Published:Updated:

வெங்காய விலை தாறுமாறு... காரணம் என்ன?

Onion
Onion

அரசியலானாலும் சரி... சமையலானாலும் சரி... தமிழகத்தில் வெங்காயத்தை மறக்கவே முடியாது! நாடுமுழுவதுமே அப்படித்தான். தீபாவளி நெருங்கிவரும் நிலையில், கடந்த சில நாள்களாக வெங்காயத்தின் விலை தாறுமாறாக எகிறிவரும் நடுத்தர, ஏழை எளிய மக்களைக் கவலையடையச் செய்துள்ளது.

சாம்பார், காரக்குழம்பு, கூட்டு, பொரியல் என முக்கிய உணவுகளை வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாது. அப்படியே வெங்காயம் இல்லாமல் சமைத்தாலும் அது ருசியாக இருக்காது. அந்தளவுக்கு சமையலுக்கு முக்கியத்துவம் பெற்ற வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதைக் கண்டு குடும்பத் தலைவிகள் அலறுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்புவரை, சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 20 ரூபாய், 22 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது. இப்போது, தமிழகத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.70 முதல் ரூ.80 வரை எகிறியுள்ளது. டெல்லி உள்ளிட்ட பல பெருநகரங்களிலும் இதேபோல வெங்காய விலை உயர்ந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதனால், பல உணவகங்களின் மெனுவில் வெங்காயச் சட்னியைத் தவிர்க்கின்றனர்.

Onion
Onion

வெங்காய விலை உயர்வுக்கு மழைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்தான் வெங்காய உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. இந்த மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த கனமழையால் வெங்காயப் பயிர்கள் நாசமாகி, உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வெங்காய விலை உயர்வுக்கு வேறொரு காரணமும் சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் மொத்த வெங்காய உற்பத்தியில் 30 சதவிகிதம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் நடக்கிறது. தெற்காசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான `லசல்கான்’ நாசிக்கில் உள்ளது.

Onion
Onion

அங்குதான், இந்தியாவின் வெங்காய வர்த்தகத்தில் 70 சதவிகிதம் நடக்கிறது. அங்கிருந்துதான், எல்லா மாநிலங்களுக்கும் வெங்காயம் சப்ளையாகிறது. இந்தியாவின் `வெங்காயத் தலைநகர்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு வெங்காயத்தில் புரளும் நாசிக்கில், கடந்த வாரம் ரூ.33 என இருந்த ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, வார இறுதியில் ரூ.45 என அதிகரித்தது. அதாவது, மொத்த விலை. இந்த விலை உயர்வானது, 2015-ம் ஆண்டுக்குப் பிந்தைய வெங்காய விலை உயர்வின் உச்சம் என்கிறார்கள் காய்கறி வியாபாரிகள்.

2015-ம் ஆண்டின் வெங்காய விலை உயர்வுக்கு கனமழையே காரணம் என்று சொல்லப்பட்டது. அது மட்டுமல்ல, அதற்கு முன்பாக 2013-லும் வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டது. அப்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. வேளாண்துறை அமைச்சராக சரத்பவார் இருந்தார். கனமழை காரணமாக வெங்காயப் பயிர்கள் அழுகிவிட்டன என்றும், அதுதான் விலையேற்றத்துக்குக் காரணம் என்றும் சரத்பவார் கூறினார். அதே நேரத்தில், பயிர்ச் சேதம் மட்டுமல்ல, பதுக்கலும் வெங்காய விலைக்குக் காரணம் என்றார், அப்போதைய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா. அதில் உண்மை இல்லாமல் இல்லை.

Vikatan

இந்த முறை, நாசிக் வெங்காயச் சந்தையில் ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.2,000 என விலை உயர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இந்தியாவில் வெங்காய விலை உயரும்போதெல்லாம், அதன் பின்னணியில் லசல்கான் வெங்காயச் சந்தையை ஆட்டிப்படைக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் வர்த்தகர்கள் சிலர் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு.

லசல்கான் மார்க்கெட்டில் வெங்காயம் ஏலம் விடப்படும்போது, அதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்றும் அதற்கு உரிமம் அவசியமில்லை என்றும் சில விதிகள் உள்ளன. ஆனால், லசல்கானைப் பொறுத்தளவில் குறிப்பிட்ட சில வர்த்தகர்களைத் தவிர மற்ற வர்த்தகர்களோ, விவசாயிகளோ ஏலத்தில் பங்கேற்க முடியாது. பெரும் வர்த்தகர்கள் தங்கள் உறவினர்களின் பெயர்களில் உரிமங்களை வாங்கி வைத்துக்கொண்டு, மற்றவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. ஏலம் எடுப்பதும், விலை நிர்ணயம் செய்வது என அனைத்தையும் தீர்மானிப்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

Onion
Onion

தற்போதைய வெங்காய விலை உயர்வுக்கு கனமழையே காரணம் என்று சொல்லப்பட்டாலும், பதுக்கலும், வர்த்தக சூதாடிகளும் இதன் பின்னால் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

தற்போது, குடோன்களில் இருக்கும் வெங்காயம் மட்டுமே சந்தைகளுக்கு வந்துகொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. தற்போதைய நெருக்கடியைச் சமாளிப்பதற்கு, மத்திய அரசு தன் இருப்பில் உள்ள 56,000 டன் வெங்காயத்தை மாநிலங்களுக்கு அளிப்பதாக அறிவித்தது. மத்திய அரசின் இருப்பிலிருந்து சுமார் 16,000 டன் வெங்காயம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

2,000 டன் வரையிலான வெங்காய இறக்குமதிக்கு வரி ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது, வெங்காயத்தை வியாபாரிகள் இருப்பு வைப்பதற்கான உச்ச வரம்பு நிர்ணயிப்பது குறித்து யோசித்துவருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பல்வேறு நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அரசின் நடவடிக்கைகள் எந்தளவுக்கு பலனளிக்கும் என்பது தெரியவில்லை.

Onion
Onion

தீபாவளிக்கு முன்பாகவே வெங்காய விலையை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனிடையே அக்டோபரில் நடைபெறும் ஹரியானா, மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் மனதை இந்த விலை உயர்வு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என வேட்பாளர்களும், அரசியல் நோக்கர்களும் பேசி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு