Published:Updated:

மத்திய மின்சட்டத்தால் விவசாயிகளுக்கு என்னென்ன பாதிப்புகள் நேரும்? ஓர் அலசல்!

விவசாயி
விவசாயி ( M.Aravind )

மத்திய மின்சட்டம், நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், மின்சாரம், மாநில அதிகார பட்டியலில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும்.

விவசாயத்துக்கு உயிர் கொடுப்பது தண்ணீர். ஆனால், அந்தத் தண்ணீரை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது உயிரையே கொடுக்க வேண்டியுள்ளது. ஆற்றுநீர் பாசனத்துக்கு வழியில்லாத விவசாயிகள் நிலத்தடிநீரைத்தான் முழுமையாக நம்பியிருக்கிறார்கள். பல நூறு அடி ஆழத்தில் உள்ள தண்ணீரை மேலே கொண்டு வந்து பயிர்களுக்கு பாசனம் செய்ய மின்சாரம் இன்றியமையாததாக உள்ளது. தங்களது விளைப்பொருள்களுக்கு லாபகரமான, நிலையான விலை கிடைக்காததால், கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கும் விவசாயிகள், மின்சாரத்துக்கு என்று தனியாக ஒரு பெரும் தொகையைச் செலவு செய்வதென்பது, கனவிலும்கூட நினைத்துப் பார்க்க முடியாதது. இதனால்தான் விவசாய மின்சாரத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம், தங்களது உயிரையே கொடுத்து போராடத் துணிகிறார்கள்.

அரசாங்கத்தால், நீர் பாசனத்துக்கு வழி செய்து கொடுக்க முடியவில்லை. விவசாயத்துக்கு மின்சாரம் வழங்குவது அரசின் கடமை அல்லவா? வேளாண் மின்சாரம் என்பது தங்களது வாழ்வாதார உரிமை என வரலாறு நெடுகிலும் வீறுகொண்டு எழுகிறார்கள் நம் உழவர்கள்.

விவசாயிகள்
விவசாயிகள்

1970-ம் ஆண்டு விவசாயத்துக்கான மின்சார கட்டணம், யூனிட்டுக்கு 6 பைசா வசூலிக்கப்பட்டது. அப்போதைய தமிழக அரசு, அதை 8 பைசாவாக உயர்த்தியது. போராட்டம் வெடித்தது. கோவை மாவட்டம் பெருமாநல்லூரைச் சேர்ந்த மாரப்ப கவுண்டர், ராமசாமி கவுண்டர், ஆயிக்கவுண்டர் ஆகிய மூன்று உழவர் போராளிகள் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள். கோவை மாநகரம் எங்கும் ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் விவசாயிகள் படை திரண்டு வீதிகளிலேயே படுத்துறங்கினார்கள். அரசு இறங்கி வந்தது. பேச்சுவார்த்தையில் ஒரு பைசா மட்டும் கட்டணம் குறைக்கப்பட்டது.

'புதிய மின் கட்டணத்தைச் செலுத்தவில்லையென்றால் பீஸ் கேரியர் பிடுங்கப்படும்' என அரசு அறிவித்தது. 'பீஸ் கட்டையை எடுத்தால், பட்டையை எடுப்போம்' என விவசாயிகள் முழுங்கினார்கள். தமிழக விவசாயிகள் சங்கம் இப்போராட்டத்தை முன்னெடுத்தது. 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

1972 -ம் ஆண்டு மீண்டும், விவசாய மின்சாரத்தில் கை வைத்தது அப்போதைய தி.மு.க அரசு. வேளாண் மின்சாரக் கட்டணம், ஒரு யூனிட்டுக்கு 12 பைசாவாக உயர்த்தப்பட்டது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டக்களத்தில் குதித்தார்கள். 'புதிய மின் கட்டணத்தைச் செலுத்தவில்லையென்றால் பீஸ் கேரியர் பிடுங்கப்படும்' என அரசு அறிவித்தது. 'பீஸ் கட்டையை எடுத்தால், பட்டையை எடுப்போம்' என விவசாயிகள் முழுங்கினார்கள். தமிழக விவசாயிகள் சங்கம் இப்போராட்டத்தை முன்னெடுத்தது. 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் போராட்டத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போராட்டங்களின் நீட்சியாகத்தான், 1984-ம் ஆண்டு 'சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் இலவச மின்சாரம்' என அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அறிவித்தார். 1989-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அப்போதைய தி.மு.க அரசு, அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் என அறிவித்தது. அப்போதிருந்து இலவச மின்சாரம் தொடர்கிறது. ஆனால், இது அவ்வப்போது மத்திய அரசின் கண்களை உறுத்திக்கொண்டேதான் இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசின் நிர்பந்தத்தால், தமிழக அரசு, வேளாண் மின்சாரத்தைப் பறிக்கக்கூடிய அபாயம் உருவாகி, விவசாயிகளின் கடும் எதிர்பார்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டது.

விவசாய போர்வெல்
விவசாய போர்வெல்
M.Aravind
மின்சார திருத்த சட்டம் வந்தால், நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், மின்சாரம், மாநில அதிகார பட்டியலில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது.

வேளாண் மின்சார உரிமைக்காக, ஏற்கெனவே உழவர் வர்க்கம், சிந்திய ரத்தக்கறைகளே இன்னும் அழியவில்லை. மீண்டும் தங்களது வாழ்வுரிமையில் கை வைக்க நமது ஆட்சியாளர்கள் துடிக்கிறார்களே என உழவர் பெருமக்கள் கொந்தளிக்கிறார்கள். தற்போது மத்திய அரசு கொண்டு வரும் மின்சார திருத்த சட்டமானது, நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், மின்சாரம், மாநில அதிகார பட்டியலில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது. இச்சட்டத்திருத்தத்துக்கு, அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

விவசாயி
விவசாயி
M.Aravind

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாலர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன், "விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம், இலவசமல்ல. நாங்கள் உற்பத்தி செய்யும் விளைப்பொருள்களுக்கு மத்திய மாநில அரசால் லாபகரமான விலையைக் கொடுக்க முடியவில்லை. அதற்கு ஈடாகத்தான், தமிழக அரசு 100 சதவிகித மானியத்தில் விவசாயிகளின் போர்வெல்களுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது. ஆனால், இதை இலவச மின்சாரம் என்று சொல்லி எங்களை கொச்சைப்படுத்துகிறார்கள். இந்த மானிய விலை மின்சாரம் கூட, எங்களுக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், துப்பாக்கிச்சூட்டில் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அரசின் கடுமையான அடக்குமுறைகளுக்கு இடையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், போராடி இதைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இதைப் பறிக்கத் துடிக்கிறது மத்திய அரசு. இதற்காகத்தான், மின்சாரத் திருத்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களே பயன் அடையும். மின் கட்டண சுமையால் விவசாயிகள், விவசாயத்தைவிட்டு வெளியேறுவார்கள். மிச்சமாகும் மின்சாரத்தை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் வாரி வழங்குவார்கள். மானிய மின்சாரத்தைத் தக்க வைக்க, தமிழ்நாடு முழுவதூம் உள்ள விவசாயிகள், கடுமையான போராட்டங்களை நடத்த ஆயத்தமாகி வருகிறோம்” என்றார்.

ஆற்றுப் பாசனத்தில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களுக்கும் போர்வெல் பாசனத்தில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களுக்கும் ஒரே விலைதான் வழங்கப்படுகிறது. இந்நிலையில், போர்வெல் விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் வந்தால், கடுமையான நஷ்டத்தைச் சந்திப்பார்கள்.
கு.செல்லமுத்து

உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து, ``கொங்கு மண்டல விவசாயிகளுக்கு ஆற்றுப்பாசனத்துக்கு வழியில்லை. 1500 அடி, 2000 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து பாசனம் செய்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் விவசாய போர்வெல்களில் பெரும்பாலானவை கொங்கு மண்டலத்தில்தான் உள்ளது. மின்சாரத்தை சார்ந்துதான் இங்கு விவசாயமே நடைபெறுகிறது. இதனால்தான் வேளாண் மின்சாரத்துக்கான உரிமை போராட்டங்கள், டெல்டா மாவட்டங்களைவிட இங்கு பெரும் கொந்தளிப்போடு நடந்தது. ஆற்றுப்பாசனத்தில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களுக்கும், போர்வெல் பாசனத்தில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களுக்கும் ஒரே விலைதான் வழங்கப்படுகிறது. இந்நிலையில், போர்வெல் விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் வந்தால், கடுமையான நஷ்டத்தைச் சந்திப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள போர்வெல் விவசாயிகள் அனைவருமே விவசாயத்தைவிட்டு வெளியேறுவார்கள்” எனக் கவலையுடன் தெரிவித்தார்.

மூன்று மடங்கு, நான்கு மடங்கு மின் கட்டணப் புகார்கள்... உண்மைநிலைதான் என்ன?
16.77 லட்சம்
தமிழகத்தில் போர்வெல் பாசனம்!
மின்சாரத்தில் மத்திய அரசு தலையிடுவது சட்ட விரோதமானது. இதே நிலை தொடர்ந்தால், விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பை, மத்திய அரசு சந்திக்க வேண்டியதிருக்கும்.
ஆறுபாதி கல்யாணம்

"லஞ்சம், இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கக்கூடிய ஒரே மானியம், மின்சார மானியம்தான். இதுவும் பறிக்கப்பட்டால், நாட்டின் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும்" என்கிறார் தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஆறுபாதி கல்யாணம்.

விவசாய போல்வெல்
விவசாய போல்வெல்

``தமிழ்நாட்டின் மொத்த நிலபரப்பு 130 லட்சம் ஹெக்டேர். இதில் நிகர சாகுபடி பரப்பு 46.38 லட்சம் ஹெக்டேர். இதில் நீர்பாசனம் உறுதி செய்யப்பட்ட பரப்பு என்பது 26.26 லட்சம் ஹெக்டேர். மீதியுள்ளவை மானாவாரி நிலங்கள். நீர்பாசனம் உறுதி செய்யப்பட்ட 26.26 லட்சம் ஹெக்டேரில் ஆறு, ஏரி, கண்மாய், போர்வெல் பாசனம் அனைத்தும் அடங்கும். இதில் 16.77 லட்சம் ஹெக்டேர் போர்வெல் பாசனம். அதாவது, 64 சதவிகிதம் போர்வெல்லை நம்பியுள்ளது. இந்நிலையில் மின்சாரம் நிறுத்தப்பட்டால், வேளாண் உற்பத்தி கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். போர்வெல்லை நம்பி, நெல், வாழை, கரும்பு, காய்கறி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக உணவு உற்பத்தியையும் கைவிடுவார்கள். இதனால் நாட்டு மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். விவசாயத்தைக் கைவிடும் போர்வெல் விவசாயிகள், தங்களது குடும்பத்துக்கான உணவை மட்டும் உற்பத்தி செய்துகொள்வார்கள்.

விவசாயிகளுக்கு இயற்கையான நீர்பாசனத்தை வழங்குவதென்பது ஓர் அரசின் தார்மீக பொறுப்பு. இதை அரசால் செய்து கொடுக்க முடியவில்லை. விவசாயிகள் தங்களது சொந்த செலவில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து போர்வெல் அமைக்கிறார்கள். தண்ணீரை மேலே கொண்டு வருவதற்கான செலவை மட்டுமாவது அரசாங்கம் ஏற்றுக்கொள்வதுதானே நியாயம். விவசாயிகள் தண்ணீரை விரயம் செய்கிறார்கள் என்ற ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. ஒருசில விவசாயிகள் வேண்டுமானால் அவ்வாறு நடந்துகொள்ள வாய்ப்புள்ளது. இதை ஒழுங்குப்படுத்த வேண்டியது அரசின் கடமை. தண்ணீரையும் மின்சாரத்தையும் மிச்சப்படுத்த, நெல் விவசாயிகளுக்கு குழாய் பாசனத்தையும், தோட்டக்கலை பயிர்களுக்கு, சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்தையும் அரசு வழங்க வேண்டும். விவசாயமும், இது சார்ந்த நீர்பாசனமும் மாநில பட்டியலில் உள்ளது. இது தொடர்பான மின்சாரத்தில் மத்திய அரசு தலையிடுவது சட்ட விரோதமானது. இதே நிலை தொடர்ந்தால், விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பை, மத்திய அரசு சந்திக்க வேண்டியதிருக்கும். மத்திய அரசின் நெருக்கடியால், 2001-06 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், விவசாய மின்சாரத்துக்கான மானியம், மணியார்டர் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. விவசாயிகளின் எதிர்ப்பால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போதும் அதே போன்று சூழ்ச்சி உருவாகியுள்ளது.

`இலவச மின்சாரமல்ல.. விவசாய மானியம்!’ -மின்சார திருத்த சட்டத்திற்கு எதிராகக் கொந்தளிக்கும் விவசாயிகள்

விவசாயிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க, இலவச மின்சாரத்துக்கு மாற்றாக, இதற்கான மானியம் விவசாயிகளின் வங்கிக் கனக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சொல்கிறது. இது ஏமாற்று வேலை. இதை நாங்கள் நம்பத் தயாராக இல்லை. இது ஒரு கண்துடைப்பு. மானியம் என்ற பெயரில் குறைவான தொகைதான் தருவார்கள். ஆனால், மின் கட்டணமோ பல மடங்கு செலுத்த வேண்டியதிருக்கும். காலப்போக்கில் அந்தச் சொற்ப தொகை மானியமும் நிறுத்தப்படும். விவசாயிகள் ஏற்கெனவே பல்வேறு விதமான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள். வேளாண் உற்பத்திக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் வந்தால்... கடன் சுமையால் விவசாயிகளின் தற்கொலை மரணங்கள் அதிகரிக்கும்” எனக் கவலையுடன் எச்சரிக்கிறார்.

விவசாயிகள் வாழ்க்கை இருண்டு போகாமல் இருக்க, மத்திய அரசு ஒதுங்கி நிற்க வேண்டும். வேளாண் உற்பத்தி மின்சாரம் நிலைபெற வேண்டும். தமிழக அரசு, இதற்கு நிரந்த தீர்வு காண, சட்ட ரீதியான பாதுகாப்பை உருவாக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு