Published:Updated:

``கிராம சபைக் கூட்டங்களில் மின் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்!''

மின் வாரியம் | மின் திருத்தச் சட்டம்

இந்த மின் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தினம் தினம் ஏறும் பெட்ரோல், டீசல் விலை, தங்கம் வெள்ளி விலை போன்று மாதம்தோறும் மின் கட்டணமும் உயர வாய்ப்புள்ளது.

``கிராம சபைக் கூட்டங்களில் மின் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்!''

இந்த மின் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தினம் தினம் ஏறும் பெட்ரோல், டீசல் விலை, தங்கம் வெள்ளி விலை போன்று மாதம்தோறும் மின் கட்டணமும் உயர வாய்ப்புள்ளது.

Published:Updated:
மின் வாரியம் | மின் திருத்தச் சட்டம்

உழவர்கள், நெசவாளர்கள், விளிம்புநிலை வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோர்கள் நலனுக்கெதிராக, மின் திருத்தச் சட்டம் 2020 உள்ளது எனத் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிராம சபைக் கூட்டங்களில் அதற்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றிட தமிழக முதல்வருக்கு கோரிக்கையும் விடுத்து கடிதம் எழுதியுள்ளனர்.

சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

இது குறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலர், சுவாமிமலை சுந்தர விமல்நாதனிடம் பேசினோம்.

``இந்தியாவிலேயே முதன்முதலில் வேளாண் மின் மானியம் வேண்டும் என்று போராடியது தமிழ்நாடுதான். எல்லோரும்  வேளாண்மைக்கு இலவச மின்சாரம் என்கிறார்கள் அது பொருத்தமான வார்த்தைகளே கிடையாது. வேளாண் உற்பத்திக்கான மின் மானியம் அது. வேளாண் உற்பத்திக்கான மானியம் வேண்டுமென்பதற்காக 1970-ல் இருந்து 1984 வரைக்கும் விவசாயிகள் பலகட்டங்களில் கடுமையான போராட்டங்கள் நடத்தினார்கள்.

இந்தியாவிலேயே முதல்முறையாக நாராயண சுவாமி நாயுடு தலைமையில் பெரும்திரளான விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி, 20 மணி நேரம் கட்டணமில்லாத வேளாண் உற்பத்திக்கான மின் மானியத்தைப் பெற்றனர். நாட்டிலேயே முதன்முறையாக மின் மானியத்தைப் பெற்றுத் தந்த மாநிலமும் தமிழ்நாடுதான்.

வேளாண்
வேளாண்

அப்போது 1 யூனிட்டுக்கு 9 காசாக இருந்ததை 11 காசாக கட்டணம் உயர்த்திய பிறகுதான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் போராட்டத்தில் 59 விவசாயிகளின் உயிர்களைப் பலிகொடுத்து பெற்ற உரிமைதான் வேளாண்மைக்கான கட்டணமில்லா மின்சாரம். இதை இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாடு வழங்கிய பின்புதான் வடமாநிலங்கள் மற்றும் மேற்குப் பகுதி மற்றும் கிழக்குப் பகுதி மாநிலங்கள் எல்லாம் பெற்றன. ஆனால், இன்றைக்கு மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின் திருத்தச் சட்டம் 2020 மூலம் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாக இருக்கிறார்கள்.

மின் உற்பத்திகளில் தனியார் பெருநிறுவனங்கள் ஏராளமாக முதலீடுகள் செய்ய தயாராக உள்ளன. இந்தியாவின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. எல்லாம் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றுவிட்டார்கள். எல்லாவற்றையும் பெருநிறுவனங்கள் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தியா முழுவதும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளால் ஒன்று மின்சாரம். இதையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பெருநிறுவனங்கள் திட்டமிட்டு ஒரு மறைமுகமான ஒப்பந்தத்தை மத்திய அரசில் இருக்கின்ற சிலரோடு செய்து வருகிறார்கள். அதன் விளைவுதான் மின் திருத்த சட்டம் 2020. இதன் பெயரால் எல்லா மாநிலங்களிலும் இருக்கின்ற மின்சாரத்தைப் பெருநிறுவனங்களே கைப்பற்றி கையிலெடுத்துக்கொள்வது. இத்தகைய செயலைச் செய்வதற்காகத்தான் மின் திருத்தச் சட்டம் 2020-ஐ கொண்டு வந்தார்கள்.

மின் திருத்த சட்ட  மசோதா
மின் திருத்த சட்ட மசோதா

இதை ஏன் இன்னும் செயல்படுத்த முடியவில்லை என்றால் அதற்கு மிக அடிப்படையான காரணம் டெல்லியின் எல்லைகளில் 380 நாள்கள் லட்சக்கணக்கான வட இந்திய விவசாயிகள் கடும்போராட்டத்தை நடத்தியபோது, மின் திருத்தச் சட்டத்தையும் கடுமையாக எதிர்த்தார்கள். வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற்ற அரசு, மின் திருத்த சட்டத்தை  அப்படியே கிடப்பில் வைத்துவிட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் அதே மசோதாவை விவாதத்துகுக் கொண்டு வந்தது. அடுத்த கூட்டத்திலாவது இந்த மின் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றப் போவதாகச் சொல்கிறார்கள்.

இதன் நோக்கம் என்னவென்றால் மின்துறை பெருநிறுவனங் களின் கட்டுப்பாட்டில் செல்லவிருக்கிறது. இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு மட்டும்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் சாமானிய விளிம்பு நிலை மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிற மின்கட்டண சலுகைகள்கூட பறிபோக இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த அனைத்து மக்களுக்கும் இதனால் கட்டாயம் பாதிப்புகள் ஏற்படும்.

வேளாண் சட்டத்தை விலக்கிக் கொள்கிறோம் எனச் சொன்னபோதே மின் திருத்தச் சட்டத்தையும் விலக்கிக் கொள்வதாக மத்திய அரசு சொல்லவில்லை. மின் திருத்த சட்டத்தை ஒத்திதான் வைத்தனர். மீண்டும் அதை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்தார்கள் என்றால் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் மின்சாரம் சென்றுவிடும். அப்படிப் போனால் பி.எஸ்.என்.எல் பொதுத்துறை நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்.

மின் திருத்தச் சட்டம்
மின் திருத்தச் சட்டம்

உலகச் சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சியில் இருக்கின்றன. இந்த நேரத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ₹60, ₹70 -க்குள்ளேதான் விற்கப்பட வேண்டும். ஆனால் ₹100 -க்கு மேலேதான் பெட்ரோல், டீசல் விற்கப்படுகின்றன. இது எதனால் என்றால் எண்ணெய் நிறுவனங்களும் பெறு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் இந்த நிலை தொடர்கிறது. மத்திய அரசும் பெருநிறுவனங்களின் கைக்கூலிகளாகவே செயல்படுகிறது.

மின் திருத்தச் சட்டம் கொண்டுவரப்போவது குறித்து பொதுமக்களிடம் இதுவரை கருத்து கேட்டிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஒரு திட்டத்தை அமல் படுத்துவதற்கு முன்பாக, அதன் சாதக பாதகங்கள் என்ன? இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதால் என்னென்ன நன்மைகள் அதனுடைய பயனாளிகளுக்கு நுகர்வோருக்கு கிடைக்கும் என்று இதுவரை வெளிப்படையாக மத்திய அரசில் இருந்து எந்தவோர் அறிவிப்பும் வரவில்லை. மக்கள் விரோதமான இத்தகைய நடவடிக்கையை கடுமையாக எதிர்க்க வேண்டிய பொறுப்பு இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் உண்டு.

இந்த மின் திருத்தச் சட்டத்துக்கு ஏற்கெனவே கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார். அது பாராட்டுக்குரியது இருந்தாலும் கடிதம் எழுதுவது மட்டும் போதுமானதல்ல. அதனால்தான் நாளை அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த தினத்தன்று நடைபெறும் ஒவ்வொரு கிராமசபைக் கூட்டத்திலும் மின் திருத்த சட்டம் 2020-க்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். மின் திருத்த சட்டத்தை எந்தக் காரணம் கொண்டும் மத்திய அரசு கொண்டு வரக்கூடாது. இதனால் இந்தியாவில் இருக்கின்ற விவசாயிகள் மட்டுமன்றி நெசவாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.

இலவச மின்சாரம் | மின் திருத்தச் சட்டம்
இலவச மின்சாரம் | மின் திருத்தச் சட்டம்

இந்த மின் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தினம் தினம் ஏறும் பெட்ரோல், டீசல் விலை, தங்கம் வெள்ளி விலை போன்று மாதம்தோறும் மின் கட்டணமும் உயர வாய்ப்புள்ளது. இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய பொறுப்பு எல்லா மாநிலங்களுக்கும் இருந்தாலும், இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயிகளுக்கு கட்டணமில்லா இலவச மின்சாரம் பெற்றுத் தந்த மாநிலம் தமிழ்நாடு. எனவே, இந்தச் சட்டத்துக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசக்கு இருக்கிறது.

எனவே, அக்டோபர் 2 அன்று நடைபெறவிருக்கிற கிராம சபைக் கூட்டங்களில் மின் திருத்த சட்டம் 2020-ஐ முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாட்டில் உள்ள வேளாண் மக்கள், நுகர்வோர், நெசவாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அதற்கான சிறப்பு தீர்மானத்தை அனைத்து ஊராட்சிகளிலும் முதல் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது" என்றார்.