறிமுகப்படுத்திகிட்டே இருக்கு. ஆனா, பல்கலைக்கழகமும், அதோட ஆராய்ச்சி நிலையங்களும் அப்பப்ப கடமைக்காகச் சிலதை அறிமுகப்படுத்துறாங்க. தனியார் விதை நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கும் மறைமுக தொடர்பு இருக்கு. பல்கலைக்கழகத்துப் பணிக்குப் பிறகு, சில முன்னாள் துணை வேந்தர்கள் பல விஞ்ஞானிகள் தனியார் நிறுவனங்கள்ல உடனே பெரிய பதவிகள்ல போய் உக்காந்திடுறாங்க. இதெல்லாம் எங்க சந்தேகத்தை உறுதிபடுத்துது.

விதைகள் கைவசம் இல்லாத காரணத்தால பல்கலைக்கழகம் தனியார்கிட்ட விதையை வாங்கி, பல்கலைக்கழகம் பேர்ல விற்பனை பண்றாங்க. போலி விதைகளைப் பல்கலைக்கழகமே விற்பனை செஞ்சிருக்குன்னு இதுவரைக்கும் 200 க்கும் மேற்பட்ட புகார்களைக் கொடுத்திருக்கோம். வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தியையும் நேர்ல சந்திச்சு புகார் கொடுத்திருக்கோம். விதைகள் விஷயத்துல அரசு தனிக்கவனம் செலுத்தி, அந்தந்த பருவத்துக்குத் தரமான விதைகள் கிடைக்கிறதை உறுதிப்படுத்தணும்’’ என்றார்.