Published:Updated:

வெங்காயம் 70%, உருளைக்கிழங்கு 59%, தக்காளி 26% விற்பனை சரிவு; முடங்கிய கோயம்பேடு சந்தை... தவிக்கும் விவசாயிகள்!

கோயம்பேடு சந்தை
News
கோயம்பேடு சந்தை

"கோயம்பேட்டுக்கு வழக்கமாக, சுமார் 500 காய்கறி லாரிகள் வந்துபோய்க்கொண்டிருந்த நிலை மாறி, சுமார் 180-200 லாரிகளாகக் குறைந்திருக்கிறது. சராசரி விற்பனையைவிட 60% குறைவான விற்பனையே நடைபெறுகிறது."

காய்கறி விற்பனை வளாகத்துக்கு முன்பாகக் குவிந்திருக்கும் காய்கறி ஏற்றும் வாகனங்கள், காய்கறி மூட்டைகளைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள், விலை விசாரித்து வாங்கிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களென எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கோயம்பேடு காய்கறிச்சந்தை, கடந்த ஒரு மாதமாக முடங்கிக்கிடக்கிறது. கோயம்பேடு சந்தையின் முன்பகுதியில் காவல்துறையினரின் சோதனைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. கொரோனா காரணமாக ஒருவித நெருக்கடி நிலையில் சந்தை நடந்துகொண்டிருப்பது தெரிகிறது.

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

விடிய விடியப் பரபரப்பாக இயங்கி, மாலைவரை பரபரப்பு குறையாமல் இயங்கிவந்த கோயம்பேடு, தற்போது காலை ஆறு மணிக்குமேலே வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் இல்லாமல் வெறிச்சோடுகிறது. இந்தியா முழுக்க ஊரடங்கு தொடங்கியதுமே கோயம்பேடு காய்கறி வியாபாரம் அடிவாங்கத்தொடங்கியது. வியாபாரத்துக்கான நேரத்தைக் குறைத்ததால் விற்பனை அளவும் குறைந்தது. அழுகும் பொருள்களான காய்கறிகளை அளவுக்கதிகமாக இறக்கினால் குறைந்த நேரத்தில் அவற்றை விற்பனை செய்வது கடினம். கூட்டம் சேரக்கூடாது என்ற காவல்துறையின் கட்டுப்பாடுகளும் இருப்பதால் விற்பனை வெகுவாகக் குறைந்துவிட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதன்முறையாக இந்தியா முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 21 நாள்களில், வட மாநிலங்களில் உள்ள கோதுமை மண்டிகளில் விற்பனையான மொத்த கோதுமை அளவு 1.32 லட்சம் டன்களாகும். 2019ம் ஆண்டு, இதே 21 நாள் காலகட்டத்தில் விற்பனையான கோதுமையோடு ஒப்பிட்டால், வெறும் 6% அளவுக்குத்தான் விற்பனை நடைபெற்றுள்ளது. இதேபோல, 2019ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், விற்பனைக்கு வந்த வெங்காயம் 70% அளவுக்குக் குறைந்துள்ளது. உருளைக்கிழங்கு விற்பனை 59 சதவிகிதம் குறைந்துள்ளது, தக்காளி விற்பனை 26 சதவிகிதமும், காளி ப்ளவர் 11 சதவிகிதமும் விற்பனை குறைந்துள்ளது.

கோயம்பேடு காய்கறி விலை விவரம்
கோயம்பேடு காய்கறி விலை விவரம்
vikatan

காய்கறிகள், தானியங்களின் விற்பனை குறைவுக்கு முக்கிய காரணம், அவை விளைநிலத்திலிருந்து அறுவடையாகி, விற்பனைக்கூடத்துக்கு வந்து சேர்வதேயில்லை. காய்கறிகள் விளையும் இடத்தில் அவற்றைப் பறிப்பதற்கான விவசாயத்தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. கொரோனாவுக்கான ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா பரவல் பயன் காரணமாக யாரும் வயல் வேலைக்கு வருவதில்லை. எனவே விளைந்த காய்கறிகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடுகிறார்கள். இந்த நிலை, வட இந்தியா மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவும்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில்கூட ஒரு தமிழக விவசாயி, கர்நாடக எல்லைப்பகுதியில் பயிரிட்டிருந்த காளி ப்ளவர் பயிரை அறுவடை செய்ய வழியில்லையென்றும், யாராவது வந்து, குறைந்த விலைக்கு அறுத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று வேதனையோடு ட்வீட் செய்திருந்தார். இதேபோல தமிழகத்தில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள், வாழைத்தாரை அறுப்பதற்கு வழியின்றி, அறுத்தாலும் விற்கமுடியாமல் அப்படியே விட்டுவைத்து, அழுகி வீணாகிப்போகும் சூழல் நிலவுகிறது.

வாழைத்தோட்ட விவசாயி ஆர்.பழனிச்சாமி
வாழைத்தோட்ட விவசாயி ஆர்.பழனிச்சாமி

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகாவிலுள்ள கங்காநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வாழைத்தோட்ட விவசாயி ஆர்.பழனிச்சாமியின் அனுபவம் இதேபோன்றதுதான். இவரது 4 ஏக்கர் பரப்பளவுள்ள வாழைத்தோட்டத்தில் மொத்தம் 3,600 மரங்கள் உள்ளன. அவற்றில் காய்த்துள்ள வாழைத்தார்களில் 1,300 தார்களை மட்டும் விற்பனை செய்வதற்காக, ஏப்ரல் 10 தேதி விலை பேசியிருக்கிறார். வாழைத்தார் ஒன்றுக்கு 440 ரூபாய் தருவதாக ஒப்பந்தம் செய்து இவரது தோட்டத்திற்கு வந்து வாங்கிச்சென்றுள்ளனர்.

வாழைத்தார்களையும் கொடுத்து, கூடுதலாகப் பணமும் கேட்டதால் பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். அடுத்து, மிச்சமுள்ள வாழைத்தார்களையாவது வெட்டி விற்றாக வேண்டுமே என்ற எண்ணத்தில், வாட்ஸ் அப் மூலமாக வாழைத்தார் விற்பனைக்குத் தகவல்களைச் சுற்றவிட்டிருக்கிறார். கோவை விவசாயிகள் சங்கத்தலைவரின் ஆலோசனைப்படி, தனது தோட்டத்தை வீடியோ எடுத்து, சி.எம்.செல்லுக்கு விவரங்களை அனுப்பியிருக்கிறார். அங்கிருந்து தோட்டக்கலைத்துறை அலுவலர்களின்மூலம் இவரைச் சந்தித்து விசாரித்து, விற்பனை செய்வதற்கு உதவியிருக்கிறார்கள். மேலும், வாட்ஸ் அப் செய்தி மூலமாகத் தொடர்புகொண்டவர்களும், தார் ஒன்றுக்கு 70 ரூபாய் என்ற விலையில் சிறுகச்சிறுக வாங்கியிருக்கிறார்கள். அப்படியும்கூட சுமார் 700 வாழைத்தார்கள் அப்படியே அழுகிவிட்டதால், நிலத்திலேயே அவற்றை உரமாகப்போட்டுள்ளனர். மிச்சமுள்ள தார்களில், விற்றதுபோக இன்னமும் 200 தார்கள்வரை மீதம் இருப்பதாகத் தெரிவித்தார்.

அறுவடை செய்யப்படாத வாழைத்தார்கள்
அறுவடை செய்யப்படாத வாழைத்தார்கள்
vikatan

வாழைத்தார் மட்டுமல்லாமல், குடை மிளகாய், கேரட், முள்ளங்கி, பீட்ருட் போன்ற பயிர்களுக்கும் இதே நிலைதான். குடை மிளகாய், கர்நாடகாவிலும், நாக்பூர் பகுதியிலும் அதிகமாக விளையும். பறிப்பதற்கு யாரும் இல்லாததால், தோட்டத்திலேயே அப்படியே விட்டுவிட்டார்கள். ஊட்டி, கர்நாடகா பகுதிகளில் அதிகம் பயிரிடப்படும் கேரட்டுகளையும் பிடுங்குவதற்கு ஆள்கள் இல்லாததால் வீணாகியுள்ளன.

இதுகுறித்து, கோயம்பேடு காய் கனி மலர் வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் சுகுமாரிடம் பேசியபோது, "கோயம்பேட்டுக்கு வழக்கமாக, சுமார் 500 காய்கறி லாரிகள் வந்துபோய்க்கொண்டிருந்த நிலை மாறி, சுமார் 180-200 லாரிகளாகக் குறைந்திருக்கிறது. சராசரி விற்பனையைவிட 60% குறைவான விற்பனையே நடைபெறுகிறது. அறுவடை செய்வதில் இருக்கும் சிக்கல், அறுவடை செய்தவற்றை விற்பனைக்குக் கொண்டுவரும் போக்குவரத்தில் இருக்கும் கெடுபிடிகள் காரணமாகக் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. விற்பனைக்கான நேரமும் குறைக்கப்பட்டிருப்பதால் வியாபாரிகளே குறைந்த அளவு காய்கறிகளைத்தான் விற்பனைக்காக வாங்குகிறார்கள்.

சுகுமார்
சுகுமார்

இதில் இருக்கும் முக்கிய பிரச்னையே, எங்களுக்கு மொத்த விலைக்கு வரக்கூடிய காய்கறி விலையே அதிகமாக இருக்கிறது. அதற்குமேல் லாபம் வைக்க வேண்டுமென்றால் விலையை அதிகரிக்க வேண்டும். ஆனால் விலையை ஏற்றி விற்கக்கூடாதென்று எங்கள் சங்கத்திலிருந்து முடிவெடுத்துள்ளோம். இதன்காரணமாக காய்கறிகள் விற்பனையாகும் விலையில் பெரிய மாற்றத்தைப் பார்க்க முடியாது. வெங்காயத்தைப் பொறுத்தவரை, பெரிய வெங்காயத்தைவிட சின்ன வெங்காயம் விலை அதிகமாக இருப்பதால் அதன் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தக்காளி, கத்திரிக்காய், பீன்ஸ், கேரட் போன்றவற்றின் விலை, கடந்த 3 நாள்களாக முழு ஊரடங்கு காரணமாக உயர்ந்துள்ளது. ஆனால் எங்களைப்போன்ற வியாபாரிகளின் லாபம் குறைந்துள்ளது. சிலநேரம் நஷ்டத்துக்கும் விற்கும் சூழல். விற்பனைக்கான நேரமும் சுருக்கப்பட்டுவிட்டதால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

கோயம்பேட்டைப் பொறுத்தவரை காய்கறிகள் வரத்துக்கு ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் அருகில் உள்ள விவசாய நிலங்களிலிருந்து அதிகம் வருகின்றன. தற்போது போக்குவரத்துக்கு இருக்கும் நெருக்கடியால் அவற்றின் வரவு பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு விற்பனை பாதிக்கப்பட்டாலும்கூட, சென்னை உட்பட தமிழகம் முழுவதும், அந்தந்தப் பகுதிகளில் விளையும் பொருள்களை அந்தந்தப் பகுதிகளிலேயே தெருத்தெருவாக வாகனங்கள் மூலமாக விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. மாட்டு வண்டி, ஆட்டோ, கார்கள் என அனைத்துவகை வாகனங்களும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆட்டோவில் வெங்காய வியாபாரம்
ஆட்டோவில் வெங்காய வியாபாரம்

இதன்மூலம், அந்தக்கால முறைக்கே மீண்டும் திரும்புவதைக் காண முடிகிறது. மாட்டு வண்டிகளில் கீரைக்கட்டுக்களோடு கூவிக்கூவி விற்கும் சிறு விவசாயிகள், நேரடி விற்பனையால் நல்ல லாபமீட்டிய மகிழ்ச்சியில் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் பெரிய அளவிலான விவசாயிகளுக்கு இது சாத்தியமில்லை. விவசாய விளைச்சல்கள் அனைத்துமே உரிய காலத்தில் அறுவடை செய்யப்பட வேண்டியது கட்டாயம். காலம் தவறினால் அனைத்துமே வீணாகிவிடும். எனவே கொரோனா ஊரடங்கு விலக்கப்பட்டு, இயல்பான வாழ்க்கை திரும்பும்போதுதான் விவசாயிகள் முகத்திலும் இயல்பான புன்னகையைக் காணமுடியும்.